Thursday, July 19, 2018


நடத்துநர் இல்லா பேருந்தால் குறைந்தது நேரம் அல்ல; எங்கள் பாக்கெட்தான்: பயணிகள் அதிருப்தி

By DIN | Published on : 18th July 2018 01:04 PM

சென்னை: செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்ட நடத்துநர் இல்லா பேருந்துகளில், மற்ற பேருந்துகளோடு ஒப்பிடுகையில் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

பாயிண்ட் டூ பாயிண்ட் வழித்தடங்களில் துவக்கப்பட்ட இந்த நடத்துநர் இல்லா பேருந்துகளால் பயண நேரம் எந்த வகையிலும் குறையவில்லை, ஆனால் கட்டணம் மட்டும் அதிகமாக உள்ளது என்கிறார்கள் பயணிகள்.

சாதாரண பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த வழித்தடங்களில் நடத்துநர் இல்லா பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியது.

ஆனால், இந்த பேருந்துகளில், இதே பாதையில் பயணிக்கும் மற்ற பேருந்துகளை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது, இதர பேருந்துகளில் ஒரு கிலோ மீட்டருக்கு 58 பைசா என்று கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டால், நடத்துநர் இல்லா பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 85 பைசா என்ற அளவுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால், நடத்துநர் இல்லா பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கூடுதலாக 27 பைசா செலவிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

சென்னை - வேலூர் இடையே இயக்கப்பட்டு வந்த 34 பேருந்து சேவைகள் நடத்துர் இல்லா பேருந்துகளாக மாற்றப்பட்டன. இதல் ஒரு நபருக்கு ரூ.128 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இதே வழித்தடத்தில் இதர பேருந்துகளில் ரூ.89 தான் கட்டணம். ஒரு 4 பேர் கொண்ட குடும்பம் நடத்துநர் இல்லா பேருந்தில் பயணித்தால் ரூ.156 ஐ கூடுதலாகக் கொடுக்க வேண்டியது இருக்கும் என்கிறார் சத்துவாச்சாரியைச் சேர்ந்த கே. முகிலன்.

இதேப் போல தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வந்த பேருந்துகளில் ரூ.31 கட்டணமாக இருந்த நிலையில், நடத்துநர் இல்லா பேருந்துகளில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சாதாரண பேருந்துகளின் பயண நேரமே இந்த பேருந்துகளுக்கும் ஆகிறது. தனியார் பேருந்துகள் இதே வழித்தடத்தில் ரூ.36 கட்டணமாக வசூலிக்கும் நிலையில், மிக விரைவாகவும் சென்றடைகிறது. ஆனால், அரசுப் பேருந்துகளில் ரூ.50 கட்டணம், அதே நேரம் என்பது மிக மோசமான முடிவு என்கிறார்கள் பயணிகள்.

நடத்துநர் இல்லா பேருந்துகளில் காணப்படும் குறைகளாக சுட்டிக்காட்டப்படுவது இதுதான்.

தமிழகம் முழுவதும் 231 நடத்துநர் இல்லா பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த புதிய பேருந்துகளுக்கு பழைய கட்டணமான கிலோ மீட்டருக்கு 58 பைசாவுக்கு பதிலாக 85 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 8000 தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஒரே வழித்தடத்தில் இயக்கப்படும் நடத்துநர் இல்லா பேருந்துகளை விட, தனியார் பேருந்துகளில் கட்டணமும் குறைவு, பயண நேரமும் குறைவு என்பதே.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024