Thursday, November 6, 2014

அட்மின் அட்டகாசம்!



தீபாவளி விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தபோது, தெரிந்த இளைஞனிடம் ''காலேஜ் முடிச்சு ரொம்ப நாளாச்சே... என்ன பண்றே?'' என்றேன்.

''அட்மினா இருக்கேன்...'' என்று பதில் வந்தது.

''எந்த கம்பெனியில?'' என்றேன்.

''கம்பெனியா? ஹா ஹா, அதெல்லாம் இல்லை... வாட்ஸ்அப்புல ஏழு குரூப்புக்கு அட்மினா இருக்கேன்'' என்றான் அசால்ட்டாக.



கோலிகுண்டு சீசன், பம்பரம் சீசன், கிட்டிப்புள் சீசன் போல முன்பு ஃபேஸ்புக்கில் கமென்ட் போட்டு அதிக லைக் வாங்க வேண்டுமென்று வெறி பிடித்து அலைந்தவர்கள் சிலர். இப்போது வாட்ஸ்அப்பிலும் கொலைக்குத்தை ஆரம்பிக்கிறார்கள்.

ஒருபக்கம் முக்கியமான தகவல்களை பரப்புவது, ஆபத்து காலங்களில் உதவுவது என்று வாட்ஸ்அப்பால் பல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த அட்மின் அட்டகாசம் தொடர்கிறது.

கொக்கி குமாரு, பக்கி பாஸ்கரு என்று வயலன்ட் கேங்குகள் போல இவர்களும் வாட்ஸ் குரூப்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். உருப்படியான தகவல்களைப் பரிமாறுகிறார்களா என்றால் இல்லை. மொக்கை ஸ்டேட்டஸ்களையும் கேட்டு புளித்துப்போன பொன் மொழிகள், ஜோக்குகளையும் போட்டு கொலையாய்க் கொல்லு கிறார்கள்.

''எங்க வீட்டு வாசலில் குப்பை, நகராட்சி அள்ளவில்லை'' என்று போட்டோவை ஷேர் செய்து குரூப்பிலிருக்கும் அனைவரின் செல்லையும் குப்பையாக்குகிறார்கள். உண்மையில் அந்தக் குப்பையை போட்டதே அந்த வாட்ஸ் அப் அட்மின் ஆறுமுகமாகத்தான் இருக்கும். டாஸ்மாக் பாரில் உட்கார்ந்துகொண்டு ''கே எஃப் பீர் கிடைக்கல, பிரிட்டிஷ்தான் கிடைச்சது. உங்க ஏரியாவுல கிடைக்குதா?'' என்று பாட்டிலையும் கண்றாவி சைட் டிஷ்ஷையும் போட்டோ எடுத்து ஷேர் செய்வது என்று வாட்ஸ்அப்பை, நம் ஊரிலுள்ள பார்களிலிருக்கும் வாஷ்பேசின் போல் ஆக்கி விட்டார்கள்.

இதாவது பரவாயில்லை. பண்டிகை தினத்தன்று ''மட்டன் வாங்கிவிட்டோம், இன்னும் சமைக்கலை'' என்று குளோசப்பில் அந்த மட்டனைக்காட்டி செல்போனைப் பதறவிடுகிறார்கள். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பா!

இதைவிட காமெடி, சிலர் ரமேஷ் ஃப்ரெண்ட்ஸ், சுரேஷ் ஃப்ரெண்ட்ஸ், கருவைக்காட்டு நண்பர்கள், பிணந்தின்னி குரூப்ஸ் என்று ஆரம்பிப்பார்கள். இவர்கள் பின்னால் ஒரு குரூப் சேர்ந்தவுடன் அட்மினே அதிலிருந்து விலகிப்போய்விடுவார். ஏன் குரூப் துவக்கினார், ஏன் விலகினார் என்று யாருமே அறிந்துகொள்ள முடியாது. அதனால், அவருக்கு அடுத்ததாக அதில் இணைந்தவர் ஓ.பி எஸ் மாதிரி அடுத்த அட்மினாகி விடுவார்.

'’ஏய்...நீ, வாட்ஸ்அப் குரூப் நடத்துறியா, போலீஸ்ல மாட்டப்போறே, உங்க வாட்ஸ்அப் தகவல்களை எல்லாம் அமெரிக்க உளவுத் துறையிலேர்ந்து அண்டார்டிகா உளவுத் துறைவரை வாட்ச் பண்ணுகிறார்கள். நம் ஊர் போலீஸ் ஸ்டேஷன்ல இதை ரெக்கார்டு பண்ணவே ஒரு டீம் இருக்கு. உன் குரூப்புல உள்ளவன் எவனாவது வில்லங்கமான மேட்டரை அதுல ஏத்திவிட்டான்னா, அவனைப் பிடிக்க மாட்டாங்க. அட்மினான உன்னைத்தான் பிடிப்பாங்க. சமீபத்துல ஜம்மு காஷ்மீர்ல பல பேரை பிடிச்சு குண்டாஸ்ல போட்ருக் காங்க என்று விளையாட்டாக ஓட்டுவதைக் கேட்டு நம் அப்பிராணி அட்மின் கதி கலங்கிவிடுவார். அதோடு அவர் ஆரம்பிச்ச குரூப்பிலிருந்து அவரே நைசாக விலகிவிடுவார். இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது பல பேருடைய கதை.

வருகிற மெசேஜை அப்படியே காப்பி பண்ணி அடுத்த குரூப்பில் போடும் என் நண்பன், ''காபி டூ பேஸ்ட் செய்த விரலை செல்லில் மட்டுமல்ல, வேறு எந்த இடத்தில் வைத்தாலும் அந்த மெசேஜ் பதிவாகிறது'' என்கிறான். எல்லாம் ஒரு மனப்பிராந்திதான்.

இன்னும் சிலபேர் 60 குரூப்களில் இருக்கிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால், அவர்களுடைய செல்போன் சத்தம் போடாமல் ஒரு நிமிடம்கூட இருந்ததில்லையாம். மாத்தி மாத்தி ஒரே மெசேஜை 60 குரூப்களும் அனுப்பி அவரை டார்ச்சர் செய்கிறார்களாம். இதனால் செல்லை அவ்வப்போது ஆஃப் பண்ணிவிடுகிறார். இன்னும் சில வாட்ஸ்அப் குரூப்களில் குட்மார்னிங் மெசேஜ் சொல்லியே கொலவெறி ஏற்றுகிறார்கள்.

என்ன டெக்னாலஜி வந்தாலும் இந்த இம்சை அரசன்கள் தொல்லை தாங்க முடியலையேப்பா!

செ.சல்மான்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024