தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்..the hindu tamil
M.G.R. பற்றி பேசினால் நம்பியார் பற்றி பேசாமல் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர். படங்களில் வில்லனாக நம்பியார் வந்த பிறகுதான் படத்தில் விறுவிறுப்பு கூடும். படத்தில்தான் எம்.ஜி.ஆருக்கு அவர் வில்லனே தவிர, உண்மையில் நெருங்கிய நண்பர். எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைக்கும் உரிமை பெற்ற ஒரு சிலரில் நம்பியாரும் ஒருவர். ரொம்ப ஜாலியான பேர்வழியும் கூட. அவரது நகைச்சுவையை எம்.ஜி.ஆரும் விரும்பி ரசிப்பார். இருவரும் நிழலில் எதிரிகள். நிஜத்தில் நண்பர்கள்.
எம்.ஜி.ஆர். கத்தி சண்டைக் காட்சிகளில் நடிப்பதை பார்த்து அவரை ‘அட்டை கத்தி வீரர்’ என்றெல்லாம் அக்காலத்தில் விமர் சனங்கள் எழுந்தது உண்டு. ஆனால், உண்மை யான கத்தியைக் கொண்டே எம்.ஜி.ஆர். படங்களில் சண்டை போட்டிருக்கிறார். அவர் பயன்படுத்திய கத்திகள் சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
‘சர்வாதிகாரி’ படத்தில் நம்பியாருடனான வாள் சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆரின் கத்தி நம்பியாரின் கட்டை விரலை ஊடுருவிவிட்டது. அதே போல, ‘அரசிளங்குமரி’ படம் எம்.ஜி.ஆரின் வாள் வீச்சுக்காகவே புகழ் பெற்றது.
அந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கும் நம்பி யாருக்கும் ஆக்ரோஷமான சண்டை. ஒரு நாள் படப்பிடிப்பில் நம்பியாரின் கத்தி எம்.ஜி.ஆரின் கண்ணுக்கு மேலே புருவத்தில் பட்டு கிழித்து விட்டது. படத்துக்கான மேக் அப் இல்லாமல் எம்.ஜி.ஆர். தனது வழக்கமான தோற்றத்தில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இடது புருவத்தில் அந்தத் தழும்பு தெரியும்.
படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரின் புருவத் தில் நம்பியாரின் கத்தி பட்டு ரத்தம் கொட்டுகிறது. இன்னும் இரண்டு அங்குலங்கள் கீழே பட்டிருந் தால் எம்.ஜி.ஆரின் கண் பார்வை பறிபோயிருக் கும். அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். ஓடி வந்த உதவியாளர் ஒருவர், எம்.ஜி.ஆரின் புருவத்தில் ரத்தம் கொட்டிய இடத்தில் துணியை அமுக்கிப் பிடித்தபடி, நம்பியாரைப் பார்த்து, ‘‘என்னண்ணே, பார்த்து செய்யக் கூடாதா? நீங்க கூடவா இப்படி?’’ என்று இரைந்தார். நம்பியாருக்கும் வருத்தம்.
எம்.ஜி.ஆர். உடனே, ‘‘அவருக்கு என் மீது கோபம் இல்ல; அந்தக் கத்திக்குத்தான் என் மீது கோபம்’’ என்று சொல்லி அந்த இடத்தில் சகஜ நிலையை ஏற்படுத்தினார்.
பின்னர், நம்பியாரைப் பார்த்து, ‘‘ஏன்யா இப்படி செஞ்சீரு?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
‘‘நியாயமாக பார்த்தால் எனக்கு நீங்கள் நன்றி சொல்லணும்’’ - நம்பியார் பதில்.
தெரியாமல்தான் என்றாலும் கத்தியாலும் குத்தி விட்டு, அதற்கு நன்றி வேறா? என்று நினைத்த படி ‘‘ஏன்?’’ என்று கேட்ட எம்.ஜி.ஆருக்கு, ‘‘டைரக்டர் சொன்ன இடத்தில் குத்தாமல் இருந்ததற்காக’’ என்று மேலும் புதிர் போட்டார் நம்பியார்.
‘‘டைரக்டர் என்ன சொன்னார்?’’ - வியப்புடன் கேட்டார் எம்.ஜி.ஆர்.
‘‘நெஞ்சில் குத்தச் சொன்னார்’’ என்ற நம்பியாரின் பதிலைக் கேட்ட எம்.ஜி.ஆர். சிரித்த சிரிப்பால் படப்பிடிப்பு அரங்கமே அதிர்ந்தது.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவரைப் பார்க்க அவரது வீட்டுக்கு நம்பியார் சென்றுள்ளார். அமைச்சர்கள் உட்பட வி.ஐ.பி-க்கள் எம்.ஜி.ஆரை பார்க்க காத்திருந்தனர். நம்பியார் வந்துள்ள விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர் உடனே தனது அறையின் கதவைத் திறந்து நம்பியாரைப் பார்த்து உள்ளே வரும்படி சைகை காட்டிவிட்டு சென்றார்.
தங்களைத்தான் எம்.ஜி.ஆர். கூப்பிடுகிறார் என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்த அமைச்சர்கள் சிலர் எம்.ஜி.ஆர். அறைக்குச் சென்றனர். நம்பியார் வராததைப் பார்த்த எம்.ஜி.ஆர். மீண்டும் தனது அறையின் கதவைத் திறந்து, நம்பியாரைப் பார்த்து ‘‘உன்னைத்தான். உள்ளே வாய்யா’’ என்றார். நம்பியார் உள்ளே வந்த பின் உதவியாளரிடம் எல்லோருக்கும் காபி கொண்டு வருமாறு எம்.ஜி.ஆர். கூறினார். அந்த உதவியாளரை நம்பியார் தடுத்து, ‘‘எனக்கு மட்டும் ஒரு காபி கொண்டு வாருங்கள்’’ என்றார்.
அங்கிருந்த அமைச்சர் ஒருவர் நம்பியாரைப் பார்த்து, ‘‘ஏன், நாங்க என்ன பாவம் செஞ்சோம்?’’ என்று நம்பியாரிடம் கேட்டார். அதற்கு, ‘‘இங்கே நான் மட்டும்தான் விஐபி’’ என்ற நம்பியாரின் பதிலால் எம்.ஜி.ஆர் மட்டுமின்றி கேள்வி கேட்ட அமைச்சர் உட்பட எல்லோரும் சிரித்தனர்.
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களால்தான் நல்ல நகைச்சுவையை ரசிக்க முடியும். எம்.ஜி.ஆருக்கு நகைச்சுவை உணர்வு அபாரம்.
பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வெளி நாடுகளில் எம்.ஜி.ஆர். எடுத்து வெளியிட்டு மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில்தான் நடிகை லதா அறிமுகம். முதல் படத்திலேயே கதாநாயகி. அதிலும் உச்ச நட்சத்திரமான எம்.ஜி.ஆருக்கு ஜோடி. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர். என்ற ஆளுமை முன் நடிப்பதில் லதாவுக்கு உள்ளூர நடுக்கம். படத்தின் இயக்குநரும் எம்.ஜி.ஆர்தான். லதா நடித்த காட்சிகளில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு நடிக்கவில்லை. காரணம் கேட்டார் எம்.ஜி.ஆர்.
‘‘சார், உங்கள் முன் நடிக்க எனக்கு தயக்க மாக இருக்கிறது’’ என்றார் லதா. இவ்வளவு ஏற்பாடுகளுக்குப் பிறகு, நடிக்கத் தயக்கம் என்றால் யாருக்குத்தான் கோபம் வராது? ஆனாலும், லதாவின் நிலையை எம்.ஜி.ஆர். புரிந்துகொண்டார்.
அவருக்கு தைரியம் ஏற்படுத்த எம்.ஜி.ஆர். சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த லதா, இயல்பான நிலைக்கு வந்து நன்றாக நடிக்கத் தொடங்கிவிட்டார். லதாவின் தயக் கத்தை போக்குவதற்காக எம்.ஜி.ஆர். கேட்ட கேள்வி...
‘‘பேசாமல் படத்தின் கதாநாயகனை மாத்திட லாமா?’’
- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம்
‘நாடோடி மன்னன்’ படத்தை எம்.ஜி.ஆர். தானே தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்தார். பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் வெற்றி விழா 16.10.1958-ல் மதுரையில் நடந்தது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து விழா நடந்த தமுக்கம் மைதானம் வரை 4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் மக்களின் ஆரவார வரவேற்புக்கு இடையே எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
எம்.ஜி.ஆர். சென்ற சாரட் வண்டிக்கு முன் உலக உருண்டையின் மீது 110 பவுனில் தங்க வாள் எடுத்துச் செல்லப்பட்டது. விழாவில் எம்.ஜி.ஆருக்கு தங்க வாளை நெடுஞ்செழியன் பரிசளித்தார். முதன்முதலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த திரைப்பட வெற்றி விழா இதுதான்!
No comments:
Post a Comment