Monday, July 23, 2018

பாப்பம்மாள் வீட்டு விருந்து..! - அன்பால் நனைந்த இளைஞர்கள் படை


தி.ஜெயப்பிரகாஷ்



கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருந்தது சத்துணவு சமையலர் பாப்பம்மாள் விவகாரம். இந்நிலையில் இன்றைய தினம், அவரது இல்லத்தில் அனைவருக்கும் விருந்து சமைத்து பரிமாறிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள திருமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள். கடந்த 12 வருடங்களாக அரசு பள்ளியில் சத்துணவு சமையலராகப் பணியாற்றி வரும் இவருக்கு, சமீபத்தில் தன் சொந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளியிலேயே பணியிட மாற்றம் கிடைத்தது. ஆனால், சமையலர் பாப்பம்மாள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, அவரை அந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களுடைய பெற்றோர்கள் சத்துணவு சமைக்க விடாமல் தடுத்தனர். இதனால் அரசு அதிகாரிகள், சமையலர் பாப்பாளை அவர் இதற்கு முன்பு பணியாற்றிய பள்ளிக்கே திருப்பியனுப்பினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அனைத்து தரப்பிலும் விவாதப்பொருளாக மாறியது. பாப்பாளை பணியாற்ற விடாமல் செய்த ஆதிக்க சக்திகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து சமையலர் பாப்பம்மாளுக்கு வழங்கப்பட்ட பணியிட மாற்றத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் திருமலைக் கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியிலேயே பணியாற்ற திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.



இந்நிலையில், சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடி வரும் பெரியார் அமைப்புகள் சார்பாக இன்றைய தினம் சமையலர் பாப்பம்மாள் இல்லத்தில் மதிய விருந்து உண்ணும் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. திருப்பூர் மாவட்டத் தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி, இந்நிகழ்வில் அந்த அமைப்பின் தலைவர் கு.ராமகிருஷ்ணன் மற்றும் மருத்துவர் எழிலன் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதனால் இன்றைய தினம் காலை முதலே சமையலர் பாப்பம்மாளின் இல்லம் விழாக்கோலத்தில் காட்சியளித்தது. மிகுந்த மகிழ்ச்சியோடு, தன் கைப்பட சமைத்த உணவை, அனைவருக்கும் பரிமாறி ஆனந்தமடைந்தார் சமையலர் பாப்பம்மாள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024