'போதை' நகரமாக மாறி வருகிறது, 'கோவில்' நகரம்! : அமைதி காக்கும் போலீசார் மீது, 'ஆக் ஷன்' அவசியம்
Added : டிச 14, 2019 22:28
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான, கோவில் நகரமாக விளங்கும் திருத்தணியில், தற்போது, கஞ்சா விற்பனை, அமோகமாக நடப்பதால், போதை நகரமாக மாறி வருகிறது.
கஞ்சா விற்பனையை தடுக்காமல், கைகட்டி வேடிக்கை பார்க்கும் போலீசார் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ளது திருத்தணி. தமிழ் கடவுள் முருகப் பெருமானின், ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக, சுப்ரமணிய சுவாமி இங்கு எழுந்தருளி உள்ளார்.இதனால், கோவில் நகரம் என்ற பெருமை அடைந்த திருத்தணி, தற்போது கஞ்சா விற்பனை செய்யும், 'போதை' நகரமாக மாறி விட்டதாக, சமூக ஆர்வலர்களும், ஆன்மிகர்களும் ஆதங்கப்படுகின்றனர். அந்தளவிற்கு, நகரின்,மூலை, முடுக்குகளில் எல்லாம், கஞ்சா பொட்டலங்கள் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
எங்கிருந்து வருது?
தமிழகம் முழுவதும், 'சப்ளை' செய்யப்படும் கஞ்சா, ஆந்திர மாநிலத்தில்இருந்து, திருத்தணிக்கும் வருகிறது. அதுவும் மொத்தமாக அனுப்பாமல், சில்லரையாக, பொட்டலங்களில் மடிக்கப்பட்டே அனுப்பப்படுகிறது. இது குறித்து, கஞ்சா விற்பனையை நன்கு அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:ஆந்திர மாநிலம், நகரி மண்டலத்திற்கு உட்பட்ட, ஓ.ஜி.குப்பம் கிராமத்தில், கஞ்சா விற்பனை சத்தமின்றி, கனஜோராக நடக்கிறது. கஞ்சாவை, 10 கிராம், 20 கிராமாக பொட்டலங்களில் மடித்து, பெண்களிடம் கொடுத்து, விற்பனை செய்கின்றனர்.அவர்கள், கை பையில் மறைத்து, ரயில் மற்றும் பஸ்களில், பயணியர் போல், திருத்தணிக்கு வந்து, இங்குள்ள வியாபாரிகளிடம் சேர்க்கின்றனர். ரயில் அல்லது பஸ்களில் புறப்பட்டதும், திருத்தணியில் உள்ள வியாபாரிகளுக்கு, மொபைல் போன் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
விற்பனை எங்கே?
ரயில் நிலையத்திற்கு வரும் வியாபாரிகள், பெண்களிடம் கஞ்சா பொட்டலங்களை வாங்கி, மின்னல்போல் பறந்து விடுகின்றனர்.கையில் கஞ்சா பொட்டலங்கள் கிடைத்ததும், திருத்தணி கமலா தியேட்டர் ரயில்வே நடைமேம்பாலம், நேரு நகர், பெரியார் நகர், நந்தி ஆற்றின் கரையோரம்உள்ள வீரட்டீஸ்வரர் கோவில் அருகில், முருகப்ப நகர், எம்.ஜி.ஆர்.நகர் பழைய வேளாண் துறை கட்டடம் உள்ளிட்ட இடங்களில், விற்பனை களை கட்டுகிறது.அதேபோல, கே.ஜி.கண்டிகை பஜாரில் இருந்து, எஸ்.அக்ரஹாரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டில், பெண் ஒருவர், கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.இவரிடம், இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் அதிகளவில் வந்து, கஞ்சா வாங்கி, தங்கள் எதிர்காலத்தை இழந்து தவிக்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
திருத்தணியில் நடந்து வரும் கஞ்சா விற்பனையை, போலீசார் கண்டும், காணாமல், கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். எனவே, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து, கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை, கூண்டோடு பிடிக்க வேண்டும்.அவர்களுக்கு துணைபோகும் காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தனிப்படை வேட்டை
இது குறித்து, திருத்தணி டி.எஸ்.பி., - ஆர்.சேகர் கூறியதாவது:வீரட்டீஸ்வரர் கோவில் அருகே, கஞ்சா விற்பனை செய்த மூன்று வாலிபர்களை, 45 நாட்களுக்கு முன் கைது செய்தோம். மேலும், கஞ்சா விற்பவர்கள் யார்; அதை பயன்படுத்துவோர் யார் என்று கண்டறிய, என் தலைமையில், போலீஸ் தனிப்படை அமைத்து, திருத்தணி முழுவதும் கண்காணித்து வருகிறோம்.சில கல்லுாரி மாணவர்கள், ரயிலில் திருத்தணிக்கு வந்து, கஞ்சா உபயோகப் படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது.கஞ்சா அடிக்கும் கல்லுாரி மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். தற்போது, திருத்தணி பகுதியில், கஞ்சா பொட்டலங்கள் மொத்தமாக எடுத்து வந்து விற்கப்படுவதில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
'மனநலம் பாதிக்கும்; புற்றுநோய் தாக்கும்'
கஞ்சா அடிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர், கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா போதையால், மன ரீதியாக பாதிப்புகள் வரும். அதனால் குழப்பம் ஏற்படுவதுடன், எந்த வேலையையும் செய்ய தோன்றாது. பசி இருக்காது என்பதால், உடல் ரீதியான பாதிப்புகள் அதிகரிக்கும். புகையிலை பயன்படுத்தி, கஞ்சா அடிப்பதால், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. கஞ்சாவுக்கு அடிமையானவர்கள், அதிலிருந்து மீள்வதற்கு, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.பூர்ணா சந்திரிகா, இயக்குனர், கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம்கஞ்சா வினியோகிப்பது எப்படி?ஆந்திர மாநிலத்தில், கஞ்சா செடிகளை உற்பத்தி செய்து, பின், கஞ்சா இலையை துாள்களாக தயாரித்து, பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்டு, கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. அங்கு கஞ்சாவை, 10 கிராம், 20 கிராம் என, பொட்டலங்களாக கட்டி, தமிழக- - ஆந்திர மாநில எல்லையான நகரி பகுதியில், சிலருக்கு சப்ளை செய்யப்படுகிறது.பின், திருத்தணி மற்றும் எல்லையோர கிராமங்களில் உள்ள சிலர் வழியாக, கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. கஞ்சா விற்பவர்கள், 10 அல்லது 20 பாக்கெட்டுகளை, பைகளில் மறைத்து, இளைஞர்கள், மாணவர்களுக்கு விற்கின்றனர்.தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல், ஒவ்வொரு நாளும், ஒரு நேரம் ஒதுக்கி, தேவைப்படும் இளைஞர்களை, மொபைல் போன் வாயிலாக அழைத்து, விற்பனை செய்கின்றனர்.
இதனால், இக்கும்பலை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.8 மணி நேரம் போதை திருத்தணி ரயில் நிலையம் அருகே, ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் பெண் ஒருவர், வாடிக்கையாக, இளைஞர்கள், மாணவர்களுக்கு, ரகசியமாக கஞ்சா விற்று செல்வதாக கூறப்படுகிறது. 10 கிராம் கஞ்சா பாக்கெட், 100 ரூபாய்; 20 கிராம் கஞ்சா பாக்கெட், 200 ரூபாய் என, விற்கப்படுகிறது அதே போல, வேலுார் மாவட்டம், அரக்கோணம் தாலுகா, அமீர்பேட்டை, அரக்கோணம் ஆகிய பகுதிகளிலும், கஞ்சா விற்கப்படுகிறது. திருத்தணியில் சிலர், இருசக்கர வாகனங்களில் சென்று, ஒரு பொட்டலம், 50 ரூபாய்க்கு வாங்கி, திருத்தணியில், 100 ரூபாய்க்கு விற்கின்றனர் கஞ்சா உபயோகிக்கும் பெரும்பாலான இளைஞர்கள், சிகரெட்டில் கஞ்சா துாள்களை சேர்த்து உபயோகிப்பதால், ஆறு முதல், எட்டு மணி நேரம் வரை போதை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மதுபானங்களை விட, கஞ்சாவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.6 மாதங்களில் 12 பேர் கைதுதிருத்தணி காவல் நிலைய எல்லையில், பல்வேறு வழக்குகளில் மர்ம நபர்கள் பிடிபடும்போது, பெரும்பாலானோர், கஞ்சா போதைக்கு அடிமையாகி இருப்பது தெரிய வருகிறது.
கடந்த வாரம், மொபைல் போன் பறிக்கும் கும்பலை பிடித்தபோது, அவர்களிடம் கஞ்சா பொட்டலங்களும் இருந்தன. இதையடுத்து, போலீசார் அவர்களை, கஞ்சா வழக்கில் கைது செய்தனர். இப்படி, ஆறு மாதங்களில், 12 பேர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், கஞ்சா வியாபாரிகள் யாரும் இதுவரை சிக்கவில்லை.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment