Wednesday, July 25, 2018

வீட்டுக்கு சீல் வைக்கச் சென்ற அதிகாரிகள் - அதிர்ச்சியில் இறந்த வீட்டின் உரிமையாளர்!


கே.குணசீலன்


ம.அரவிந்த்

கும்பகோணத்தில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் குடியிருந்தவர் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்திருந்ததால், கோர்ட் உத்தரவின்படி வீட்டுக்கு சீல் வைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் சென்றதோடு வீட்டில் உள்ள பொருள்களை வெளியே எடுத்து வைத்தனர். இதைக்கண்ட வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியில் இறந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கும்பகோணத்தில் பிரசித்திபெற்றது ஆதிகும்பேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தனசேகரன் என்பவர் சுமார் 70 ஆண்டுகளாக அவரின் தந்தை காலத்திலிருந்து குடியிருந்து வருகிறார். இதற்கு ஆண்டுதோறும் வாடகையையும் கோயில் நிர்வாகத்திடம் செலுத்தி வந்தார். அதன் பிறகு பல ஆண்டுகளாக அவர் வாடகை தொகை செலுத்தவில்லை. இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் வாடகை பாக்கியைச் செலுத்த வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், தனசேகரன் வாடகைத் தொகையைச் செலுத்தவில்லை. இதனால், இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை இணை ஆனையர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தனசேகரன் வாடகை பாக்கியான 2 லட்சம் ரூபாயை விரைவில் செலுத்துவதாகக் கூறினார். பின்னர் 2016-ம் ஆண்டு 1,37,000 ரூபாய் மட்டும் செலுத்தினார் அதிலும் பாக்கி இருந்தது.

இதன் பிறகு, தனசேகரனிடம் வாடகை பாக்கித் தொகையைக் கேட்டு கோயில் நிர்வாகத்தினர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பினர். அதற்கு அவர் பதில் தெரிவிக்காததோடு வாடகை தொகையையும் செலுத்தாமலும் இருந்துள்ளார். பின்னர் மயிலாடுதுறை இணை ஆணையர் உத்தரவின்படி, கடந்த ஜூன் 6-ம் தேதி வரை வாடகை பாக்கி 80,000 ரூபாய் செலுத்தாத காரணத்தால் வீட்டை காலி செய்து, அதைப் பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இன்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் போலீஸார் உதவியோடு தனசேகரன் வீட்டுக்குச் சென்றனர். அங்கு வீட்டை சீல் வைக்க வந்த தகவலைக் கூறி வீட்டில் உள்ள பொருள்களைத் தெருவில் எடுத்து வைத்தனர். இதைப் பார்த்துக்கொண்டிருந்த தனசேகரன் திடீரென அதிர்ச்சியில் இறந்தார். இதைக் கண்ட மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும், அதிகாரிகளின் இந்தச் செயலைக் கண்டித்து அவர்களையும் முற்றுகையிட்டனர்.

 

பின்னர் தாசில்தார் வெங்கடாஜலம், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு வீட்டைக் காலி செய்யும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இறந்துபோன தனசேகரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து ஆதிகும்பேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கவிதா, நிருபர்களிடம் கூறியதாவது, ``இந்த இடம் சின்னம்மாள் என்பவரின் பெயரில் இருந்தது. அதன் பிறகு ராமதாஸ் என்பவருக்கு மாற்றப்பட்டுள்ளது. 2,214 சதுரஅடி பரப்பளவு கொண்ட வீடுடன்கூடிய கட்டடத்தில் மேல் பகுதியைத் தனசேகரன் போக்கியத்துக்கும், கீழ்ப் பகுதியில் கடை நடத்துவதற்கு வாடகைக்கும் விட்டுள்ளார். இந்த இடத்துக்கு ஆண்டுக்கு 24,744 ரூபாய் வாடகையாக செலுத்த வேண்டும். இந்த வாடகையை கட்டாமல் 2016-ம் ஆண்டிலிருந்து பாக்கி வைத்துள்ளதால் இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்தவர்கள் கோர்ட் உத்திரவின்படி வீட்டுக்கு சீல் வைக்கச் சென்றோம். அப்போது தனசேகரன் இறந்ததால் தற்காலிகமாக இந்த நடவடிக்கையை நிறுத்தியுள்ளோம்’’ என்றார். தனசேகரன் உறவினர்களிடம் பேசினோம், ``இரண்டு ஆண்டுகளாகத் தனசேகரன் சர்க்கரை நோய், சிறுநீரகப் பாதிப்பு ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சையும் மருந்து மாத்திரையும் உட்கொண்டு வந்துள்ளார். வீட்டுக்கு சீல் வைக்க அதிகாரிகள் வந்தபோது, தனசேகரனின் மனைவி விரைவில் பணம் கட்டுவதாகக் கூறி அதிகாரிகளிடம் கெஞ்சியுள்ளார். அதைக் கேட்காமல் வீட்டுக்குள் இருந்த பொருள்களை எடுத்து வெளியே வைத்ததால் அதிர்ச்சியில் தனசேகரன் இறந்துள்ளார்’’ என்றனர்

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024