Friday, July 27, 2018


கனவு மெய்ப்பட வேண்டும்

By நெல்லை சு. முத்து | Published on : 27th July 2018 01:15 AM | அ+அ அ- |

காலையில் கோயிலுக்குப் போனாயா? தேவாயலத்திற்குப் போனாயா? பள்ளிவாசலுக்குப் போனாயா? இப்படி எல்லாம் இன்றைய இளைஞனிடம் யாரும் கேட்க மாட்டார்கள். வேலைக்குப் போனாயா?' என்பதுதான் முக்கியக் கேள்வி ஆக இருக்கும். கல்வியும் தொழிலும்தான் இளைய பாரதத்தின் எதிர்பார்ப்பு. காந்தி, விவேகானந்தர் போன்று உலகம் புகழும் கலாம் கனவுக்கும் மரியாதை அளிப்போம். நம்மில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் வாக்கு அளித்தால் போதும். 10 சதவீத வாக்குகள் உடைய கட்சிகள் கூட, ஆட்சிப்பீடம் ஏறலாம். அதுவே 130 கோடி மக்களின் பிரதிநிதித்துவம் ஆகிறது. ஆனால், உண்மையிலேயே 130 கோடி மக்களின் வாக்கினைப் பெற்ற ஒரே பெருமகனார், மறைந்த ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்தான்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (ஜூலை 27) என் அருமை மாணவர்களே...' என்ற இறுதிச் சொற்களுடன் அவர் உயிர் நீத்தபோது, சாதி, மத, மொழி, இன பேதம் இன்றி, இந்தியர் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். அறிவியல் அன்றி வேறு எந்த ஒரு இயக்கமும் சாராத அவரின் காலம் ஒரு பொற்காலம் எனலாம். இளைய தலைமுறையினரிடையே அவர் ஏற்றி வைத்த எழுச்சித் தீபம் அணையாமல் காத்திட வேண்டும்.

அப்துல் கலாம், கற்றலால் படைப்பாற்றல் உண்டாகும். படைப்பாற்றலால் சிந்தனைத் திறன் வளரும். சிந்தனைத் திறன் அறிவைப் பெருக்கும். அறிவு சுடர் விட்டால் பொருளாதாரம் செழிக்கும்' என்று மைசூரில் நடந்த தேசிய இளைஞர் மாநாட்டில் கூறினார். செல்லும் இடம் எல்லாம் இதையே வலியுறுத்தினார் டாக்டர் கலாம்.இன்றைய கல்வி அமைப்பின் மூலம் படைப்பாற்றலை ஊக்கவிக்க வேண்டுமானால், ஆரம்பப் பாடங்களில் வெறும் கோட்பாட்டுச் சுமைகளைக் குறைக்க வேண்டும். நடுநிலைக் கல்வியின் போது அவற்றை ஓரளவு கற்பிக்கலாம். உயர் பட்டப் படிப்பில் அதிகம் ஆக்கலாம். அதன் மூலம், மாணவர்களிடையே புதிய தொழில்களில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். அதுவே பின்னாளில் அவர்கள் பணி தேடுபவர்களாக அல்லாமல், பணி வழங்குபவர்களாக உயரத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும்' - என்று புது தில்லியில் நடைபெற்ற கணினிசார் உயர்திறன் விருதுகள் வழங்கும் விழாவில் எடுத்துரைத்தார்.

அவருடைய கணிப்பில் படைப்பாற்றலுக்கு மூன்று பரிமாணங்கள் உண்டு. புதியன கண்டறிதல் (Inventions),, புதியன கண்டுபிடித்தல் (Discoveries), புதியன புனைதல் (Innovations) ஆகியவையே அவை. படிப்படியான சிறு மாற்றங்களால் நம் எண்ணங்களையும் தீர்வுகளையும் தொடர்ந்து செம்மையாக்கும் வழிமுறையே படைப்பாற்றல். உள்ளபடியே, படைப்பாற்றலின் முக்கிய அம்சம் இதுதான். ஒரு பொருளைப் பிறர் காண்பது போலவே பாருங்கள். ஆனால், சற்று வித்தியாசமாகச் சிந்தியுங்கள். இதுதான் கலாம் பாணி.
ஆண்டவன் மனித குலத்திற்கு வழங்கிய அருமையான கொடை அறிவியல். எதிலும் அடிப்படையினை ஆராயும் அறிவியலே சமுதாயத்தின் மூலதனம் ஆகும். ஆன்மிகத்துடன் கூடிய அறிவியலும் தொழில்நுட்பமுமே அறிவியல் - தொழில்நுட்பத்திற்கும் ஆன்மிகத்திற்கும் உரிய எதிர்காலத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் என்று புது தில்லி, ஜைன விசுவ பாரதி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் கூறினார்.

டாக்டர் கலாம், 2001-இல், குஜராத் மாநிலத்தில் உள்ள சாரங்பூரில் பிரமுக் சுவாமிஜியை சந்தித்தபோது, தமது தொலைநோக்கு - 2020' பற்றிக் குறிப்பிட்டாராம். இந்த இந்தியா - 2020 தொலைநோக்கின் முக்கிய ஐந்து அம்சங்களான உணவு, கல்வி - சுகாதாரம், உள் கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், வியூகம் வகுத்தல் ஆகியவை குறித்து அரசாங்கத்திடம் தெரிவிக்கிறேன். ஆனால், இந்த உன்னத இலக்கினை உணர்வுபூர்வமாக மதித்து நடக்கும் மக்களை உருவாக்குவது எப்படி' என்று கேட்டாராம். அதற்கு அந்த மகான், இந்தியாவின் வளர்ச்சிக்குத் தாங்கள் குறிப்பிட்ட ஐந்து அம்சங்களுடன் ஆறாவதாக இன்னொரு அம்சத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் கடவுள் நம்பிக்கை' என்றாராம்.

இந்தியா - 2020-இன் பலனை இனி வரும் தலைமுறையினரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஒருமுறை பன்னாட்டு அறிவியல் மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவரான டாக்டர் அப்துல் கலாம் ஆற்றிய அறிவியல், தொழில்நுட்ப விவரங்களைக் கேட்ட மேலை நாட்டு அறிவியல் மேதைகள், இந்தியர்கள் ஆகிய நீங்கள் இத்தகைய உன்னத விஞ்ஞானியினை முதல் குடிமகனாகப் பெற்று உள்ளீர்கள்' என்று பாராட்டினார்கள்.
ஆசிரமத்தின் பஜனையில் திரட்டிய பொதுப்பணத்தில் கொஞ்சம் குறைந்ததால் உறங்காத அண்ணல் காந்தி, தனது வாடகை வீட்டிற்குத் தனக்குத் தெரியாமல் இலவசமாக வழங்கப்பெற்ற குடிநீர்க் குழாயை அகற்றிய அந்நாள் முதல்வர் காமராஜர் போன்றோர் சென்ற நூற்றாண்டினர். இந்த 21-ஆம் நூற்றாண்டில், டாக்டர் கலாம் குடியரசுத் தலைவரான பின்னர், தாம் எழுதிய கடிதத்திற்குச் சொந்தச் செலவில் 40 ரூபாய் அஞ்சல் தலை ஒட்டி அனுப்பி இருந்தார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். உபதேசம் ஊருக்குத்தான்' என்று இல்லாமல், சொந்த வாழ்க்கையிலும் நன்னெறிகளைக் கடைப்பிடித்த முன்னோடி டாக்டர் கலாம். தர்ம உபதேசம் மட்டுமல்ல, தார்மிக எண்ணங்களும் உடையவர் டாக்டர் அவர்.

தவறு நடப்பதாக அறிந்தால் யாராயிருந்தாலும் தூக்கி எறிந்து விடுவார். ஒருமுறை மாணவர் சேர்க்கைக்கு சிபாரிசு கேட்டு வந்த நண்பர் ஒருவரிடம், உங்கள் பையனுக்கு இந்த வகையில் இடம் கிடைத்தால், தகுதிப் பட்டியலில் காத்து நிற்கும் திறன்மிகு மாணவர் ஒருவரின் இடம் போய்விடுமே' என்று தவிர்த்த நேர்மையாளர். ஊழல் அற்ற நிலை, உன்னத நடவடிக்கைகளால் பொருளாதாரத்திலும் மதிப்பிலும் நாட்டினை உயர்த்துவதே அவர் கனவு.
ஊழல்கள் என்பவை வெறும் பொருளாதார ஊழல்கள் மட்டுமே அல்ல. அருளாதார ஊழல்களும்தான். மடத் தலைவர்களும் சில நேரங்களில் கட்சித் தலைவர்கள் போலவே நடந்து கொள்கின்றனரே! கோயிலுக்குள் சிலை திருட்டு, கற்பழிப்பு, கொலை வழக்குகள், குடியிருப்புகளில் பாலியல் வன்முறைகள் என்றால் நம் புண்ணிய பூமியின் மதிப்பு உலக அரங்கினில் குறையத்தான் செய்யும்.

பாலியல் ஊழல்'களில் ஆன்மிகச் சார்பு உடையவர்கள் ஈடுபட்டதாக எழும் குற்றச்சாட்டுகள், நாட்டிற்கே இழுக்கு. இங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக, தண்டனை நடவடிக்கைகளே பிரதானம் ஆகின்றன. அதிலும் தடயங்கள், சாட்சியங்கள், ஆவணங்கள் மாயம். குற்றம் சாட்டப்பவர்கள் உள்நாட்டில், வெளிநாட்டில் தலைமறைவு. தடயங்களை அழிப்பதற்கு வசதியாக, மேலும் சில ஆண்டுகள் கால அவகாசம் யாவும் இயல்பாகக் கிடைக்கிறது.

இன்றைக்கு முக்கியச் சாட்சிகளின் மரணத்தில் மட்டுமல்ல, வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளின் மரணத்திலும் மர்மம் இருப்பதாகப் பலரும் ஐயம் எழுப்புகின்றனரே. குறிப்பிட்ட மதத்தினரிடையே உள்ள பெண்பால் வாக்குகளை ஆண்பால் வாக்குகளில் இருந்து பிரித்து எடுக்கும் அரசியல் வியூகங்கள் வீட்டிலும், நாட்டிலும் பிரிவினைக்கு வழிவகுக்குமே. நம் நாடு' என்ற ஒற்றுமைக் குரல் இன்று, எங்கள் தேசம்' என்ற முழக்கம் ஆகிறது. இந்தத் தொனி வேற்றுமையில் கசப்பான வரலாறு புதைந்து கிடக்கிறது.
அலெக்சாண்டர் தொடங்கி, பாரசீகத்தில் இருந்தும் வடக்கே வந்தார்கள் வென்றார்கள்'. மௌரியர்கள் கூட, தெற்கில் வடுகர்களின் எதிர்ப்புக்கு ஈடு கொடுக்க மாட்டாமல் பின்வாங்கி, ஹைதராபாத்துடன் நின்று போயினர். அராபியரின் இஸ்லாம் கொள்கைக்கு அஞ்சி இந்தியாவினுள் தஞ்சம் புகுந்த ஆதி ஈரானியர் வடக்கே வந்த பார்சிகள் ஆயினர். வாடியா, டாடா, கான், ஜஹாங்கிர், சொராப்ஜி, லால் போன்றோர் இவ்வகையினர்.
ஜவாஹர்லால், குல்சாரிலால், லால்பகதூர் போன்ற பல லால்' இனத்தவர் நாட்டின் பிரதமர் ஆகி உள்ளனர். இவர்கள் பார்சிகள் என்று சொல்லப் படுவதுண்டு. சிந்து மக்களை ஹிந்து' என்று உச்சரித்தனர். பாரத தேசம், ஹிந்துஸ்தான் ஆனது. ஆயின், இவர்களுக்கும் உருது இசுலாமியர்க்கும் இடையில் வடக்கே நிகழ்ந்த மோதல்கள் இன்றைய அரசியல் களத்தில் வேறு பரிமாணம் பெற்றுவிட்டதாகக் கருத இடம் உண்டு. தெற்கே இந்து - இசுலாமியர் பூசல் அவ்வளவாக இல்லை என்று தோன்றுகிறது. நேர்மாறாக, கல்வி என்பது தெற்கில் கள்ளிக்கோட்டையில் வந்த இறங்கிய கிறித்தவப் பாதிரிமார்களால் வடக்கே சென்றது.

ஏதாயினும், இன்றைய சூழலில் செப்பு மொழி ஒன்று உடையாள், எனில் சிந்தனை பதினெட்டு உடையாள்' என்ற நிலை வந்துவிடாமல் இருந்தால் சரி. சமீபத்தில் அமெரிக்கா வாழ் வட இந்தியர் ஒருவர் இங்கிலாந்து அரசியல் அரங்குகளில் போய் காலனிய ஆதிக்கத்தினை இந்தியா முறியடித்ததைப் பெருமையுடன் சிலாகித்துப் பேசினார். இருந்தாலும், எங்கள் நாட்டுக் கிரிக்கெட்டிற்கு நீங்கள் இன்றும் அடிமை' என்று நெற்றிப் பொட்டில் அடித்துச் சொன்னார் மேனாட்டு ஆட்சிமன்ற உறுப்பினர் ஒருவர். பிறகு என்ன? கிரிக்கெட்டு வீரருடன் சபதம் போடுவதும், பந்தயம் கட்டுவதும், சூதாட்டம் விளையாடுவதும் மட்டுமா? அவர்களை பாரத ரத்னா'க்கள் ஆக்கினோம். நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உயர்த்தினோம்.
கலாம் கண்ட கனவு, வளர்ந்த இந்தியா. அவர் காட்டிய தொலைநோக்கு, அறிவியல் - தொழில்நுட்ப வளர்ச்சி அல்லவா?

கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024