By ஆசிரியர்
First Published : 05 March 2016 12:59 AM IST
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பின் அம்சங்களை, அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள பொறுப்புடன் தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருப்பது இந்த 7 பேரும் விடுதலை செய்யப்படும் வாய்ப்புகள் மீது அவநம்பிக்கை கொள்ளச் செய்கிறது.
ஏனென்றால், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், "....நம்பிக்கையின் ஒளிக்கீற்று அவர்களுக்கு ஆதரவாக (விடுதலை செய்வது) அமைந்தால், சமூக நலன் கருதாமல் பொருந்தா இரக்கமாக முடியும்' என்று தெரிவித்திருக்கிறது. ஆகவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு அப்பாற்பட்டு, மத்திய அரசு இந்த விவகாரத்தை அணுகினால் மட்டுமே 7 பேருக்கும் விடுதலை கிடைக்கக்கூடும். அப்படி மத்திய அரசு செயல்படுமா என்பதுதான் இன்று தமிழகத்தில் பலருக்கும் எழும் கேள்வி..
1993-ஆம் ஆண்டில் நடைபெற்ற மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், பயங்கரவாத சக்திகளுக்கு உதவி செய்ததாக நடிகர் சஞ்சய் தத் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை முடித்து, நூறு நாள்களுக்கு முன்னதாகவே நன்னடத்தைக்காக தண்டனைக் குறைப்புடன் விடுதலையாகியுள்ள நிலையில், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளின் மீதான குற்றச் செயல், தண்டனை ஆகியவற்றையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலக்கட்டம் இது.
சஞ்சய் தத் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவிகள் செய்ய நேரிட்டதற்குத் திரைப்படத் துறையைச் சார்ந்த நட்பு வட்டாரம்தான் காரணமே தவிர, பயங்கரவாதிகளின் கொள்கை, தாக்குதல் திட்டம் எல்லாவற்றுக்கும் அவர் அப்பாற்பட்டவராக, தொடர்பு இல்லாதவராக இருந்தார் என்பதால்தான் அவருக்கு 5 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்கூட, இதேபோன்று, ராஜீவ் காந்தி கொலையில் நேரடியாகத் தொடர்புடையவர்கள், தொடர்பு இல்லாமல் உதவி செய்தவர்கள் என்று வகைப்படுத்தி மீள்ஆய்வு செய்ய வேண்டிய தருணம் இது.
இந்த நேரத்தில் இந்த விவகாரத்தை, தமிழக முதல்வர் தனது தேர்தல் உத்தியாக பயன்படுத்துகிறார் என்று விமர்சனம் செய்து, அரசியலாக்குவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. ஒருவேளை, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடிய தருணம் இதுவே என்று முதல்வர் ஜெயலலிதா கருதினால் அதைக் குறை காண வேண்டியதும் இல்லை.
ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுவே மத்திய அரசின் செயல்பாட்டுக்கு பெருந்தடையாக இருந்துவரும் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடியாக, 7 பேரையும் விடுவிக்கும் முடிவை மோடி அரசு எடுக்கக்கூடிய ஆதரவான சூழ்நிலையாக மாறவும் வாய்ப்பு உள்ளது. அதனால், இதனைத் தேர்தல் உத்தியாகப் பார்க்க வேண்டியதில்லை.
ஈழத்தமிழர் பிரச்னை அரசியல் மேடையில் மட்டுமே சலனங்களை ஏற்படுத்தின என்பதும் வாக்கு வங்கிகளில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தியதே இல்லை என்பதும் தமிழகத் தேர்தல்களைக் கடந்த கால் நூற்றாண்டாகப் பார்த்துவரும் நோக்கர்கள் அறிவார்கள். ஈழத்தமிழர் பிரச்னை தமிழ்நாட்டின் அடிநாதமாக, உயிர்ப்புள்ளதாக இருந்திருந்தால், மதிமுக பொதுச் செயலர் வைகோ என்றைக்கோ தமிழக முதல்வராகியிருப்பார். ஆகவே, இதைத் தேர்தல் உத்தி என்று மலினப்படுத்துவது அர்த்தமற்றது.
சஞ்சய் தத்துக்கு அளிக்கப்பட்ட அதே விதமான குறைவான தண்டனையும், நன்னடத்தைக்கான தண்டனைக் குறைப்பும் பெறும் அளவுக்கு தகுதியுடையவர்கள், ராஜீவ் கொலைத் திட்டம் பற்றிய முழுமையான அறிதல் இல்லாமல் உடன் இருந்தவர்கள் என்ற அளவில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கும் நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகியோர். இந்த நான்கு பேரையும் உடனடியாக விடுதலை செய்வதில் எந்தவிதத் தடையோ, சட்டச் சிக்கலோ இருக்க முடியாது. இந்த நான்கு பேரும் அவர்கள் செய்த குற்றத்துக்கு மேலதிகமான தண்டனையை கடந்த 24 ஆண்டுகளாக அனுபவித்துவிட்டனர். அவர்களது ஆயுள் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்வதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.
ராஜீவ் கொலைத் திட்டம் பற்றி அறிந்தவர்கள் என்பதாக நீதிமன்றத்தால் கருதப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் விடுதலையில் மட்டுமே காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சிலருடைய எதிர்ப்புகள் இருக்கும். இதிலும்கூட, இவர்கள் 24 ஆண்டுகள் சிறையில் கழித்தவர்கள் என்பதாலும், தண்டனை எப்போது நிறைவேற்றப்படுமோ என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் செத்து பிழைத்துக் கிடப்பவர்கள் என்பதையும் மத்திய அரசு கருதிப் பார்க்க வேண்டும்.
இவர்களில் யாரும், விடுதலைக்குப் பிறகு ஆப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா போல தமிழ்நாட்டில் ஒரு கட்சியை நடத்தி, ஆட்சியைப் பிடித்துவிடப் போவதில்லை. அல்லது இவர்கள் மீண்டும் தாக்குதலுக்காக திட்டமிடுவார்கள் என்பதற்கும் வாய்ப்பில்லை. இவர்கள் மீதான இரக்கம், நீதிமன்றம் குறிப்பிடுவதைப்போல பொருந்தா இரக்கமாக அமைந்துவிடாது.
ராஜீவ் காந்தியின் மகள்வழி பெயர்த்தி மிராயா வதேரா தமிழ்நாட்டுக்கு வந்து கூடைப்பந்து விளையாடும் அமைதிச் சூழலில், அனைவரும் அனைத்தையும் மறந்துவிட்ட வேளையில், இன்னமும் 24 ஆண்டுகளாக ரத்தக்கறையின் மிச்சத்தைத் துடைக்காமல் வைத்திருக்க வேண்டுமா? இரக்கம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் என்கிறது விவிலியம்!
No comments:
Post a Comment