Monday, July 16, 2018

பஸ் கோளாறால் பயணம் தாமதம் பயணிக்கு ரூ.10,000 இழப்பீடு

Added : ஜூலை 16, 2018 03:08

சென்னை:குளிர்சாதன பேருந்து கோளாறால், சாதாரண பேருந்தை இயக்கிய ஆம்னி பேருந்து நிறுவனம், பயணிக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், அண்ணா நகர் மேற்கு, 25வது சாலையைச் சேர்ந்த சையத் அலி தாக்கல் செய்த மனு:சென்னையில் இருந்து புதுக்கோட்டைக்கு, குளிர்சாதன வசதியுடைய ஆம்னி பேருந்தில் பயணம் செய்ய, 1,340 ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு வாங்கினேன்.பேருந்தில் பயணம் செய்த போது, பெரம்பலுார் அருகே இரவில், இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. மாற்று ஏற்பாடு செய்ய தாமதமான நிலையில், சாதாரண பேருந்தில் அழைத்து சென்றனர். 'குளிர்சாதன வசதியுடைய பேருந்திற்கு கட்டணம் வாங்கிக் கொண்டு, சாதாரண பேருந்தில் அழைத்து செல்கிறீர்களே...' என, கேட்டதற்கு, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மிரட்டும் வகையில் பேசினர்.இதனால், மன உளைச்சலுக்கு ஆளானேன். 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.வழக்கு விசாரணையில், 'பேருந்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், தாமதம் ஏற்படாத வகையில் சாதாரண பேருந்து இயக்கப்பட்டது. சேவையில் குறைபாடில்லை' என, ஆம்னி பேருந்து நிறுவனம் தெரிவித்தது.இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி மோனி, நீதித்துறை உறுப்பினர் அமலா ஆகியோர், 'பேருந்து நிறுவனம் உரிய சேவை வழங்கவில்லை. மனுதாரருக்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, 5,000 ரூபாய் வழக்கு செலவும் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024