Sunday, July 22, 2018

கேரளாவில் வரலாறு காணாத பருவ மழையால் மீன் மணக்கும் வயநாடு

Published : 22 Jul 2018 08:38 IST

ஆர்.டி.சிவசங்கர் உதகை



கேரள மாநிலத்தில் பெய்யும் தென் மேற்கு பருவ மழையால் வயநாடு மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. பனசூரா சாகர் அணை திறக்கப்பட்டதால் வெள்ள நீரில் ராட்சத மீன்கள் வெளியேறின. இவற்றை மக்கள் அள்ளிச் சென்றனர்.

இந்தாண்டு தென் மேற்கு பருவ மழை தமிழகம், கேரளா உட்பட பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது.

இதில், கேரள மாநிலத்தில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக வயநாடு மாவட்டம் வெள்ள நீரில் மிதக்கிறது. வரலாறு காணாத வகையில் வயநாடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 15 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், அப்பகுதியிலிருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

மக்களை தங்க வைக்க மானந்தவாடி தாலுகாவில் 16, வைத்திரி தாலுகாவில் 13 மற்றும் சுல்தான் பத்தேரி தாலுகாவில் 12 என மொத்தம் 41 முகாம்கள் அமைக்கப்பட்டன. இதில், 2000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டனர். நிலச்சரிவு அபாயம் உள்ளதால் வயநாடு மாவட்டத்தில் உள்ள குவாரிகள் செயல்பட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என வயநாடு மாவட்ட ஆட்சியர் ஏ.அஜய்குமார் தெரிவித்தார்.

தென் மேற்கு பருவ மழை காலத்தில் வயநாட்டில் சராசரியாக 1228.3 மி.மீ. மழை பதிவாகும் நிலையில், இது வரை 1160 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இந்தாண்டு கூடுதலாக 6 சதவீத மழை பெய்துள்ளது, மழை தொடரும் பட்சத்தில் கூடுதல் மழை பதிவாகும் என கேரள வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வயநாடு மாவட்டம் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் சுற்றுலா தலமாகும். கரலாட் ஏரி, காரமானாதோடு ஏரிகளில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. சுசிப்பாறை அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கபினி ஆற்றின் கிளை ஆறுகளான மானந்தவாடி, பானாமரம், நகு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தால், அங்குள்ள கயினி மற்றும் பனசூரா சாகர் நீர்த்தேக்கங்கள் நிறைந்துள்ளன. நீர்த்தேக்கங்கள் நிறைந்ததால், இவை திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் ஆர்ப்பரித்து வெளியேறுகிறது.

பல ஆண்டுகளாக இந்த நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்படாமல், இந்தாண்டு தான் உபரி நீர் வெளியேற்றப் படுகிறது. நீரில் ராட்சத கெண்டை மீன்கள் வெளியேறின. இதனால், மக்கள் ஆச்சரியத்துடன் மீன்களை பார்த்தனர். நீர்த்தேக்கங்களை ஒட்டியுள்ள வயநாடு, கல்பெட்டா, சுல்தான் பத்தேரி உட்பட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ராட்சத மீன்களை வேட்டையாடினர்.

அப்பகுதி மக்கள் கூறும் போது, ‘அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரில் ராட்சத கெண்டை மீன்கள் வெளியேறின. ஒவ்வொரு மீனும் சுமார் 5 முதல் 10 கிலோ வரை இருந்தது. நாங்கள் நீரில் இறங்கி கைகளாலேயே மீன்களை பிடித்தோம். இத்தகைய ராட்சத கெண்டை மீன்களை பார்த்தது ஆச்சரியம் தான்’ என்றனர்.

பெரும்பாலான மக்கள் மீன்களை வேட்டையாடியதால், வயநாடு மாவட்டமே மீன் மணம் கமழ்ந்தது.

No comments:

Post a Comment

Why Stalin-EPS war of words is bad for Vijay

Why Stalin-EPS war of words is bad for Vijay  STORY BOARD ARUN RAM 18.11.2024  James Bond’s creator Ian Fleming said: Once is happenstance. ...