Wednesday, July 18, 2018

``பார்க்க வர்றவங்க கைச்செலவுக்குப் பணம் தரமாட்டாங்களான்னு தவிக்கிறேன்!’’ கோமாவில் கணவர், கலங்கும் மனைவி

நவீன் இளங்கோவன்

ரமேஷ் கந்தசாமி

அவரே உலகமா இருந்தேன். அவர் படுத்த படுக்கையாப் போனதுக்கு அப்புறம் குடும்பமே நொடிஞ்சுப் போச்சு.



விபத்தில் அடிபட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக கணவர் கோமாவில் இருக்க, எப்படியாவது அவரைக் காப்பாற்றிவிடும் நம்பிக்கையில் தன் இரண்டு குழந்தைகளுடன் போராடிவருகிறார், ஈரோட்டைச் சேர்ந்த பெண்மணி.

ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், பாலசுப்பிரமணியம். தனியார் துணி நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்த்தவர். 2017 ஏப்ரல் மாதத்தின் ஒருநாள், இளைய மகன் கவினேஷை அழைத்துக்கொண்டு, ஈரோடு அருகேயுள்ள சோலார் பகுதியில் பைக்கில் சென்றார். அப்போது, அதிவேகமாக வந்த கார் ஒன்று இவர்களின் பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட பாலசுப்பிரமணியம், பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்துவிட்டார். அதிர்ஷ்டவசமாக, கவினேஷுக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.






இதோ... அந்தச் சம்பவம் நடந்து ஓராண்டு கடந்துவிட்டது. அன்று சுயநினைவு இழந்து கோமாவுக்குச் சென்ற பாலசுப்பிரமணியம், தற்போது வரை நினைவு திரும்பாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். கணவரை எப்படியாவது காப்பாற்றிவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் சொந்த வீடு மற்றும் நகைகளை விற்று சிகிச்சை அளித்து வந்திருக்கிறார் மனைவி உமா மகேஸ்வரி. பிள்ளைகளின் கல்விச் செலவும் கழுத்தை நெறிக்க, என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தவர், ஆம்புலன்ஸ் மூலம் கோமாவில் இருக்கும் கணவரை அழைத்துவந்து, ஈரோடு கலெக்டரைச் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.

கணவரின் உடல்நிலை, மகன்களின் பள்ளிப் படிப்பைத் தொடர இயலாத நிலை குறித்து மனுவில் கண்ணீரோடு தெரிவித்துள்ளார். இதைப் படித்ததும், குழந்தைகளின் படிப்பு தொடர உதவி செய்வதாகவும், கோமாவில் இருக்கும் பாலசுப்பிரமணியத்தை ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிறப்பான சிகிச்சை அளிக்கவும் கலெக்டர் பிரபாகர் உறுதி அளித்தார். மேலும், மாவட்ட ஆட்சியரின் விருப்பக்கொடை நிதியிலிருந்து 10 ஆயிரம் ரூபாயை மருத்துவச் செலவுக்காகவும் கொடுத்தார்.



தற்போது, ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் பாலசுப்ரமணியம் சேர்க்கப்பட்டுள்ளார். அழுது அழுது கண்ணீர் தீர்ந்த கண்களுடன் கணவர் அருகே அமர்ந்திருந்த உமா மகேஸ்வரி, ``என் வீட்டுக்காரர் பைக் மேலே கார் மோதிடுச்சுன்னு போன் வந்ததும் பதறியடிச்சு ஓடினேன். அவர் தலையில் பலமா அடிபட்டு, மூக்குல ரத்தம் வந்து கோமாவுக்குப் போயிட்டாரு. எப்படியாவது அவரைக் காப்பாத்திடணும்னு, ஒரு தனியார் ஆஸ்பத்திரியில சேர்த்தேன். வீடு, நகைகளை அடகு வெச்சு ஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டினேன். கோமாவுக்குப் போய் ஒருவருஷம் ஆயிடுச்சு. இன்னும் நினைவு திரும்பலை. `எப்போ நினைவு வரும்னு சொல்ல முடியாது'னு டாக்டர் சொல்லிட்டாங்க.

அவரே உலகமா இருந்தேன். அவர் படுத்த படுக்கையாப் போனதுக்கு அப்புறம் குடும்பமே நொடிஞ்சுப் போச்சு. அவர் நல்லா இருந்தவரைக்கும் என்னை ஒரு சாமான் வாங்கக்கூட கடைக்கு அனுப்பினதில்லை. இப்போ, சாப்பாட்டுக்கே கஷ்டம். அக்கம்பக்கத்துல வீட்டு வேலைக்குப் போய்ட்டிருக்கேன். அதுல கிடைக்குற வருமானம் வீட்டுச் செலவுக்கே பத்தலை. இதுல மருந்துச் செலவு, பசங்க படிப்புன்னு கஷ்டமா இருக்கு. மாமியார்கிட்ட போய் செலவுக்குக் கொஞ்சம் பணம் கொடுங்கன்னு கேட்டேன். `அவன் உனக்குத்தானே சம்பாதிச்சுப் போட்டான். நீயே பாத்துக்கோ, என்னால முடியாது'னு சொல்லிட்டாங்க.

இன்னைக்கு ஒத்த ஆளா வீட்டுக்காரரையும் ரெண்டு புள்ளைகளையும் கவனிச்சுட்டு வர்றேன். அழுது அழுது ஓஞ்சி போயாச்சு. யாராவது என் வீட்டுக்காரரைப் பார்க்க வர மாட்டாங்களா, போறப்ப ஏதாவது கை செலவுக்குப் பணம் கொடுக்க மாட்டாங்களான்னு எதிர்பாக்குற அளவுக்குச் சூழ்நிலை இருக்கு. கோமாவில் இருக்கும் என் வீட்டுக்காரருக்கு நிச்சயமாக நினைவு வந்துடும். எங்களோடு பழையபடி பேசுவார்னு எனக்கு நம்பிக்கையிருக்கு. பேசறது, சாப்பிடறது, குளிக்கிறது, பாத்ரூம் போறதுன்னு அவரோட நிலைமை முன்னேறிட்டாலே போதும், நான் வேலைக்குப் போய் குடும்பத்தை கரை சேர்த்துடுவேன்” என்றபடி கண்களைத் துடைத்துக்கொண்டார்.

உமா மகேஸ்வரிக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. `நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்’ என்றோம். நம்பிக்கைதானே ஏழை, பணக்காரர் எல்லோருக்குமான ஒரே சக்தி!

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024