Sunday, December 15, 2019

மன உளைச்சலில், 'நிர்பயா' குற்றவாளிகள் ; திஹார் சிறையில் பாதுகாப்பு தீவிரம்

Updated : டிச 15, 2019 00:51 | Added : டிச 15, 2019 00:03


புதுடில்லி : 'நிர்பயா' வழக்கில், துாக்கு தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கும் நான்கு குற்றவாளிகளும், கடும் மன உளைச்சலில் இருப்பதால், அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012 டிசம்பரில், கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, மருத்துவமனையில் இறந்தார். இந்த வழக்கில், அக் ஷய், முகேஷ், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகியோருக்கு, 2017ல், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் எந்த நேரத்திலும் துாக்கிலிடப்படலாம் என்ற நிலையில், குற்றவாளி அக் ஷய் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், துாக்கு தண்டனையை எதிர்பார்த்து, டில்லி திஹார் சிறையில் காத்திருக்கும் நான்கு குற்றவாளிகளும், கடும் பதற்றத்துடனும், மன உளைச்சலுடனும் காணப்படுவதாகவும், அவர்கள் உணவு உட்கொள்ளும் அளவு, வழக்கத்தை விட, மிகவும் குறைந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து, இவர்கள் தங்களை தாங்களே காயப்படுத்திக் கொள்ளவோ, தற்கொலை முயற்சியில் ஈடுபடவோ கூடாது என்பதால், ஒவ்வொரு குற்றவாளியையும், தலா நான்கு முதல், ஐந்து போலீசார் வரை, 24 மணி நேரமும், சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், நான்கு குற்றவாளிகளும், நேற்று முன் தினம், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் நால்வரின் அடையாளத்தையும், நீதிபதி உறுதி செய்தார்.

ஆண் நண்பர் மீது வழக்கு பதிய மனு!

நிர்பயா வழக்கில், துாக்கு தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கும் நான்கு குற்றவாளிகளில், பவன் குப்தா என்பவரது தந்தை, டில்லி நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:நிர்பயா பாலியல் பலாத்கார சம்பவத்தின் போது, அவருடன் இருந்த ஆண் நண்பரின் வாக்குமூலம், இந்த வழக்கின் தீர்ப்பில், முக்கிய பங்காற்றியது. சம்பவம் நடந்த பின், அந்த நபர், பணம் பெற்று, 'டிவி' சேனல்களுக்கு பேட்டி கொடுத்து உள்ளார்.

இப்படிப்பட்ட நபர், பொய் சாட்சியம் கூறியிருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இவர் மீது, போலீசார் வழக்கு பதிய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.'இந்த வழக்கை, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது குறித்து, வரும், 20ல் முடிவு செய்யப்படும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024