Friday, July 3, 2015

உலகம் இனி செல்போனில்

தொழில் புரட்சி வந்தபிறகுதான், தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. பசுமை புரட்சி வந்தபிறகுதான், விவசாயத்துக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்தது. விவசாயம் வளர்ச்சியை காணத்தொடங்கியது. அதுபோல, இப்போது தகவல் தொழில்நுட்ப புரட்சியைக்கொண்டுவரும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்திருக்கிறார். நரேந்திர மோடியை பொருத்தமட்டில், ‘இ கவர்னன்ஸ்’ அதாவது, மின்னணு நிர்வாகத்துக்கு பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையிலேயே அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன் கீழ்மட்டம்வரை ஊடுருவிச் செல்லவேண்டும் என்பது தெளிவாகவே கூறப்பட்டிருந்தது. டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கி, ஒவ்வொரு தனிமனிதன் வாழ்க்கையிலும், ஒவ்வொரு வீட்டிலும் டிஜிட்டல் சேவை அதாவது, இணையதளத்தின் மூலமே அனைத்து சேவைகளையும் மக்கள் பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. இது சாத்தியமா?, ஏழ்மையில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வெளியே வரவேண்டிய நிலை இருக்கும்போது, அவர்களை இணையதள பயன்பாட்டுக்கு கொண்டுவர நினைப்பது சற்று அதிகமாக தெரியவில்லையா? என்றுகூட மக்களிடம் எண்ணம் நிலவியது.

ஆனால், ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, மத்திய அரசாங்கம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்துவந்தது. பிரதமரும், மத்திய மந்திரிகளில் பெரும்பாலானோரும் சரி, தங்கள் கருத்துக்களையெல்லாமே ‘டுவிட்டர்’ மூலமே தெரிவித்துவந்தனர். அரசின் பல பணிகள் ‘இ– மெயில்’ மூலமாகவே நடந்துவந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் தொடங்கியுள்ளார். இதை தகவல் தொழில்நுட்ப புரட்சி என்றே சொல்லலாம். ஒருகாலத்தில் டெலிபோன் என்பது வசதிபடைத்தவர்கள் வீடுகளில் இருக்கும் ஆடம்பரபொருள், ஒருவீட்டில் டெலிபோன் இருக்கிறதா என்பதை அவர்கள் வீட்டுக்குள் செல்லும் டெலிபோன் கம்பி மூலமாகவே தெரிந்துவிடும் என்றநிலை மாறி, இன்று செல்போன் வைத்திருப்பதற்கு பொருளாதாரநிலை அவசியம் இல்லை என்ற அளவில், எல்லோருடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக அத்தியாவசியத்தேவையாக மாறிவிட்டது. உலகத்தை செல்போனுக்குள் கொண்டுவரும் வகையில், செல்போன் மூலமாகவே அரசின் அனைத்து சேவைகளையும் பெறும்வகையில் கொண்டுவரப்பட்டதுதான், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம். எடுத்துக்காட்டாக, வங்கிக்கடனுக்கு விண்ணப்பம் அனுப்பவேண்டுமென்றாலும், அரசின் எந்த திட்டத்துக்கான விண்ணப்பத்தை அனுப்புவதிலும், மருத்துவ சேவைகள் பெறுவதிலும், அரசாங்கத்துக்கு பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அனுப்புவதிலும் சரி, இப்படி அரசின் அனைத்து சேவைகளையும் இனி செல்போன் மூலமாகவே பெறுவதற்கு வழிவகுப்பதுதான் இந்த திட்டம். எல்லாமே இணையதளம் வழியாக நடக்கும் என்பதால், முறைகேட்டுக்கோ, அல்லது லஞ்சத்துக்கோ இனி இடமிருக்காது.

டிஜிட்டல் லாக்கர் என்ற வசதியை பயன்படுத்தி வீடுகளில் பத்திரமாக வைத்திருக்கவேண்டிய பத்திரங்கள், பிறப்பு, திருமணம், படிப்பு சான்றிதழ்கள், சமையல் கியாஸ் இணைப்பு எண் போன்ற பலவற்றை மற்றவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக வைத்துக்கொள்ளமுடியும். ஆனால், இந்த வசதிகள் அனைத்தையும் செல்போன் மூலம் பெறவேண்டுமானால், அனைத்து இடங்களிலும் ‘வைபை’ வசதி இருக்கவேண்டும். இன்டர்நெட் வசதிகளை பயன்படுத்த ‘ஸ்மார்ட்’ போன்களை குறைந்தவிலையில் விற்பனைக்கு கொண்டுவரவேண்டும். கம்ப்யூட்டர், லேப்–டாப் இனி தேவையில்லை. எல்லாமே இனி உங்கள் செல்போன்தான் என்று இந்தியாவை அபரிமிதமான வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்லப்போகும் இந்த திட்டத்தை அரசு வேகமாக செயல்படுத்தவேண்டும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை 3 லட்சம் கிராமங்களை ‘பிராட் பேண்ட்’ என்று சொல்லப்படும் அகண்ட அலைவரிசையின் மூலம் இணைத்து, மின்னணு நிர்வாகத்தை சாதாரண ஏழை–எளிய மக்களுக்கும் தெரியும் வகையில் கொண்டுசெல்லப்போகும் இந்த ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிவிடும்.

No comments:

Post a Comment

HC orders govt to issue recognition to nursing colleges

HC orders govt to issue recognition to nursing colleges  16.11.2024 TIMES OF INDIA BHOPAL. Bhopal/Jabalpur : A division bench of MP high cou...