Saturday, March 12, 2016

பதின் பருவம் புதிர் பருவமா? - பழக்கமும் அடிமைத்தனமும்

Return to frontpage

டாக்டர் ஆர்.காட்சன்
போதைப் பொருளான மது எளிதில் கிடைப்பதும், நமது சமூகமே மது அருந்துவதை காபி குடிப்பது போன்ற சாதாரண ஒரு பழக்கமாகப் பார்ப்பதுமே இளம் பருவத்திலேயே குடிபோதையின் அறிமுகம் கிடைப்பதற்கு முக்கியக் காரணம்.

யார் அடிமை?

போதைப் பொருட்களுக்கு அடிமையான பெரும்பாலோர், தாங்கள் அதற்கு அடிமையாகிவிட்டதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ‘நீங்க நினைக்கிற மாதிரி நான் ரொம்பலாம் குடிக்க மாட்டேன்’ என்பது எல்லோரும் சொல்வதுதான். ஒருவர் தினமும் குடிப்பது, குடிக்காமலோ - போதைப் பொருளைப் பயன்படுத்தாமலோ ஒருநாள்கூட இருக்க முடியாத நிலை, நிறுத்தினால் தூக்கமின்மை, கை நடுக்கம் ஏற்படுவது, காலை எழுந்தவுடன் போதைப் பொருளைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை போன்ற அறிகுறிகள் எல்லாம், அவர் போதை அடிமையாகிவிட்டார் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.

இன்றைக்குத் தினமும் ஒரு ஃபுல்லோ அல்லது அதற்கு மேலோ குடிப்பவர்கள் எல்லாம் ஒரே நாளில் அந்த நிலையை எட்டிவிடுவதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் வளரிளம் பருவத்தில் வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ சிறிதுசிறிதாகக் குடிக்க ஆரம்பித்தவர்கள்தான். எனவே ‘இன்னைக்கு மட்டும் தானே குடிக்கிறேன், எப்போதாவது தானே எடுத்துக்கொள்கிறேன், நல்லது கெட்டது வரும்போது மட்டும்தானே பயன்படுத்துகிறேன்’ என்று சொல்லித் தப்பிக்க நினைப்பார்கள். கல்லூரி மாணவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் இவை. ஆனால், போதைப் பொருட்கள் மூளை நரம்புகளில் மெல்ல மெல்ல ஊடுருவி ஆக்கிரமித்துவிடும் நச்சு என்பதை இவர்கள் புரிந்துகொள்வதில்லை. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்துக் கல்லூரி முடிக்கும் கட்டத்தில் நிரந்தரக் குடிகாரர்களாகவே பலர் மாறிவிடுவார்கள்.

குடிநோயின் பாதிப்புகள்

முன்பெல்லாம் ஒரு நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் மூத்த மருத்துவர்கள் கேட்கும் முதல் கேள்வி ‘டி.பி. நோய்க்கு டெஸ்ட் எடுத்தாச்சா’ என்பதுதான். ஆனால், இப்போது அதை முந்திக்கொண்டு வரும் கேள்வி குடிநோய்தான். இளம் வயதிலேயே பல வகை நரம்புத்தளர்ச்சி, ஞாபகமறதி, கல்லீரல் மற்றும் கணையப் பாதிப்பு போன்றவை மது அருந்துவதால் ஏற்படுகின்றன.

மேலும் போதையில் நிதானம் இழப்பதால் மாணவப் பருவத்திலேயே ஆக்ரோஷமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தாக்குதல் மற்றும் கொலைச் சம்பவங்கள், விபத்துகளால் மரணம் போன்றவை அதிகரிக்கின்றன. வளரிளம் பருவத்தில் ஆரம்பிக்கும் வலிப்புநோய்க்கும் மதுப்பழக்கம் முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

மனதை மாற்ற முடியுமா?

மதுப் பழக்கத்தைப் பொறுத்தவரையில் இளம் பருவத்தினர் மனதில் உள்ள சில தவறான நம்பிக்கைகள் அல்லது காரணங்கள் எளிதில் போதைக்கு அடிமையாக்கிவிடுகின்றன. குடிக்கிற ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை வைத்திருப்பார்கள். வளரிளம் பருவத்தினர் ‘மச்சான், இன்னைக்கு நான் சந்தோசமா இருக்கேன். கண்டிப்பா சரக்கு அடிச்சே ஆகணும்’ என்றோ, ‘மண்டை காயுது, கட்டிங் போட்டாதான் சரியாகும்’ என்றோ காரணம் சொல்லுவார்கள். இப்படிச் சில காரணங்களைச் சொல்லிக் குடிக்க ஆரம்பித்தால், அதுவே பின்னால் குடிப்ப தற்கு ஒரு சாக்குபோக்காக மாறிவிடும். அது மட்டுமல்லாமல் குடிப் பழக்கம், கவலைகளை மறப்பதற்கு நிச்சயமாக மருந்து அல்ல.

புகைப்பழக்கம்

எல்லாப் போதைப் பொருள் பழக்கங்களுக்கும் நுழைவாயில் எதுவாக இருக்கும்? புகைப் பழக்கம்தான். அதை போதைப் பொருள் என்றே பலர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதுவே போதை உலகத்தின் வாசல்.

வளரிளம் பருவத்தில் பலரும் முதன்முதலில் பரிசோதித்துப் பார்க்கும் போதைப் பொருள் சிகரெட் அல்லது பீடிதான். சிலருக்கு அவ்வளவு தைரியம் இல்லாவிட்டாலும் பேப்பரைச் சுருட்டிப் பற்ற வைத்து வாயில் வைத்துக்கொள்வது, நாக்கில் படாமல் ஊதுபத்தியை வாய்க்குள் வைத்துப் புகையை வெளியிடுவது போன்ற செயல்கள் மூலமாகத் தங்கள் ஆசையை வெளிப்படுத்துவார்கள்.

அடிமையாவது எப்படி?

இப்படி ஆரம்பிக்கும் பாதிப் பேர் சில நாட்களில் விட்டுவிடுவார்கள். ஆனால், இயற்கையாகவே பதற்றத் தன்மை உள்ள வளரிளம் பருவத்தினர் இதற்கு அடிமையாக அதிக வாய்ப்பு உண்டு. ஏனென்றால் புகையிலையில் உள்ள ‘நிக்கோடின்’ என்ற வேதிப் பொருள் ஆரம்பத்தில் மனப் பதற்றத்தைத் தணித்து, இப்படிப்பட்டவர்களை கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க வைக்கும். மேலும் கல்லூரிக்குச் சென்ற உடன் இரவில் நீண்ட நேரம் விழித்துப் படிக்கும் வகையில், மூளையைத் தூண்டும் திறனை இது கொண்டிருப்பதால் புகைப்பதைத் தொடர ஆரம்பித்துவிடுவார்கள்.

நிக்கோடின் இரண்டு முதல் ஐந்து நிமிடங்களில் மூளை ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால், ஒருவருடைய கவனம் மற்றும் சுறுசுறுப்பைக் கூட்ட உதவும். ஆனால், இது உதவி செய்பவர் போல வந்து பின்பு வில்லனாக மாறிவிடும். எப்படியென்றால், இந்த நிக்கோடின் செயல்படும் நேரம் அதிகபட்சம் இரண்டு மணி நேரம்தான். அதன் பின்பு மூளை நரம்புகள் அதே வேகத்தில் செயல்படக் கூடுதல் நிகோடினை எதிர்பார்க்க ஆரம்பித்துவிடும். இதனால்தான் நாளடைவில் அதிகபட்சம் இரண்டு மணி நேரம்கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் வகுப்புகளின் பாதியிலோ, சினிமா பார்க்கும் போது இடையில் டாய்லெட்டிலோ சென்று தம் அடிக்காமல் பலரால் இருக்க முடிவதில்லை.

என்ன செய்யலாம்?

குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்றாலே சிலருக்கு தம் அடிக்கத் தோன்றும். உதாரணமாக டீ, காபி குடிக்கச் சென்றால் புகைக்காமல் இருக்க முடியாது. எனவே, பழகிப்போன டீக்கடை, பெட்டிக்கடைகளைக் கொஞ்ச நாளுக்குத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை கட்டுப்படுத்த முடியாமல் புகைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டால், அதை நிறுத்த நிக்கோட்டின் சூயிங்கம் உதவும். மனநல மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும்.

இது எல்லாவற்றையும் தடுக்க, தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு யார் கட்டாயப்படுத்தினாலும் சிறுவயதிலேயே ‘நோ’ சொல்லிப் பழகவேண்டும். இது புகை, குடிப் பழக்கத்துக்கு மிகவும் பொருந்தும். ‘இதில் என்னதான் இருக்கிறது?’ என்ற ஆவல்தான் முதன்முதலில் போதைப்பொருளை எடுக்கத் தூண்டும் எண்ணமாகும். ‘ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’ என்று நினைத்துக்கொண்டு அதை ஆரம்பித்தால், வாழ்க்கையையே அது தலைகீழாக்கும். போதை அடிமையாகும் பட்சத்தில் எந்தக் காரணத்துக்காகக் குடிக்க ஆரம்பித்தார்களோ, அதைவிட மிகப் பெரிய பிரச்சினையாகக் குடிநோய் - போதை மாறிவிடும். முதல் கோணல் முற்றும் கோணலாக முடிந்துவிடும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024