Tuesday, July 10, 2018

உலகின் பிரமாண்ட மொபைல் போன் தொழிற்சாலை : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Added : ஜூலை 10, 2018 02:29



புதுடில்லி: உ.பி., மாநிலம், நொய்டாவில் அமைந்துள்ள, உலகின் மிகப் பெரிய, 'மொபைல் போன்' தொழிற்சாலையை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று திறந்து வைத்தார்.கிழக்காசிய நாடான, தென் கொரியாவின் அதிபர், மூன் ஜே - இன், மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். உ.பி., மாநிலம், நொய்டாவில், 35 ஏக்கர் பரப்பளவில், 'சாம்சங்' நிறுவனம், 'மொபைல் போன்' தயாரிப்பு தொழிற்சாலை உருவாக்கி உள்ளது; இது, உலகின் மிகப் பெரிய மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலையாக கருதப்படுகிறது.இந்த தொழிற்சாலையை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே - இன் ஆகியோர், நேற்று துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இருவரும், டில்லியில் இருந்து, நேற்று மாலை, 'மெட்ரோ' ரயில் மூலம், நொய்டாவுக்கு வந்தனர்.துவக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியாவில், 40 கோடி,'ஸ்மார்ட் போன்கள்' பயன்பாட்டில் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன், நம் நாட்டில், இரண்டாக இருந்த மொபைல் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள், தற்போது, 120ஆக உயர்ந்துள்ளன.இங்கு உள்ள நடுத்தர வர்க்க வீடுகளில், நிச்சயம், ஒரு கொரிய நாட்டு தயாரிப்பு பொருட்களை, நாம் பார்த்துவிட முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.மொத்தம் 5,000 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில், ஆண்டுக்கு, 12 கோடி மொபைல் போன்கள் தயாரிக்கப்பட உள்ளன. சாம்சங் நிறுவனம் தயாரிக்கும் மொபைல் போன்களில், 30 சதவீதம், இங்கு தயாரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஜனாதிபதி மாளிகையில், தென் கொரிய அதிபருக்கு, இன்று காலை வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலையில், ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில், தென் கொரிய அதிபர் பங்கேற்கிறார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024