Tuesday, July 17, 2018

சாம்பாரில் கரப்பான் பூச்சி; இணையதளத்தில் வீடியோவை வெளியிடுவேன்: ரூ.5 லட்சம் கேட்டு பிரபல உணவகத்தை மிரட்டிய இளைஞர் கைது

Published : 16 Jul 2018 21:35 IST

சென்னை



சாம்பாரில் மிதக்கும் கரப்பான், கைதான மகேந்திரசிங்

இட்லி பார்சல் வாங்கியதில் சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடப்பதாகவும், அதை இணையதளத்தில் வீடியோவாக வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டிய இளைஞரை போலீஸார் சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்தனர்.

சென்னை வேளச்சேரியில் தமிழ்க்கடவுள் பெயரில் இயங்கும் பிரபலமான இட்லி கடை உள்ளது. சென்னை முழுவதும் பல கிளைகள் கொண்ட இந்த உணவகத்தில் எந்நேரமும் கூட்டம் அலைமோதும். இந்த ஓட்டலில் கடந்த 9-ம் தேதி காலை இளைஞர் ஒருவர் தோசை, இட்லி பார்சல் வாங்கிச் சென்றார். வாங்கிச்சென்ற அரைமணி நேரத்தில் வேக வேகமாக வந்த அவர், 'என்னய்யா ஹோட்டல் நடத்துகிறீர்கள், சாம்பாரில் என்ன கிடக்கிறது என்று பார்' என ஓட்டல் மேலாளரிடம் காட்ட, அதைப் பார்த்த மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

காரணம் சாம்பாரில் கரப்பான் பூச்சி ஒன்று மிதந்து கொண்டிருந்தது. வெளியே தெரிந்தால் பெரிய பிரச்சினை ஆகிவிடும் என்று பயந்த அவர் அந்த இளைஞரை, 'தனியாக உள்ளே வாருங்கள்' என்று அழைத்துச் சென்றார். 'உள்ளே வரமாட்டேன் இங்கேயே தான் நிற்பேன். எனக்கு நியாயம் வேண்டும்' என்று அந்த இளைஞர் சத்தம் போட்டுள்ளார்.

'சார் வியாபாரம் பாதிக்கப்படும், எதுவாக இருந்தாலும் உள்ளே போய் பேசிக்கொள்ளலாம்' என்று மேலாளர் கூற, 'நான் கரப்பான் பூச்சி கிடந்த பார்சலை வீடியோ எடுத்து வைத்துள்ளேன்' என்று மிரட்டியுள்ளார். பின்னர் அலுவலக அறையில் அமர்ந்த அவர், 'வீடியோவை இணையதளத்தில் போட்டால் உங்கள் அத்தனை கிளைகளும் அவ்வளவுதான்' என்று மிரட்டியுள்ளார்.

'சார். எதுவாக இருந்தாலும் தீர்வு உண்டு நாங்கள் என்ன செய்ய வேண்டும்' என்று ஓட்டல் மேலாளர் கேட்க, 'இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருக்க எனக்கு நீங்கள் ரூ.5 லட்சம் கொடுக்கவேண்டும்' என்று கூறியுள்ளார். 'என்ன சார் இதற்குப் போய் 5 லட்சமா?' என்று மேலாளர் கேட்க, 'உங்களின் ஒருநாள் வியாபாரம் எவ்வளவோ, அத்தனையும் வீடியோ போட்டால் போய்விடும்' என்று மிரட்டியுள்ளார்.

'சார். ஒருநாள் டைம் கொடுங்க, நான் எனக்கு மேல் உள்ளவர்களிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார். நாளை வருகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த இளைஞர் கிளம்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து பணத்துக்காகத்தான் தங்களை அந்த இளைஞர் மிரட்டுகிறார் என்பதை புரிந்துகொண்ட ஓட்டல் நிர்வாகத்தினர் இதுபற்றி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரைப் பெற்ற போலீஸார் பணம் கேட்டு மிரட்டிய இளைஞரைப் பிடிக்க திட்டம் வகுத்துள்ளனர். அதன்படி 'ஐந்து லட்ச ரூபாய் முடியாது கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள் என்று பேசி ரூ.3 லட்சம் என்று பேசுங்கள். அதை நம்பி அந்த இளைஞர் வரும்போது பிடித்து விடலாம்' என்று கூறியுள்ளனர். இதையடுத்து போலீஸார் சொன்னபடி மேலாளர் அந்த இளைஞரிடம் பேசியுள்ளார்.

'ஐந்து லட்ச ரூபாயில் ஒரு ரூபாய்கூட குறைக்கமாட்டேன்' என்று அவர் கூறியுள்ளார். பின்னர் ஒருவாறாக ரூ.3 லட்சம் வாங்கிக்கொள்ள சம்மதித்து காலையில் வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 11-ம் தேதி காலை பணத்தை வாங்க ஆவலுடன் வந்த அவரை வேளச்சேரி போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் மகேந்திரசிங் (26) என்று தெரியவந்தது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரைச் சேர்ந்த மகேந்திரசிங் தாம்பரத்தில் ஒரு ஸ்வீட் கடையில் பணியாற்றி வந்துள்ளார். சில நேரம் இதுபோன்ற தான் வேலை செய்யும் ஸ்வீட் கடையில் ஊசிப்போன ஸ்வீட் போன்றவற்றால் கஸ்டமர்கள் சண்டை போடுவதையும், மிரட்டுவதையும் பார்த்து இதேபோன்று மிரட்டினால் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் சிறிது சிறிதாக தனது வேலையைக் காட்டியுள்ளார்.

கடையில் பார்சல் வாங்கியவுடன் தான் தயாராக வைத்திருக்கும் கரப்பான் பூச்சியை (அதை முன்பே சுடுநீரில் போட்டு லைட்டாக கொதிக்க வைத்து எடுத்து வைத்திருப்பாராம்) சாம்பாரிலோ, குழம்பிலோ கலந்து அப்படியே பார்சலைக் கொண்டு வந்து சத்தம் போடுவாராம். இதனால் பயந்துபோன பல உணவகங்களில் அவருக்குப் பணம் கிடைத்துள்ளது.

இதனால் மேலும் தைரியமடைந்த அவர் பெரிய உணவகத்தில் பெரிதாகப் பணம் பார்க்கலாம் என்று முயன்றுள்ளார். அவர் நேரம் போலீஸில் புகார் அளிக்க வகையாக சிக்கிக்கொண்டார். அவரைக் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024