ஊதியம் கேட்ட பேராசிரியர்களிடம் ராஜினாமா கடிதம் கேட்ட தனியார் பொறியியல் கல்லூரி!
By DIN | Published on : 18th July 2018 03:06 PM |
கோவை: நிலுவையில் இருக்கும் 4 மாத ஊதியத்தைக் கேட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களிடம், ராஜினாமா கடிதம் கொடுக்குமாறு தனியார் பொறியியல் கல்லூரி நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம்.கே. சூரப்பாவை நேரில் சந்தித்து தங்களது புகார் கடிதத்தை அளித்தனர்.
அந்த கடிதத்தில், கல்லூரி நிர்வாகத்திடம் நிலுவையில் இருக்கும் 4 மாத ஊதியத்தைக் கேட்டபோது, நாங்கள் ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எங்களை வேலையில் இருந்து நிறுத்திய பிறகும், அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் போது எங்களது ஆதார் எண், கல்விச் சான்றிதழ்கள், தனிநபர் தகவல்களை கல்லூரி நிர்வாகம் பயன்படுத்தியதாகவும் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஏஐசிடிஇ அனுமதி பெற எங்களது சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த கல்லூரியின் டேட்டா பேஸில் இருந்து எங்களது தகவல்கள் நீக்கப்படவில்லை என்றால், எங்களுக்கு பிற கல்லூரிகளில் வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்படும் நிலை இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்துக் கருத்துக் கூறிய அண்ணா பல்கலைக்கழகம், புகார் குறித்து உரிய கல்லூரிக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. கல்லூரி அளிக்கும் பதிலைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment