Wednesday, July 18, 2018

இரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்!

எஸ்.மகேஷ்




சென்னை சைதாப்பேட்டையில் இளம்பெண்ணிடமிருந்து செல்போனை, பைக்கில் வந்த இரண்டு பேர் பறித்தனர். அவர்களைத் தைரியமாகப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளார் சென்னை வாலிபர்.

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ப்ரீத்தி. அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்றிரவு 9 மணி அளவில் வேலை முடிந்து அவர் வீடு திரும்பினார். சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ப்ரீத்தி, நடந்து வந்தபோது அவரின் செல்போனை பைக்கில் வந்த இரண்டுபேர் பறித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த ப்ரீத்தி, அவர்களுடன் போராடினார். இதில் கீழே விழுந்த ப்ரீத்தி, படுகாயமடைந்தார். இந்தச் சம்பவத்தை அவ்வழியாகச் சென்ற சின்னமலைப் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் பார்த்தார். பைக்கில் வந்த கொள்ளையர்களுடன் விக்னேஷ் போராடினார்.

ஆனால் ப்ரீத்தி, விக்னேஷ் ஆகியோரின் பிடியிலிருந்து தப்பிய கொள்ளைக் கும்பல் பைக்கில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றனர். அவர்களை விக்னேஷ், தன்னுடைய பைக்கில் விரட்டினார். தி.நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கொள்ளையர்கள் பைக்கின் வேகத்தை குறைத்தனர். அப்போது அவர்களை விரட்டிச்சென்ற விக்னேஷ், தன்னுடைய பைக்கைக் கொண்டு மோதினார். இதில் கொள்ளையர்கள் கீழே விழுந்தனர். அவர்கள் இருவரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை விக்னேஷ் மடக்கிப்பிடித்து, மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் செல்போனை பறித்தது ஆலந்தூரைச் சேர்ந்த நவீன், நிர்மல் என்று தெரியவந்தது. அவர்கள் இருவரிடமும் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

போலீஸார் கூறுகையில் ``சம்பவத்தன்று ப்ரீத்தி, மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள தோழியைச் சந்திக்கச் சென்றுள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்று கேட்பதற்காக போனில் பேசியுள்ளார். ப்ரீத்தியைப் பின்தொடர்ந்து வந்த கொள்ளையர்கள், அவரிடமிருந்த செல்போனை பறித்துவிட்டுச் சென்றுள்ளனர். அப்போதுதான் விக்னேஷ் அதைப்பார்த்து கொள்ளையர்களிடமிருந்து செல்போனை மீட்க போராடியுள்ளார். விக்னேஷ், டிப்ளமோ படித்துள்ளார். கார் நிறுவனத்தில் பணியாற்றிய அவர், அந்த வேலையை விட்டுவிட்டு புதிய வேலையைத் தேடி வருகிறார். விக்னேஷ் போல எல்லோரும் செயல்பட்டால் திருட்டு, வழிப்பறி சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்" என்றனர்.



இதுகுறித்து விக்னேஷ் கூறுகையில், ``நேற்றிரவு வீட்டுக்கு பைக்கில் சென்றேன். அப்போது, ஒரு இளம்பெண்ணிடம் பைக்கில் வந்த இரண்டு பேர் செல்போனைப் பறித்தனர். அவர்களுடன் அந்தப் பெண் போராடிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்ததும் நானும் அந்தப் பெண்ணுக்கு உதவினேன். அதற்குள் பைக்கில் வந்த கொள்ளையர்கள் இளம்பெண்ணைத் தள்ளிவிட்டு பைக்கில் சென்றுவிட்டனர். நான், அவர்களை விரட்டிச் சென்று பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தேன். நான் பிடிக்கும்போது எனக்கு மிரட்டல் விடுத்தனர். அதற்குள் பொதுமக்கள் கூடிவிட்டனர். இன்று காலை எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்து வாட்ச் பரிசாகக் கொடுத்தார். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனும் என்னை அழைத்துப் பாராட்டினார். நான் உதவி செய்த இளம்பெண் நன்றி என்று கூறியபோதுதான் உதவிக்கு கிடைத்த மரியாதையைப் புரிந்துகொண்டேன்" என்றார்.

சுமார் 4 கி.மீட்டர் தூரம் பைக்கில் விரட்டிச் சென்று செல்போன் கொள்ளையர்களைப் பிடித்த விக்னேஷை போலீஸார் பாராட்டினர். இந்த தகவல் சைதாப்பேட்டை தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியனுக்கு தெரிந்ததும் விக்னேஷை நேரில் அழைத்து வாழ்த்தினார். பிறகு 20,000 ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம் ஒன்றை பரிசாகக் கொடுத்தார்.

ஏற்கெனவே, சென்னை அண்ணாநகரில் சூர்யா என்ற சிறுவன், தைரியமாக கொள்ளையனைப் பிடித்தான். 18 வயது பூர்த்தியானதும் அவனுக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024