Monday, July 23, 2018

குறட்டையின்றி நிம்மதியாக உறங்க என்ன செய்ய வேண்டும்?



மு.ஹரி காமராஜ்

குறட்டை சத்தம் யாருக்குமே பிடிக்காது. குறட்டை விடுபவர்கள் எப்போதுமே கேலியையும் கிண்டலையும் சந்தித்துக்கொண்டே இருப்பார்கள். குறட்டை சத்தத்தால் மேலைநாடுகளில் விவாகரத்து எல்லாம் நடந்திருப்பதை அறிந்திருக்கலாம். இந்தக் குறட்டை ஏன் வருகிறது? இதை நீக்க எளிய வழிகள் என்னவென்று காண்போம்.



உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் குறட்டை விடுவது சகஜம். குறிப்பாக தொப்பை இருப்பவர்கள் ஆழ்ந்து தூங்கினால் குறட்டை கச்சேரிதான். குறட்டை விடுபவர்கள், தாங்களும் நோயால் அவதிப்பட்டு, அடுத்தவர் தூக்கத்தையும் கெடுத்து நோயாளியாக்குகிறார்கள். அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள், கொழுப்பு அதிகமுள்ள உணவை உண்பவர்கள், புகை, மது உபயோகிப்பவர்கள், சரியான நேரத்தில் உறங்காதவர்கள், சுவாசக்கோளாறு இருப்பவர்கள் எல்லோருக்கும் குறட்டை வரும். சீராக மூச்சு விடமுடியாமல்தான் குறட்டை சத்தம் உண்டாகிறது. மூக்கின் உள்ளே இருக்கும் அடினாய்ட் தசையும், தொண்டைக்குள் இருக்கும் டான்சிலும் சுவாசிக்கும்போது பெரிதானால், உள்ளே செல்லும் காற்று எளிதாக போய் வரமுடியாமல் அழுத்தமாகி அதுவே அதிர்வினால் குறட்டையாகிறது.

குறட்டையால் தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளே போகாமல் உடல் பலவீனப்பட்டு விடும். குறட்டைக்காரர்களால் சரியாக தூங்க முடியாமல் போகும். இதனால் ஞாபகமறதி, மயக்கம், மந்தநிலை, ரத்த அழுத்த நோய், ஆண்மைக்குறைவு என எல்லாமே உருவாகி அவர்கள் வாழ்வையே பாதித்துவிடும். குறட்டையை ஒழிக்க முதலில் புகை, மதுவை விட வேண்டும். உணவுக்கட்டுப்பாடு கட்டாயம் வேண்டும். சரியான உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி இருக்க வேண்டும். உறங்கும் விதத்தைக் கூட உன்னிப்பாக கவனித்து சரி செய்துகொள்ளுங்கள். சரியான ENT மருத்துவரை அணுகி சுவாசக்கோளாறுகளை சரிசெய்து கொள்ள வேண்டும். மூச்சுத் திணறல் இல்லாமல், குறட்டை இல்லாமல் உறங்க உபகரணங்கள் வந்துள்ளன. அவைகளை மருத்துவர் ஆலோசனைபடி உபயோகிக்கலாம். குறட்டைதானே என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். தூக்கம்தான் உங்கள் உற்சாகத்தின் ஊற்றுக்கண்!

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024