Thursday, July 19, 2018

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க  திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சம்மதம்
dinamalar 19.07.2018

புதுடில்லி: 'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க, தேவஸ்வம் போர்டு சம்மதம் தெரிவித்துள்ளது' என, கேரள அறநிலையத் துறை அமைச்சர், சுரேந்திரன் கூறியுள்ளார்.




கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின், பத்தனம் திட்டாவில் உள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால், 10 வயது முதல், 50 வயதுக்குட்பட்ட பெண்கள், அனுமதிக்கப்படுவதில்லை. பல நுாறு ஆண்டுகளாக, இந்த நடைமுறையை, கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு கடைபிடித்து வருகிறது.

இந்நிலையில், 'சபரிமலை கோவிலுக்குள், அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' எனக் கோரி, இந்திய இளைஞர் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மகளிர் அமைப்பினர்,உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

இது தொடர்பாக, கேரள அரசு சார்பில், 2016, நவ., 7ல் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'சபரிமலையில், அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க, அரசு தயாராக உள்ளது' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கு, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

'சபரிமலைக்கு செல்ல, பெண்களிடம் பாகுபாடு காட்டப்படுவது, அரசியல் அமைப்பு சட்டம் வழங்கி உள்ள, அடிப்படை உரிமைகளை மீறுவ தாகும்' என, உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் சார்பில் வாதாடப்பட்டது.

இது தொடர்பாக, மனுதாரர்கள் எழுப்பிய ஐந்து கேள்விகளை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி, 2017, அக்., 17ல் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, 5 நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு முன், நேற்று முன்தினம் துவங்கியது.வழக்கு விசாரணை, நேற்றும் நடந்தது. அப்போது, நீதிபதிகள் கூறிய தாவது:

அனைவருமே கடவுளின் படைப்பு என்கிற போது, எப்படி வேறுபாடு ஏற்படும். பக்தர்களிடம், ஆண் - பெண் என, வேறுபாடு காட்டப்படுவதை ஏற்க
முடியாது. வழிபாடு செய்வது, அனைவருக்கும் உள்ள சட்ட உரிமை.

குறிப்பிட்டவர்களை கோவிலுக்கு வரக்கூடாது எனக்கூறுவது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இதை மறுப்பது,அரசியல் சட்டத்துக்கு விரோத மானது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதற்கிடையில், கேரள மாநில அறநிலையத் துறை அமைச்சர், சுரேந்திரன், திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலை கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே, கேரள அரசின் நிலைப்பாடு. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும், மனு தாக்கல் செய்து உள்ளோம்.

இனி, இது பற்றி, உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவை ஏற்பது, நம் கடமை.சபரிமலையை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டும், அரசின் நிலையை ஏற்றுக் கொண்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024