Thursday, July 26, 2018

தற்காலிக நர்ஸ்களின் ஊதியம் இரு மடங்கு உயர்த்தியது அரசு

Added : ஜூலை 25, 2018 23:07

சென்னை, அரசு தற்காலிக நர்ஸ்களின் ஊதியத்தை 7,700 ரூபாயில் இருந்து 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் ஆகியவற்றில், தற்காலிக நர்ஸ்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஆரம்பத்தில், மாதச் சம்பளமாக 7,700 ரூபாய் வழங்கப்படுகிறது.நிரந்தர நர்ஸ்கள் பணியிடங்கள் காலியாகும்போது, தற்காலிக பணியில் உள்ளோர் நிரந்தர நர்ஸ்களாக பணி அமர்த்தப்படுகின்றனர். இந்த முறை, தமிழகத்தில் மட்டுமே பின்பற்றப்படுகிறது.நிரந்தர நர்ஸ்களுக்கு, காலமுறை ஊதியம் நிர்ணயிக்கப்படும்போது, குறைந்தபட்சம், 36 ஆயிரம் ரூபாய், ஊதியம் வழங்கப்படுகிறது.எனவே, 'தற்காலிக நர்ஸ்களின் பணிகளையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, அவர்கள் ஊதியம் உயர்த்தப்படும்' என, சட்டசபையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.இதன்படி, தற்காலிக நர்ஸ்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை, 7,700 ரூபாயிலிருந்து, 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊதிய உயர்வு, இந்தாண்டு ஏப்., 1 முதல் வழங்கப்படும். மேலும் ஆண்டுதோறும், 500 ரூபாய் ஊதிய உயர்வு அளிக்கப்படும்.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம்,தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டங்களுக்கான தொகையும் செலுத்தப்படும். இதனால், 12 ஆயிரம் நர்ஸ்கள் பயன் அடைவர்.இத்தகவலை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024