Friday, July 3, 2015

கருணை பணி வழங்க தாமதிப்பதா: ஐகோர்ட் கேள்வி



மதுரை: 'கருணைப் பணி நியமனம் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்காமல், 12 ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது நிராகரித்ததை ஏற்க முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

விண்ணப்பம்

புதுக்கோட்டையைச் சேர்ந்த ராம்குமாரின் தந்தை மீமிசல், அரசு மேல்நிலை பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்தார்; இவர், 1998 அக்., 19ம் தேதி இறந்தார். மகன் ராம்குமாருக்கு கருணைப் பணி நியமனம் கோரி, அவரது தாய், 2000ல் தமிழக அரசிடம் விண்ணப்பித்தார். இதற்கிடையே, ராம்குமாரின் சகோதரருக்கு தகுதி அடிப்படையில், 2012ல், இடைநிலை ஆசிரியர் பணி கிடைத்தது.

இதனால், அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர், 'உங்கள் சகோதரர், அரசு ஊழியர்; எனவே, உங்களுக்கு கருணைப் பணி வழங்க முடியாது' என, 2013 ஜூன் 13ம் தேதி, ராம்குமாரின் விண்ணப்பத்தை நிராகரித்தார். அதை ரத்து செய்து, பணி வழங்க உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ராம்குமார் மனு செய்தார்.

விசாரணை

இம்மனு, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அரசு உத்தரவுப்படி, குடும்பத்தில் யாராவது ஒருவர் பணியில் இருந்தால், கருணைப் பணி வழங்க முடியாது' என, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் தந்தை, 1998ல் இறந்துள்ளார். மனுதாரரின் தாய், தன் மகனுக்கு கருணைப் பணி நியமனம் கோரி, 2000ல் விண்ணப்பித்து உள்ளார். மனு மீது எவ்வித நடவடிக்கையுமின்றி, 12 ஆண்டுகளாக அரசு தரப்பில் நிலுவையில் வைத்துள்ளனர்.

தகுதி அடிப்படை

இதற்கிடையே, மனுதாரரின் சகோதரர், மேஜரான பின், தகுதி அடிப்படையில் அரசுப் பணியில் சேர்ந்துள்ளார். அதை அடிப்படையாகக் கொண்டு, மனுதாரருக்கு பணி மறுப்பது நியாயமற்றது.

மனுதாரரின் சார்பில், அவரது தாய் அளித்த மனுவை, மனுதாரர் மேஜரான சமயத்தில் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பித்திருந்தால், அப்போதே கருணைப் பணி வாய்ப்பு கிடைத்திருக்கும்.

நிராகரிப்பு

மனுவை உரிய காலத்தில் பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது நிராகரித்ததை ஏற்க முடியாது; பணி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கல்வி மாவட்ட அலுவலர், இரு மாதங்களில் பரிசீலித்து, பணி நியமனம் பற்றி தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024