M.G.R. நன்றாக ரசித்து சாப்பிடுவார். அவருக்கு உள்ள சிறப்பு, மற்றவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் என்று விரும்புவார். தான் என்ன சாப்பிடுகிறாரோ அதே உணவு அதே தரத்தில் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் தனித்து சாப்பிட்ட நேரங்கள் மிக அபூர்வம். எப்போதும் குறைந்தது 10 பேராவது தன்னுடன் சேர்ந்து சாப்பிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு திருப்தி.
எம்.ஜி.ஆர். என்றாலே எல்லாவற்றிலும் முதலா வதுதானே. சமீபத்தில் கூட அவர் படித்த கும்பகோணம் ஆனையடி பள்ளி தமிழ்நாட்டி லேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற பள்ளி என்ற சிறப்பை பெற்றுள்ளது.
கும்பகோணம் ஆனையடி பள்ளியில் 2-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் வறுமை அவரை நாடகத்தில் தள்ளியது. பிள்ளைகளை பிரிய நேர்ந்தாலும் அங்கே போனாலாவது தன் இரண்டு பிள்ளைகளும் (எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும்) வயிறார சாப்பிடுவார் களே என்ற எண்ணத்தில் இருவரையும் நாடக கம்பெனியில் சேர்க்க கனத்த இதயத்துடன் அனுமதி அளித்தார் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா அம்மையார்.
அங்கும் சில நேரங்களில் மூன்று வேளைகள் சாப்பாடு கிடைக்காது. நாடக கம்பெனிகளை சொல்லியும் குற்றம் இல்லை. கிடைக்கும் வருமானத்தை வைத்து அனைவருக்கும் சோறுபோட வேண்டிய நிலை. எனவே, குறிப்பிட்ட நாளில் நாடகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்ற விதிமுறை. இப்படியே சுழற்சி முறையில் நடிகர்களுக்கு சாப்பாடு.
இது தெரியாத சிறுவன் எம்.ஜி.ஆர்., ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்காக பசியோடு மற்ற நடிகர்களுடன் பந்தியில் அமர்ந்தார். நாடக கம்பெனி மேலாளர் இதை கவனித்துவிட்டு ‘‘இன்றைய நாடகத்தில் நீ இல்லை. உனக்கு சாப்பாடு கிடையாது’’ என்று சிறுவனாக இருந்த எம்.ஜி.ஆரை எழுப்பி கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று சாப்பாட்டு கூடத்துக்கு வெளியே விட்டு வந்தார்.
அன்று பசியுடன் அழுத கொடுமையான அனுபவங்கள்தான் சிறுவர், சிறுமிகள், பள்ளிப் பிள்ளைகள் வயிறார சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி சத்துணவுத் திட்டம் என்ற ஐ.நா.சபை பாராட்டும் திட்டத்தை கொண்டுவர எம்.ஜி.ஆருக்கு உந்து சக்தியாக விளங்கியது.
இளம் வயதில் கிடைத்த அனுபவங்களால், சாப்பாடு விஷயத்தில் யாராவது பாரபட்சம் காட்டினால் எம்.ஜி.ஆருக்கு கடும் கோபம் வரும். படப்பிடிப்புகளின்போது படத்தை தயாரிக்கும் கம்பெனி சார்பில் யூனிட்டில் உள்ள எல்லாருக்கும் சாப்பாடு வழங்கப்படும். சில பட கம்பெனிகளில் பட்ஜெட் கருதி, படத்தின் கதாநாயகன், நாயகி, டைரக்டர் போன்றவர்களுக்கு உயர்தரமான சாப்பாடும் தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடும் போடப்படும். தான் நடிக்கும் படங்களில் தொழிலாளர்களுக்கும் தரமான சாப்பாடு போடப்படுவதை எம்.ஜி.ஆர். உறுதி செய்து கொள்வார்.
‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு தினமும் வகை வகையான அசைவ சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது. படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடு போடப் பட்டது. அவர்களுக்கு சாப்பாட்டில் முட்டை மட் டுமே வழங்கப்பட்டது. பொறுத்துப் பார்த்த தொழி லாளர்கள் ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளை யில் ஓய்வாக அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரிடமே தயங்கித் தயங்கி தங்கள் குறையை தெரி வித்தனர். விஷயத்தை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் சிவந்த முகம், கோபத்தில் மேலும் குங்கும நிறமானது. ‘‘நீங்கள் போய் வேலையை பாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கூறி தொழிலாளர்களை அனுப்பி விட்டார்.
மறுநாள் மதிய உணவு இடைவேளையின் போது தொழிலாளர்கள் வரிசையில் எம்.ஜி.ஆர். சாப்பிட அமர்ந்து விட்டார். சாப்பாடு பரிமாறு பவர்கள் கதிகலங்கிப் போய்விட்டார்கள். ‘‘அண்ணே, உங்களுக்கு சாப்பாடு உள்ளே இருக்கு..’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர்.
‘‘பரவாயில்லை, இருக்கட்டும். எங்கே உட் கார்ந்து சாப்பிட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதானே? பசிக்கிறது. சீக்கிரம் சாப்பாடு கொண்டு வாங்க’’ என்று எம்.ஜி.ஆர். பதிலளித்தார்.
வேறு வழியில்லாமல் அவருக்கும் அங்கேயே சாப்பாடு பரிமாறப்பட்டது. முட்டையைத் தவிர வேறு அசைவ வகைகள் எதுவும் வரவில்லை. ‘‘ஏன் அசைவ உணவுகள் வரவில்லை. எடுத்து வந்து பரிமாறுங்கள்’’ என்றார் எம்.ஜி.ஆர்.
‘‘உங்கள் அறைக்கு போய் எடுத்து வரு கிறோம்’’... பரிமாறியவர்களின் பவ்யமான பதில்.
‘‘ஏன்? தொழிலாளர்களுக்கு உள்ளது என்ன ஆச்சு?’’... எம்.ஜி.ஆரின் கேள்வியில் கூர்மை ஏறியது.
‘‘இவங்களுக்கு வெறும் முட்டை மட்டும்தான் போடச் சொல்லியிருக்காங்க’’... இந்த பதிலுக் காக காத்திருந்த எம்.ஜி.ஆர். கோபத்தின் உச்சிக்கே சென்றார்.
‘‘தயாரிப்பு நிர்வாகி எங்கே? ஏன் இப்படி சாப்பாட்டிலே பாகுபாடு செய்யறீங்க? தொழி லாளர்கள்தான் அதிகம் உழைக்கிறார்கள். அவங்க தான் நல்லா சாப்பிடணும். அவங்களுக்கு வெறும் முட்டை; எனக்கு மட்டும் காடை, கவுதாரியா? அவங்களுக்கும் தினமும் அசைவ சாப்பாடு கொடுங்க. கம்பெனியால முடியலைன்னா அதுக்கான செலவை என் கணக்கிலே வச்சுக்குங்க. சம்பளத்திலே கழிச்சுக்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளிவிட்டார்.
மறுநாள் முதல் தொழிலாளர்கள் அனைவருக் கும் எம்.ஜி.ஆர். சாப்பிடும் அதே வகை வகையான அசைவ சாப்பாடுகள்தான்.
எம்.ஜி.ஆருக்கு 1971-ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது கிடைக்கக் காரணமாக இருந்த ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் ஒரு காட்சி. சக ரிக் ஷா தொழிலாளி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ரிக் ஷா ஓட்ட முடியாத நிலை. அதனால், அன்று அவரது குடும்பத்துக்கு வருமானம் இல்லை. அதனால் சாப்பாடும் இல்லை. மதியம் அங்கு வரும் சாப்பாட்டுக்கார அம்மாவான பத்மினியிடம் இருக்கும் மொத்த சாப்பாட்டையும் எம்.ஜி.ஆர். வாங்கி, தான் கூட சாப்பிடாமல் நோயுற்ற தொழிலாளியின் வீட்டில் எல்லாரும் சாப்பிடக் கொடுத்தனுப்புவார்.
எம்.ஜி.ஆர். சாப்பிடாதது பற்றி ஒரு தொழிலாளி வருத்தப்பட, இன்னொரு தொழிலாளி ‘‘மத்தவங்க வயிறு நிறைஞ்சாத்தான் இவருக்கு (எம்.ஜி.ஆருக்கு) மனசு நிறைஞ்சுடுமே’’ என்பார்.
அதற்கு பதிலளிக்கும் எம்.ஜி.ஆர்., ‘‘மனுஷங்க வாழ்த்தறதை நம்ப முடியறதில்ல. ஆனால், வயிறு வாழ்த்தினால் நம்பலாம்பா’’ என்று கூறுவார்.
எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள். இன்றும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் வயிறு கள் எம்.ஜி.ஆரை தினமும் வாழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.
அசைவ உணவுகளை எம்.ஜி.ஆர். விரும்பி சாப்பிடுவார். இறால் குழம்பு மிகவும் இஷ்டம். சாப்பாட்டில் தினமும் கட்டாயம் ஏதாவது கீரை இருக்க வேண்டும். இனிப்பு வகைகளில் பாஸந்தி அவருக்கு பிடிக்கும். முந்திரி பகோடா அவரது ‘ஃபேவரைட்’. இதை எல்லாம் சாப்பிட்டாலும் தினமும் தவறாமல் சோற்றில் தண்ணீர் ஊற்றிவைத்திருந்து நீராகாரம் பருகுவார். கேட்டால், ‘‘உடல் உஷ்ணத்தை இது தணிக்கும் என்பதோடு, நான் பழசை மறக்காமல் இருக்க’’ என்று அடக்கமாக பதிலளிப்பார்.
- தொடரும்...
No comments:
Post a Comment