Friday, December 13, 2019

'நிர்பயா' கொலையாளி சீராய்வு மனு: விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

Added : டிச 13, 2019 01:13

புதுடில்லி: டில்லியில் மருத்துவ மாணவி 'நிர்பயா' பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து அக் ஷய் குமார் சிங் என்ற குற்றவாளி சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அது 17ல் விசாரணைக்கு வருகிறது.டில்லியில் மருத்துவ மாணவி நிர்பயா 2012ல் ஓடும் பஸ்ஸில் ஆறு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சித்திரவதை செய்து அவரை ஓடும் பஸ்ஸில் இருந்து தூக்கி வீசினர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் ராம் சிங் என்பவர் சிறையில் தற்கொலை செய்தார். ஒரு சிறுவன் மீது சிறார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மூன்று ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் இருந்த அவர் தற்போது விடுதலையாகி உள்ளார்.இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பவன் குப்தா, அக் ஷய் குமார் சிங், வினய் சர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை டில்லி உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தன. இவர்களுக்கான தண்டனையை விரைந்து நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில் அக் ஷய் குமார் சிங் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீது 17ம் தேதி விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று குற்றவாளிகள் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு தள்ளுபடி செய்திருந்தது.

தயார் நிலையில் சிறை

இதற்கிடையே டில்லி திஹார் சிறையில் இந்த நால்வரும் அடைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இங்கே பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் அப்சல் குருவுக்கு கடைசியாக 2013ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.தற்போது தூக்கு தண்டனையை நிறைவேற்றும் 'ஹேங்மேன்' எனப்படும் ஊழியர் இல்லை. அதையடுத்து மற்ற சிறைகளின் உதவியை திஹார் சிறை நிர்வாகம் கேட்டுள்ளது.நால்வருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என 15 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த தலா ஒருவரும் கடிதம் அனுப்பி உள்ளனர்.

டில்லி குருகிராம், மும்பை, சத்தீஸ்கர், கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து வாய்ப்பு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.தற்போது திஹார் சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 12 கைதிகள் உள்ளனர். இதில் நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தான் முதலில் தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக சிறை நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பீஹாரின் பக்சார் சிறையில் இருந்து 10 தூக்கு கயிறுகள் வரவழைக்கப்பட்டுள்ளன.தண்டனை நிறைவேற்றப்படும் சிறை எண் 3-ல் உள்ள தூக்கு மேடை பகுதியும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

'துாக்கிலிடத் தயார்'
திஹார் சிறை நிர்வாகத்திடம் இருந்து உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சிறை நிர்வாகத்துக்கு சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.அதில் 'அனைத்து வாய்ப்புகள் முடிந்த நிலையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டியுள்ளது. தங்களுடைய சிறையில் உள்ள இரண்டு ஹேங்மேனை அனுப்பி வைக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. ஆனால் யாருக்கு இந்த தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என்பது தெரிவிக்கப்படவில்லை.

'மிகக் கொடூர குற்றம் செய்துள்ள நிர்பயா குற்றவாளிகள் உயிருடன் இருக்க தகுதியற்றவர்கள். அவர்களுக்கான தண்டனையை நிறைவேற்ற தயாராக உள்ளேன்' என மீரட் சிறையின் ஹேங்மேனான பவன் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024