Thursday, July 9, 2015

'வியாபம்' என்கிற மரண வளையம்!

தில்லியிலுள்ள விடுதி ஒன்றில் ஜபல்பூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அருண் சர்மா மர்மமான முறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்து கிடந்தார். இவருக்கு முன்னால் முதல்வராகப் பணியாற்றிய டாக்டர் டி.கே. சகல்லேவும் மர்மமான முறையில்தான் மரணமடைந்தார் என்பதுதான், இந்த மரணம் பற்றிய ஐயப்பாட்டை அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி டாக்டர் சகல்லேவின் உடல் தீக்காயங்களுடன் அவரது வீட்டில் காணப்பட்டது அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.

டாக்டர் அருண் சர்மா மர்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை இறந்தார் என்றால், அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை, அக்ஷய் சிங் என்கிற தொலைக்காட்சி சேனல் நிருபருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு, வாயில் நுரை தள்ளி, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரணமடைந்தார். மர்மமான முறையில் 2012-ஆம் ஆண்டு இறந்த நம்ரதா தமோர் என்கிற மாணவியின் சடலம் ரயில்வே தண்டவாளம் அருகில் மீட்கப்பட்டது தொடர்பாக அவரது பெற்றோர்களைப் பேட்டி காணச் சென்ற இடத்தில்தான் அக்ஷய் சிங் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

டாக்டர் அருண் சர்மா, டாக்டர் சகல்லே, நம்ரதா தமோர், அக்ஷய் சிங் ஆகியோர் உள்பட இதுவரை மர்மமான முறையில் மரணமடைந்திருக்கும் 46 பேருக்கும் ஒரு தொடர்புண்டு. இவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தையும், இந்தியா முழுமையையும் உலுக்கிக் கொண்டிருக்கும் "வியாபம்' முறைகேட்டுடன் தொடர்புடையவர்கள்.
இந்நிலையில், தேர்வு வாரியத்தால் காவல் துறை உதவி ஆய்வாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு, சாகர் மாவட்ட பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த அனாமிகா சிகர்வார் (25) என்ற இளம்பெண், அந்த மையத்தை ஒட்டிய ஏரியில் சடலமாகத் திங்கள்கிழமை மீட்கப்பட்டார். அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்றும் அவர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு இல்லை என்றும் காவல் துறையினர் கூறினாலும், அவரது மரணம் வியாபம் முறைகேடு சர்ச்சையை மேலும் கடுமையாக்கி இருக்கிறது.
இதுவரை, வியாபம் முறைகேட்டுடன் தொடர்புடைய குற்றவாளிகள், சாட்சிகள் உள்ளிட்ட 46 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்று வரும் மாநில சிறப்புப் புலன் விசாரணைக் குழுவின் அறிக்கையின்படி அதில் 23 மரணங்கள் இயற்கையான மரணங்களல்ல. இறந்தவர்களில் பெரும்பாலானோர் சாலை விபத்தில் மரணமடைந்திருப்பதாகவும், அவர்கள் 25 முதல் 30 வயதுக்குள்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. 

வியாபம் முறைகேடு என்பது 2007-ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. இதுபற்றிய உண்மைகள் 2013-இல்தான் வெளியாகின. வியவசாயிக் பரிக்ஷா மண்டல் அல்லது "வியாபம்' என்பது, நமது அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் போன்ற ஓர் அமைப்பு. மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு, காவல் துறைப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள், அரசுப் பணி ஊழியர்கள் ஆகியோருக்கான தேர்வு போன்றவற்றை நடத்தித் தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் "வியாபம்' அமைப்பின் பணி.

2007-ஆம் ஆண்டு சில முறைகேடுகள் வெளிவந்தபோது முதல்வர் சிவராஜ் சிங் செüஹான் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணை வளையம் விரிவுபட்டபோதுதான், நுழைவுத் தேர்வுகளிலும், நியமனங்களிலும் எந்த அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்று வந்தன என்பது வெளிப்படத் தொடங்கியது. மாநில ஆளுநர் அலுவலகத்திலிருந்து பல்வேறு அரசுத் துறைகளும் அமைப்புகளும் இந்த முறைகேட்டில் துணை போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏறத்தாழ ரூ.2,000 கோடிக்கும் அதிகமாகக் கையூட்டுப் பரிமாற்றம் நடந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. மாநில காவல் துறை சுமார் 2,000 பேரைக் கைது செய்திருக்கிறது. மேலும், 700 பேர் தேடப்படுகிறார்கள். இதில் பல அரசியல்வாதிகளும் மூத்த அதிகாரிகளும் அடங்குவர். ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் வரை இதில் சம்பந்தப்பட்டிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியில் "வியாபம்' முறைகேட்டால் நடத்தப்பட்டிருக்கும் தவறான மாணவர் சேர்க்கையை விசாரிக்கத் தொடங்கியதன் விளைவாகத்தான் அதன் முதல்வர் டாக்டர் சகல்லே எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என்று சந்தேகப்படுகிறார்கள். ரயில்வே தண்டவாளத்தின் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நம்ரதா தமோர் என்கிற பெண் வியாபம் முறைகேட்டுடன் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி, இந்த முறைகேடு பற்றிய விசாரணையில் முக்கிய சாட்சியாகவோ, குற்றவாளியாகவோ இருப்பவர்கள் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் இறந்து வருகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது
.
உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணையை மீறி, மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் தனக்கில்லை என்கிற மத்தியப் பிரதேச முதல்வரின் வாதத்தில் தவறில்லை. அதேநேரத்தில், மத்தியப் பிரதேச அரசே உயர்நீதிமன்றத்திடம் விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கக் கோருவதில் என்ன தவறு இருக்க முடியும்? 

முறையான விசாரணை நடத்தப்படுமேயானால், இந்தியாவிலுள்ள அத்தனை மாநிலங்களிலும் "வியாபம்' வியாபித்திருக்கும் என்பதுதான் சொல்லக் கூடாத, சொல்ல முடியாத உண்மை!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024