Thursday, July 9, 2015

சின்னக் கவலைகள் தின்னத் தகாது By கிருங்கை சேதுபதி

நம்மில் பலருக்குப் பொழுது புலரும்போது விழிப்பு வருகிறதோ இல்லையோ, விதவிதமான கவலைகள் முளைத்துவிடுகின்றன. கவலைப்படுவதற்கு ஒன்றுமேயில்லையே என்று கவலைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள்.
கவலைப்படுவதற்கு எத்தனையோ இருக்க, எனக்குக் கவலைகள் குறித்த கவலைகளே அதிகம்.
கொஞ்சம் செவிகொடுத்து விட்டால், நெஞ்சு கொள்ளாத அளவுக்குத் தத்தம் கவலைகளை இறக்கிவைத்துவிட்டுக் கவலையில்லாமல் போய்விடுவோர் கணக்கற்றோர். அதுவும் அந்தச் சமயம்தான். அடுத்தும் அவர்கள் கவலைகளைக் கொண்டு வந்து கொட்டிவிட வருவார்கள்.
மனக் கவலை மாற்றத் துணையாகும் தாள் உடையான், தனக்குவமையில்லாதான் என வள்ளுவர் விளக்கிக் காட்டிய கடவுள் யார் எனப் பலருக்குக் கவலை?
இருக்கிறாரா என்று ஐயுறுகிற பக்தர்களையும், இருப்பாரோ என்று எண்ணுகிற நாத்திகர்களையும்விட, இன்மையும் இருப்பையும் தாண்டி உண்மையைத் தேடுவார் உள்ளார்களா என்று கடவுளுக்கே கவலை தருகிற காலம்.
இதில், சூழல் சீர்கேடு, ஒழுக்கக்கேடு, ஊழல் முதலாச் சமுதாய நிலைகேடு குறித்த பெருங்கவலைகளுக்கு முன்னர் அற்பத்தனமான சின்னக் கவலைகள்தாம் அணுஅணுவாய் நம்மைத் தின்று கொண்டிருக்கின்றன.
சர்க்கரை நோய் வந்தவர்களைவிடவும், வரப் போகிறதே என்று கவலைப்படுபவர்களே அதிகம்.
பொதுவாய், மழை வர வேண்டும் என்று மனதாரப் பிரார்த்திக்கிறவர்கள்கூட, மழை வந்துவிடுமோ என்று எண்ணி நைகிறவர்களாக இருக்கிறார்கள், குடைகள் போன்ற உடைமைகள் இருந்தும்.
எதையும் முன்கூட்டியே எண்ணித் திட்டமிடுகிறவர்களைவிட, என்னென்ன நிகழப் போகின்றனவோ எனக் கற்பனை செய்து கொண்டு கவலைப்படுவோர் பலர். அவர்கள் வாழ்வில் அவை அப்படியே நிகழ்ந்துவிடுவதும் உண்டு. காரணம், அவர்களின் ஜாதகம் அப்படியில்லை. எண்ணத்தில் வலிமையென்று தெரியாமல், என்னென்னவோ பரிகாரங்கள் செய்வார்கள். அதனாலும் பலன் கிட்டாமல் போகுமோ என்கிற கவலையும் இவர்களுக்கு உண்டு.
இவர்கள்தான் கவலைகளைப் போக்க, இரு கரம் கூப்பி, இறைவனின் சந்நிதி முன் நின்று வழிபடும் வேளையில், ஆலயத்தின் வாசலில் கழற்றிவிட்ட செருப்புகள் களவு போய்விடுமோ என்று கவலைப்படு
பவர்கள்.
இப்படி எடுத்துச் சொல்லி முடியாத எத்தனையோ கவலைகளுக்கென்றே வாழ்க்கைப்பட்டவர்களுக்கு எதிர்காலமும் பய மயமே. எதனைக் கண்டாலும் இவர்களுக்கு அச்சமே.
"அஞ்சாத பொருளில்லை அவனியிலே' என்ற பாரதியின் பாட்டுடைத் தலைவர்கள் இவர்கள்தாம்.
"பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகா தென்று
நின்னைச் சரணடைந்தேன்' என்று கண்ணம்மாவை நோக்கிக் கவி பாடுகிறார் பாரதி. இங்கே, கண்ணன் அம்மாவாகி விடுகிறான், காதலியாகிறான், அவர்தம் காதல் மனைக் கிழத்தியாம் செல்லம்மாவும் ஆகிறான், எல்லா உயிரிலும் இருக்கிற கண்ணன் எல்லாமாகவும் இருந்து காப்பான் என்பது நிதர்சனம். அதைவிடவும், அச்சம் தருபொருள் ஒன்றுகூட, இந்த அவனியில் இல்லை என்பதே இதன் விளக்கம்.
இப்போதோ, அன்புக்குரிய அப்பாவைவிடவும் அம்மாவைக் கண்டு அஞ்சுபவர்களும், அன்பு இணையான மனைவியைக் கண்டு அஞ்சுபவர்களும் மிக அதிகம். மருமகளைக் கண்டு அஞ்சும் மாமியார்களும் பெருகி வருகிறார்கள்.
கனவில் தம் மேலதிகாரியைக் கண்டால்கூட எழுந்திருக்கிறவர்களுக்கு, கனவின் பலனாய் வருவது எதுவோ என்ற கவலையிலேயே பொழுது விடிந்துவிடும். ஆனால், கவலை விடுவதில்லை.
குற்றம் புரிந்தவர்கள் கொஞ்சமும் அஞ்சாது நெஞ்சு நிமிர்த்தித் திரிகிற உலகில், தவறுகள்கூட நிகழ்ந்துவிடக் கூடாதென்று கவலைப்படுகிறவர்களின் உயிர்களின் மீதுதான் எமனுக்கு அதிக விருப்பம் போலும்.
அறியாமையால், அரைகுறை அறிவால் மனதில் தோன்றுவது பயம். "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' எனத் தொடர்வது அச்சம்.
மிச்சமிருக்கிற வாழ்நாள் முழுவதையும் தனக்கே அடிமையாக்கிக் கொள்ளும் அச்சம் கீழ்களது ஆசாரம் என்கிறார் வள்ளுவர். அச்சமே மரணம், அச்சத்துக்கு அப்பாலும் நீ செல்ல வேண்டும் என்கிறார் விவேகானந்தர்.
"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்று நம்மையும் சேர்த்துக் கொண்டு அறைகூவல் விட்டார் அப்பர்.
அஞ்சும் நெஞ்சங்களுக்கு ஆக்கம் தருகிற ஊக்கமொழிகளை, உண்மைகள் காட்டி உடன்பாட்டு நிலையிலும் எதிர்நிலையிலும் நின்று உணர்த்திய சான்றோர் எண்ணற்றோர். அந்த மரபில் நின்று, அச்சம் தவிர் என்று ஆணையிடுகிறார் பாரதி.
அறிவைத் துணைக் கொண்டு அதனை வெல்லத்தான், அருளாளர்களும் சான்றோர்களும் அறம் உரைத்தார்கள். அன்பு வழிப்பட்ட பக்தி நெறி காட்டினார்கள். பலரும் கருதுவதுபோல், தமிழக பக்தி நெறி பயத்தின் காரணமாகத் தோன்றியதில்லை.
பயபக்தி என்கிற சொல்லாடல் பொருந்தாது. பயத்தை முன்னிறுத்தித் தொடங்கும் பக்தியில் இருந்துதான் மூடத்தனங்களே முளைக்கின்றன. அதனை எதிர்த்துத்தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் அருள் முழக்கமிட்டார்கள்.
ஆத்திகர்களைவிடவும் நாத்திகம் முழக்கிய நல்லோர் பலர் இந்தநிலைப் பாங்கில் ஆன்மிகத்துக்கு அணுக்கமாய் நின்றார்கள்.
இன்றைக்கு அத்தகையோர் பலர் அருகிவிட்டதால், இரு பெருந்துறைகளிலும் எழுகின்றன குழப்பங்கள். களைவதற்குப் பதிலாகக் கவலைகளை மென்மேலும் விளைவிப்பதுதான் விபரீதம்.
உண்மையிலேயே, விரக்தியால் விளைவது நாத்திகமும் இல்லை, பயத்தால் எழுவது பக்தியுமில்லை.
"அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்ச வருவதுமில்லை' என்ற நெஞ்சுரம்தான் ஆன்மிகத்தின் நிலைப்பாடு.
பாதகம் செய்பவர்களைக் கண்டால் தோன்றுவது பயம். அடுத்து என்ன நடக்குமோ என்று அதிரும்படியான நடுக்கத்தை உண்டாக்கி, நினைக்கத் தொடர்வது அச்சம். இதனை எண்ணியே, மனம் கவலுவதால் அது கவலை.
இப்போது, யானைகளைக் கண்டால்கூடப் பயமில்லை. கொசுக்களை நினைத்தால்தான் பயமாயிருக்கிறது. அதைவிடவும் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் தரும் தொல்லைகளுக்கு ஏது மருந்தென்ற கவலை வளர்கிறது.
பெருங்கவலைகள் பொதுவானவை மட்டுமல்ல, நிரந்தரமானவை. திடுக்கிடும்படியாய், அடிக்கடி வருகிற சின்னக் கவலைகள்தான் மிகவும் ஆபத்தானவை.
பெரிது சிறிதென்று பேதம் பார்க்க முடியாத அளவுக்குப் பெருகிவரும் கவலைகளைக் கடக்க, அன்பைப் பெருக்கி, ஆசைகளைச் சுருக்கி, இன்பம் தரும் சின்னச்சின்ன நிகழ்வுகளில் சிந்தையைச் செலுத்துவதே சிறந்தது.
இல்லாதவற்றை எண்ணி, ஏங்கிக் கவலைப்படுவதைவிட, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவதே இன்பம்.
அதையெல்லாம்விட, பெரிய கவலைகளில் கவனம் கொள்வதுதான் உ(ய)ரிய மருந்து.
கேவலம், உப்புக்கும், புளிக்கும் கவலைப்பட வைத்தால், நான் நாஸ்திகனாகி விடுவேன் என்று பராசக்தியையே பயமுறுத்திக் கவலைப்பட வைத்த பாரதியின் கவலையெல்லாம், பெரிதினும் பெரிதான கவலைகள் மீதுதான்.
கண்ணுக்கு முன் நிற்கும் சின்னக் கவலைகளைப் புறந்தள்ளிவிட்டுக் கண்ணுக்குத் தெரியாத கரும்புத் தோட்டத்தில் (பிஜித் தீவில்) பெண்கள் படும் துயரங்களை எண்ணிக் கண்ணீர் பொங்கக் கவலைப்படுகிறாரே, அதுதான் பாரதி. அந்தப் பாட்டு தருவதுதான் பாடம்.
முன்னர் சொல்லிய பாரதியின் பாடலை அடியொற்றி, பின்னர் வந்த ஜெயகாந்தன் சொன்னார்:
பொன்னை பொருளை புகழை விரும்பிடும்
சின்னத்தனம் எனைத் தின்னத் தகா தென்று
நின்னைச் சரணடைந்தேன் - என்று அந்த வரிசையில் நாமும் பாடலாம். சின்னக் கவலைகள் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன்.
கவலையாய் முதலை விழுங்கிடும்போது, ஆதிமூலமே என அலறிய யானைக்குக் கருடன் மீதேறி வந்த கடவுள் நமது கவிதைக்குச் செவி சாய்க்க மாட்டானா என்ன? கடவுளோ, கவிதையோ கவலையை ஒழிக்க வராவிடில்... என்று வருகிற சின்னக் கவலைதான் முதலில் நம்மைத் தின்னத் தகாதது.
பெரிது சிறிதென்று பேதம் பார்க்க முடியாத அளவுக்கு பெருகிவரும் கவலைகளைக் கடக்க, அன்பை பெருக்கி, ஆசைகளைச் சுருக்கி, இன்பம் தரும் சின்னச்சின்ன நிகழ்வுகளில் சிந்தையை செலுத்துவதே சிறந்தது. இல்லாதவற்றை எண்ணி, ஏங்கிக் கவலைப்படுவதைவிட, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவதே இன்பம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024