Saturday, July 4, 2015

துடுப்பில்லாப் படகில் தத்தளித்த தேவிகா!

‘வாழ்க்கைப் படகு’ தேவிகா

வாழ்க்கைப் படகு: 50 ஆண்டுகள் நிறைவு!

தமிழ்த் திரைப்படங்களில் ஜெமினி கணேசனுக்கு வாய்த்த சில நல்ல திரைப்படங்களில் ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த ‘வாழ்க்கைப் படகு’ முக்கியமானது. 1965-ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் ஜெமினி கணேசன், முத்துராமன், ரங்காராவ், டி.எஸ். பாலையா, நாகேஷ், மனோகர், பாலாஜி போன்ற நட்சத்திரப் பட்டாளத்துடன், அனைவருக்கும் ஈடுகொடுக்க வேண்டிய நிலையில் தேவிகா சவாலான கதாபாத்திரம் ஏற்று நடித்த படம். வேப்பத்தூர் கிட்டு இப்படத்தின் கருவை ஒரு ஃபிரெஞ்ச் நாவலிலிருந்து பெற்றார். இப்படம் 1962-ம் ஆண்டு ‘ஜிந்தகி’ என்ற பெயரில் இந்தியில் இதே ஜெமினி ஸ்டூடியோவால் தயாரிக்கப்பட்டது. இதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ‘வாழ்க்கைப் படகு’ ஆனது.

கற்பே கருப்பொருள்

இந்திய மனங்களில் உறைந்துபோன ‘கற்பு’ என்னும் கருத்தாடல் முக்கியமான சிக்கல். இந்திய மனம் ‘காதல்’ என்பதை ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் மட்டுமே உரித்தானதாகப் பார்க்கிறது. ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை என்பது இன்னொரு ஆண்மகனுடன் உள்ள எல்லாத் தொடர்புகளிலிருந்தும் துண்டித்துக்கொண்டு நிற்பதாகும். குடும்ப அமைதியின் ரகசியம் இங்குதான் அடங்கியுள்ளது. இதைப் பேணி நடக்கும் பெண் கற்புக்கரசியாகிறாள். இங்கு சிறிதளவு ஐயம் ஏற்பட்டாலும் அது குடும்ப வாழ்க்கையைச் சீரழித்துவிடுகிறது. இந்தப் பிடிமானத்தை அடிப்படையாக வைத்துத் திரைக்கதையாக்கப்பட்ட படம்தான் ‘வாழ்க்கைப் படகு’.

நடிகை எனும் அடையாளம்

வேலை தேடி அலைகிற சீதா (தேவிகா), தனக்கு வேலை கிடைத்திருப்பதாக அம்மாவிடம் சொல்லும் காட்சியில்தான் படம் தொடங்குகிறது. சீதா அந்த வேலை குறித்து அம்மாவிடம் சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சியுடனும் திருப்தியடைந்தவளாகவுமே சொல்கிறாள்; ஆனால் அம்மாவோ திகைக்கிறார். காரணம், கிடைக்கிற வேலை நாடக நிறுவனத்தில்; அதுவும் நடிகையாக!

இந்த ஆரம்ப முரண் மிகவும் கவனிக்கத் தக்கது. அது மாறிவரும் இந்தியப் பெண் மனத்தின் சிந்தனை முறை. இளம் பெண்ணான சீதா தான் நடிகையாவதில் பழைய கோட்பாடுகளை மனதில் கொள்ளவில்லை; அவளைப் பொறுத்த அளவில் அதுவும் ஒரு வேலைதான் அரசுப் பணி போல அல்லது ஒரு நிறுவன ஊழியர்போல.ஆனால் பழமை மனம் கொண்ட அம்மா நாடக வேலை என்றதுமே துணுக்குற்றுவிடுகிறாள்.

சீதாவைக் காதலிக்கும் ராஜன் (ஜெமினி கணேசன்) ஜமீன்தார் ராவ் பகதூரின் (ரங்காராவ்) மகன். அவனுடைய காதலைத் தன் அதிகார அந்தஸ்தின் பொருட்டாக மட்டுமல்லாமல், அவள் ஒரு நடிகை என்ற நிலையிலும் ராவ் பகதூரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சீதாவின் மனநிலையைத் தெளிவாகப் புரிந்துகொண்ட பின் ராவ் பகதூர் ஒரு நிபந்தனையின் கீழ் தன் மருமகளாகச் சீதாவை ஏற்கிறார்.

திருமணத்தின் பின் நாடக இயக்குநர் கோபாலை எந்தக் காரணம் கொண்டும் சந்திக்கவோ பேசவோ கூடாது. சீதாவுக்கு ஏற்கெனவே அது ஒரு பிரச்சினையாக இல்லாததாலும், கோபால் ஒரு சிறந்த மனிதன் என்பதாலும் அவள் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்கிறாள். எது நிபந்தனையாகிறதோ, அதுதான் பல துயரங்களையும் சோதனைகளையும் குடும்பத்துக்குள் கொண்டுவருகிறது.

ஏற்கெனவே ஒரு நடிகையின் மீது சமூகத்துக்கு (ஜமீன்தாருக்கும்) இருக்கும் வற்றாத அந்த உள்ளுறைந்த ஐயம் தன்னை மறுபடியும் ஆங்காரமாக நிலைநிறுத்தப் பார்க்கிறது. இதனால் சீதாவின் வாழ்க்கை, கடலில் சிக்கிய துடுப்பில்லாத படகாக ஆகிறது. இந்தச் சிக்கல்களிலிருந்து மீண்டு வருவதில் உள்ள சுழற்சிகள் நம் மனநிலைக்கு ஒத்தடம் கொடுத்து சமன்செய்கின்றன.

கண்ணதாசனின் பங்களிப்பு

இந்தப் படத்தின் பாடலாசிரியரான கண்ணதாசன் கிட்டத்தட்ட ஒரு வசனகர்த்தாவுக்கான பங்கையும் எடுத்துக்கொள்கிறார். கதையை நேர்க்கோட்டிலிருந்து பிறழ்ந்துவிடாமல் கொண்டுசெல்லும் பணி அவருக்கு உரித்தானதாகும். கதாநாயகிக்குச் சாதகமான மனநிலையை ரசிகர்களுக்கு உருவாக்குவதில் அவரின் கைவண்ணம் மிளிர்ந்திருக்கிறது.

கண்ணதாசன் தனிப்பட்ட முறையில் இந்திய ஆன்மிகப் பக்குவத்தைப் பெற்றவர்; கற்பு நிலை அவருக்கு உயிரானது. மனங்களின் தூய்மையையும் விரும்புகிறவர். ஆனால் ஒரு பெண்ணின் கற்புக்கு எப்போதும் சவால் விடுகின்ற நாடகக் கலையையும், அதில் நடிக்கும் பெண்ணையும் சமூகம் எந்த விதமாகப் பார்க்கும் என நன்றாகப் புரிந்துகொண்டு, பழமை மனங்களுக்கு நியாய உணர்வைப் போதிப்பதைப் போல பாடல்களை எழுதியிருக்கிறார். ஒரு பாடலில்..

“காதலித்தல் பாவமென்றால் கண்களே பாவமன்றோ

கண்களே பாவமென்றால் பெண்மையே பாவமன்றோ, பெண்மையே பாவமென்றால் மன்னவனின் தாய் யாரோ?”

என்று நாயகி உருகும்போது அந்த மனநிலைக்கு ஏற்ற உணர்வுகள் ரசிகர்களுக்குள் ஆழமாய் உட்புகுந்து கதையை மேலும் வலுப்படுத்த உதவியிருக்கின்றன.

பொதுவாக, ஜெமினி ஸ்டூடியோ தயாரிப்பு என்றால் பிரம்மாண்டமும் கதையம்சமும் கூடிய படங்கள் என்கிற எண்ணம் நமக்கு வரும். ஆனால் ‘வாழ்க்கைப் படகு’ பிரம்மாண்டமான படம் அல்ல; கதையம்சத்தில் கூடுதல் கவனம் செலுத்தி எடுக்கப்பட்டதை உணரலாம். எனினும் பிரம்மாண்டம் என்பதைக் காட்டாமல் போய்விடக் கூடாது என்பதாலோ என்னவோ ஒரு நிலநடுக்கக் காட்சியில் சற்றே சிரத்தை எடுத்துத் தங்களின் முத்திரையையும் பதித்திருப்பார்கள். இதை அந்தக் காலத்தில் வியந்து எழுதிய பத்திரிகைகளும் உண்டு. அந்த நிலநடுக்கம்தான் ராஜனுக்கும் சீதாவுக்கும் ராவ் பகதூருக்கும் நேரிடவிருந்த கவுரவப் பங்கத்தைச் சரிசெய்து காப்பாற்றுகிறது.

படத்தின் இயக்குநர் சீனிவாசன் என்று டைட்டில் கார்டு வருகிறது. ஒரு கணம் அதிர்ச்சி. யார் இந்த சீனிவாசன்? அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார் என்று குழப்பம் வந்தது. யோசித்துப் பார்த்ததும் படத் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன்தான் அந்த சீனிவாசன் என்று தெளிந்தது. மக்களின் மனநிலையிலுள்ள ‘கற்பு’க்குப் பங்கம் வந்துவிடாமல் கதை சொல்ல வேண்டும்; இல்லையென்றால் ரசிகர்களின் கோப அலைகளில் சிக்கிக் கவிழ்ந்துவிட நேரும் என்பதால்தான் படத்துக்கு ‘வாழ்க்கைப் படகு’ என்று தலைப்பு வைத்தாரோ?

- களந்தை பீர்முகமது; சிறுகதை ஆசிரியர்

தொடர்புக்கு kalanthaipeermohamed@gmail.com

படங்கள் உதவி: ஞானம்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024