நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெறிநாய்களால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
சென்னை, புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பாடி, கொரட்டூர், முகப்பேர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், பூந்தமல்லி, மதுரவாயல், போரூர், செங்குன்றம், புழல், மாதவரம், திருவொற்றியூர், எண்ணூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், குரோம்பேட்டை, அனகாபுத்தூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. இவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
பாஸ்ட் புட் மற்றும் இறைச்சி கடைகளில் கிடைக்கும் மிச்சம் மீதியுள்ள மாமிச கழிவுகளை சாப்பிடும் தெரு நாய்கள் நாளடைவில் கிருமிகளால் தாக்கப்பட்டு வெறிநாய்களாக மாறி விடுகிறது. இவை இரவு பகல் பாராமல் தெருக்களில் வெறி கொண்டு திரிகின்றன. இரவு நேரங்களில் வேலை முடிந்து இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பும் தொழிலாளர்களை விரட்டி விரட்டி கடிக்கின்றன. கடைக்கு செல்லும் பெண்கள், முதியோர், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் நாய்களின் தொல்லைக்கு ஆளாகின்றனர். தொல்லை தரும் நாய்களை ஊசி மற்றும் விஷம் வைத்து கொல்லக் கூடாது என மிருகவதை சட்டம் உள்ளது. அதையும் மீறி கொன்றால் புளுகிராஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனவே மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் மூலம் இனப்பெருக்கத்தை தடுக்கிறார்கள்.
அப்படி இருந்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. கடந்த 2009ல் நாய்க்கடிக்கு 9 பேர், 2010ல் 12 பேர், 2011ல் 21 பேர், 2012ல் 28 பேர், 2013ல் 33 பேர், 2014ல் இதுவரை 36க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மாநகராட்சி, நகராட்சிகளில் புகார் செய்தாலும் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை வந்து லாரியில் நாய்களை பிடித்து செல்கின்றனர். பின்னர் அவற்றை காட்டு பகுதிகளில் விட்டு விடுகின்றனர். இந்த இடைவெளியில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது. நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வதால் அவை முன்பைவிட வெறி கொண்டு அலைகின்றன. இதனால் மக்களை விரட்டி கடிக்கின்றன.
மாநகராட்சி, நகராட்சி சுகாதார மையங்களில் நாய்க்கடி, பாம்புக் கடிக்கு ஊசி மருந்து இல்லை. புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்று தான் சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமானால் ஏழை மக்களுக்கு பணம் அதிகம் செலவாகும் என்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் மட்டும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன.
அவற்றை அவ்வப்போது பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்து வருகிறோம். வருடத்துக்கு 60,000 நாய்களுக்கு மேல் கருத்தடை ஆபரேஷன் செய்கிறோம் என்றனர்.
எனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொல்லை தரும் வெறிநாய்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்க்கடி, பாம்புக் கடிக்கு சுகாதார மையங்களில் ஊசி மருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
No comments:
Post a Comment