Friday, July 27, 2018

நண்பர்களின் ஆலோசனையுடன் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்: திருப்பூரில் இளம்பெண் பரிதாப மரணம்

Published : 26 Jul 2018 12:19 IST

இரா.கார்த்திகேயன்

 


இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இளம் பெண் உயிரிழந்ததாகக் கூறி, இறந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் தம்பதியர் மீது நகர்நல அலுவலர் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

திருப்பூர் காங்கயம் சாலை புதுப்பாளையம் ரத்னகிரிஸ்வரர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (34). இவர் திருப்பூரில் உள்ள பின்னலாடை பையிங் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கிருத்திகா (28). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

தம்பதியருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 3 வயதில் டிமானி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கிருத்திகா மீண்டும் கர்ப்பம் தரித்தார். முதல் குழந்தையை கிருத்திகா மருத்துவமனையில் சுகப்பிரசவமாக பெற்றெடுத்தார். இரண்டாவது குழந்தைக்கு இயற்கை முறையில் சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.


கணவர் கார்த்திகேயனுடன் கிருத்திகா

இதையடுத்து கடந்த 22-ம் தேதி மதியம் கிருத்திகாவுக்கு பிரசவ வலி ஏற்படவே, கார்த்திகேயன் உடன் வேலை செய்யும் பிரவீன் மற்றும் அவரது மனைவியை அழைத்துள்ளார். அங்கு அவர்கள் உடனடியாக சென்ற நிலையில் கிருத்திகாவுக்கு 2-வது பெண் குழந்தை பிறந்தது. சில நிமிடங்களில் நினைவு திரும்பிய கிருத்திகாவுக்கு திடீரென ரத்தப்போக்கு அதிகரித்தது. திடீரென கிருத்திகா மயக்க நிலைக்கு செல்லவே 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் அளித்தனர்.

கிருத்திகாவை அழைத்துக்கொண்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிருத்திகா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது சடலத்தை எடுத்துக்கொண்டு திருப்பூர் எரியூட்டும் மையத்துக்கு எடுத்து சென்றபோது அங்கு மருத்துவர் சான்றிதழ் கேட்டுள்ளனர். இதையடுத்து திருப்பூர் ஊரக போலீஸாரிடம் கிருத்திகாவின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்தனர்.

தம்பதியர் ஊக்கம் - நகர் நல அலுவலர் புகார்:

இந்நிலையில் நகர் நல அலுவலர் க.பூபதி திருப்பூர் ஊரக போலீஸாரிடம் புதன்கிழமை புகார் அளித்து கூறியதாவது:

‘‘கிருத்திகாவின் கணவரான கார்த்திகேயனுடன் வேலை செய்யும் பிரவீன் மற்றும் லாவண்யா தம்பதியர் கிருத்திகாவை இயற்கை முறையில் கருத்தரிக்க ஊக்கம் அளித்து வந்துள்ளனர். இதனால் கிருத்திகா சம்பந்தப்பட்ட நகர்ப்புற சுகாதார நிலையத்தில் கூட சிகிச்சை எடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் பிரவீன், லாவண்யா தம்பதியர் முன்னிலையில் கிருத்திகாவுக்கு பிரசவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

பெண் குழந்தையும் மூன்றரை கிலோ எடையுடன் பிறந்துள்ளது. ஆனால் அதன்பின் நஞ்சுவை முறையாக வெளியேற்றாததால் ரத்தப்போக்கு அதிகமாகி உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை சிகிச்சையை தடுத்து நிறுத்திய பிரவீன், லாவண்யா தம்பதியர் மற்றும் இறந்த பெண்ணின் கணவரான கார்த்திகேயன் மீதும் ஊரக போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கிருத்திகாவின் தந்தை ராஜேந்திரன் கூறியதாவது:

இயற்கை மருத்துவ முறையில் பிரசவம் செய்ய வேண்டும் என கிருத்திகாவும், கார்த்திகேயனும் முடிவெடித்திருந்தனர். நண்பர்கள் சிலர் சொல்வதைக் கேட்டுத்தான் இயற்கை வைத்தியத்துக்கு மாறினர். இதனால் இருவரும் இயற்கை முறையில் பிரசவம் செய்ய முடிவெடுத்துவிட்டனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரவீனின் மனைவி லாவண்யாவுக்கும் வீட்டிலேயே சுகப்பிரசவம் நடந்துள்ளது. இந்த நிலையில் அதேபோன்று சுகப்பிரசவம் செய்துகொள்ள கிருத்திகா முடிவெடுத்தார். ஆனால் நானும் என் மனைவியும் வேண்டாம் என்று மன்றாடி பார்த்தோம். ஆனால் எங்களுக்கு தைரியம் சொன்னாள் என் மகள். சுகப்பிரசவம் செய்துகொள்ள வேண்டும் தீர்மானமாக இருந்தனர்.

யுடியூப் பார்த்து தான் பிரசவ வழிமுறைகளை கற்றுக்கொண்டனர். இது மாபெரும் தவறு. இனி இதுபோன்று பிரசவத்தை விளையாட்டாக நினைக்கக்கூடாது என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024