சிறையில் வாடும் முதியோர்களுக்கு பொது மன்னிப்பு: மத்திய அரசு முடிவு
By DIN | Published on : 19th July 2018 04:28 AM |
நாடெங்கிலும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் கைதிகள் மற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட பெண் மற்றும் திருநங்கை கைதிகள், தங்களது தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேல் அனுபவித்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அக்டோபர் 2-இல் மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளதால் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
தில்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதனை தெரிவித்தார்.
அதேசமயம் வரதட்சணை கொலை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்காகவும் தடா, பொடா, பயங்கரவாத தடுப்பு, அன்னிய செலாவணி மோசடி தடுப்பு உள்ளிட்ட சட்டங்களின் கீழும் தண்டனை பெற்ற சிறைக் கைதிகளுக்கு இந்த பொது மன்னிப்பு பொருந்தாது.
பொதுமன்னிப்பு பெறும் கைதிகள் மூன்று தவணைகளாக விடுதலை செய்யப்படுவர். இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 10, அடுத்த ஆண்டின் காந்தி ஜெயந்தி ஆகிய நாள்களில் கைதிகள் விடுவிக்கப்படுவர்.
உடலில் 70 சதவீதத்துக்கு மேல் ஊனமுள்ள கைதிகள் தங்களது தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேல் அனுபவத்திருப்பின் அவர்களுக்கும் பொது மன்னிப்பு கிடைக்கும். அதேபோன்று, கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள கைதிகள் தங்களின் தண்டனைக் காலத்தில் மூன்றில் இரண்டு பங்கை அனுபவித்திருப்பின் பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்படுவார்கள்.
பொதுமன்னிப்பு திட்டத்தின் கீழ் விடுதலை பெற தகுதியுடைய கைதிகளின் பட்டியலை தேர்வு செய்வது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அந்தக் குழு அளிக்கும் பரிந்துரை பட்டியலுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பின் கைதிகள் விடுதலை செய்யப்படுவர்.
கரும்புக்கு குறைந்தபட்ச விலை உயர்வு
கரும்புக்கான குறைந்தபட்ச விலையை (எஃப்ஆர்பி) குவிண்டாலுக்கு ரூ.20 உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கும் குறைந்தபட்ச தொகை குவிண்டாலுக்கு ரூ.275-ஆக உயரும்.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில், 2018 அக்டோபர் முதல் 2019 செப்டம்பர் வரையிலான சந்தை ஆண்டில் கரும்புக்கான குறைந்தபட்ச விலையை குவிண்டாலுக்கு ரூ.20 உயர்த்த முடிவு செய்யப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
விவசாய செலவினம் மற்றும் விலை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கும் தொகை குவிண்டாலுக்கு ரூ.255-ஆக இதுவரை இருந்தது. இனி, இந்த தொகை ரூ.275-ஆக உயரும்.
No comments:
Post a Comment