மீன் பாதுகாப்பானதா என்று உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதிக்க முடியும்?: எரிந்து விழுந்த கோவா முதல்வர்
By IANS | Published on : 18th July 2018 06:59 PM |
பனாஜி: நீங்கள் உண்ட மீன் பாதுகாப்பானதா என்று உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதிக்க முடியும் என்று பத்திரிக்கையாளரிடம் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் எரிந்து விழுந்த சம்பவம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ஒடிஷா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கோவாவிற்கு விற்பனைக்கு வரும் மீன்கள், பிணங்களை பாதுகாக்கப் பயன்படும் 'பார்மலின்' என்னும் ரசாயன திரவத்தால் பாதுகாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கடந்த வெள்ளியன்று அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் உடனே மாநில உணவுத் துறை அமைச்சர் விஜய சர்தேசாய் மீன்கள் உண்ணத் தகுதியானவை என்று ட்வீட் செய்தார். பின்னர் மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறையில் இருந்து சோதிக்கப்பட்ட மீன்களில் பார்மலின் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளிருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
ஆனால் இதனால் சர்ச்சை எழுந்த நிலையில் கோவா மாநில அரசு தற்பொழுது மாநிலம் முழுவதும் மீன் விற்பனைக்கு 15 நாட்கள் தடை விதித்து புதனன்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்று புதன்கிழமை நடைபெற்றது.
அந்த சந்திப்பில் மீன் தடைக்கு முன்னர் விற்கப்பட்ட மீன்களின் நிலை குறித்து செய்தியாளர் ஒருவர் தொடர்ந்து பாரிக்கரிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். இதனால் எரிச்சலடைந்த முதல்வர் அவரிடம், "நீங்கள் உண்ட மீன் பாதுகாப்பானதா என்று உங்கள் வயிற்றுக்குள் நுழைந்தா சோதிக்க முடியும் என்று எரிந்து விழுந்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
நாங்கள் அன்று மீன்கள் குறித்து சோதனை நடத்தினோம்.அதன் அறிக்கையினை உங்களுக்கு அளித்துள்ளோம். நீங்கள் யாராவது நிபுணரிடம் அது குறித்து கேட்கலாம். ஆனால் நீங்கள் உங்களுக்கு செய்திகளைத் தரக் கூடிய மக்களிடம் போகாதீர்கள்.
நீங்களும் சரி..நீங்கள் கருத்துக் கேட்கும் நிபுணரும் சரி குழப்பமான கருத்துக்களை மக்களை முன் வைக்கிறீர்கள்.
தற்பொழுது மீன் விற்பனையை தடை செய்து விட்டதால் முன்னர் நடந்த சோதனைகள் குறித்து பேச விரும்பவில்லை. யாருக்கும் தெளிவாகப் புரியாத இத்தகைய விஷ்யங்கள் குறித்து விவாதிப்பது சரியாக இருக்காது. எனவே அதைப் பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment