Tuesday, July 17, 2018

வந்தது ஆடி! செல்வோம் அம்மனை நாடி!

Added : ஜூலை 16, 2018 22:43



தட்சிணாயன புண்ணிய காலமான ஆடிமாதம் இன்று தொடங்குகிறது. இந்நாளில் கோயில், முன்னோர் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும். ஆடி அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் (ஜூலை 17,24,31, ஆக.7,14) வெள்ளிக் கிழமைகளில் (ஜூலை 20,27, ஆக.3,10) அம்மன் கோயில்களில் வளைகாப்பு வைபவம் நடைபெறும். பக்தர்கள் வழங்கும் கண்ணாடி வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்வர். இதை அணியும் கன்னியருக்கு திருமணம் கைகூடும். பிள்ளை இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் உண்டாகும். மழை காலத்தின் தொடக்கமான ஆடியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க கிருமி நாசினியான வேம்பு, எலுமிச்சை, எளிதில் ஜீரணமாகும் கூழ் அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். ஆடியில் அம்மனை வழிபடுவோம்.

தவமிருக்கும் கோமதி


திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடக்கும் பெரிய திருவிழா ஆடித்தபசு. அம்பிகை சிவபெருமானிடம், தன் சகோதரனான விஷ்ணுவுடன் சேர்ந்து காட்சி தருமாறு வேண்டினாள். அதற்கு சிவன் பொதிகை மலை புன்னை வனத்தில் தவம் புரியக் கட்டளையிட்டார். அம்பிகை ஊசி முனையில் நின்று தவமியற்ற, ஆடி பவுர்ணமியும் உத்திராட நட்சத்திரத்திரமும் கூடிய நன்னாளில் (ஜூலை 27) சிவபெருமான் 'மாலொரு பாகன்' கோலத்தில் காட்சிஅளித்தார். இந்நாளில் கோமதிஅம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கும். தங்க சப்பரத்தில் வீதிஉலா வரும் அம்மனுக்கு சுவாமி சங்கர நாராயணராக ரிஷப வாகனத்தில் காட்சியளிப்பார். அதன்பின் ஊஞ்சல் உற்ஸவம் நடைபெறும்.

நவசக்தி அர்ச்சனை

ஆடி வெள்ளியன்று (ஜூலை 20,27, ஆக.3,10) வாசலில் கோலமிட்டு, பூஜைஅறையில் குத்து விளக்கேற்றி, நைவேத்யமாக அம்மனுக்கு பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நினைத்தது நிறைவேறும். அன்று சிறுமிகளுக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, குங்குமச் சிமிழ், கண்ணாடி வளையல் அளித்து அவர்களை அம்மனாகப் பாவித்து உணவளிக்க வேண்டும். ஆடி வெள்ளிகளில் மாலை கோயில்களில் விளக்குப் பூஜை நடைபெறும். 108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வர். அப்போது அம்மனுக்கு நவசக்தி அர்ச்சனை செய்வது சிறப்பு. ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒன்பது வகை பூக்களால் ஒன்பது சக்திகளை ஒரே நேரத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை.

கல்வி வளம் தரும் அம்மன்

சக்தி பீடங்களில் ஒன்றான திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் அகிலாண்டேஸ்வரி அருள் பாலிக்கிறாள். இந்த அம்மனின் காதுகளில் உள்ள தோடுகளில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி இங்கு நடத்துகின்றனர். இந்த அம்மன் மாணவியாக இருக்க, சிவபெருமானே குருவாக இருந்து உபதேசம் செய்வதால் மாணவர்கள் வழிபட்டால் கல்வி வளர்ச்சி உண்டாகும்

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...