20 ஆண்டுகால சேவையை நிறுத்திக் கொண்டது யாஹூ மெசஞ்ஜர்! வரலாறான செல்லப் பிள்ளை!!
By DIN | Published on : 18th July 2018 03:56 PM |
20 ஆண்டுகளுக்கு முன்பு இணையம் என்ற ஒன்று அறிமுகமானபோது மௌஸை மெல்ல அசைத்து ஒவ்வொரு லிங்கையும் கிளிக் செய்து பரவசமடைந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?
அப்படிப்பட்டவர்களால் மட்டுமே யாஹூ மெசஞ்ஜர் எனும் வரப்பிரசாதத்தைப் பற்றி பேச முடியும்.
சாட் ரூம்ஸ் என்ற முதல் சேவையை யாஹூ அறிமுகப்படுத்தியதால் உருவான நட்புகளும், காதல்களும் ஏராளம். நேரில் பார்த்திராதவர்களை, நாட்டின் எங்கோ ஒரு மூலையில் இருப்பவரை என பல நட்பு வட்டங்களை உருவாக்கித் தந்தது இந்த யாஹூ மெசஞ்ஜர்.
இந்த யாஹூ மெசஞ்ஜர் இணையதளத்தின் செல்லப் பிள்ளை என்று சொன்னால் அது மிகையில்லை. இது தனது 20 ஆண்டுகால சேவையை ஜூலை 17ம் தேதியோடு நிறுத்திக் கொண்டது.
பயனாளர்கள் இல்லாத யாஹூ மெசஞ்ஜரை பயன்பாட்டில் இருந்து நீக்கியுள்ளது யாஹூ நிறுவனம். ஒரு காலத்தில் 122 மில்லியன் பயனாளர்களைக்கொண்டு, இணையத்தில் அதகளம் செய்து கொண்டிருந்த யாஹூ மெசஞ்ஜர் இன்று இணையத்தில் இருந்தே முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.
1998ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி யாஹூ பேஜர் என்று அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு 1999ல் இது யாஹூ மெசஞ்ஜர் என பெயர் மாற்றம் பெற்றது. 2000ஆவது ஆண்டில் இணையதளம் என்பது பெரிய அளவில் மக்களைக் கவர்ந்த போது நாயகனாகத் திகழ்ந்தது இந்த செல்லப்பிள்ளை.
சுமார் 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக உச்சத்தில் இருந்த யாஹூ மெசஞ்ஜர், வாட்ஸ் அப், பேஸ்புக், ஸ்கைப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களால் மெல்ல மெல்ல அதன் முக்கியத்துவத்தை இழந்தது.
2017ம் ஆண்டு யாஹூவை வாங்கிய வெரிசோன் நிறுவனம், யாஹூ மெசஞ்ஜரை புதுப்பித்து இணையத்தில் அறிமுகப்படுத்தியும் அது பலனளிக்கவில்லை. ஆர்குட், எம்எஸ்என் மெசெஞ்ஜர் போன்ற பயனற்றுப் போன சமூக தளங்களுடன் இன்று யாஹூ மெசஞ்ஜரும் இணைந்துவிட்டது. ஒரு காலத்தில் யாஹூ மெசஞ்ஜரில் சாட் செய்ய வேண்டும் என்பதற்காக சைபர் கஃபேக்கள் உருவாக்கப்பட்டு தெருவுக்கு தெரு நெட் சென்டர்கள் காளான்கள் போல தொடங்கின. தற்போது செல்போனில் இன்டர்நெட் வந்ததால், இந்த நெட் சென்டர்களும் காணாமல் போய்விட்டன. யாஹூ மெசஞ்ஜரும் வரலாறாக மாறிவிட்டது.
No comments:
Post a Comment