சொல் வேந்தர் சுகி சிவம்
இளைஞர்களிடம் இல்லாத "மை' !
இன்றைய இளைய தலைமுறையிடம் இருக்கிற உன்னதமான "மை' திறமை. இல்லாத "மை' பொறுமை. காத்திருப்பது என்பதும் ஒரு கலைதான். நம்முடைய Turn வரும் வரை பொறுமையாக இருப்பது என்பது அவசியம். அதற்கு நம் மீது நமக்கு ஆளுமை வேண்டும்.
ஆறு மாதம் விளையும் அரிசியை மூன்று மாதத்தில் விளைய வைத்தது விஞ்ஞானம். ஆறு வருஷத்தில் காய்க்கும் தென்னையை மூன்று வருஷத்தில் காய்க்க வைத்தது விவசாயம். விளைவு..... இந்தக் குறுவைப் பயிர்களையும் அவசர கால விவசாய விளைவுகளையும் உண்ணும் இளைய தலைமுறை அலாதியான அவசரத்தில் இருக்கிறது. படபடப்பு... பரபரப்பு... பதற்றம்... அவசரம்... ஆத்திரம்... இவை எதையுமே சாதிக்கப் போவதில்லை. கொழுத்த மீன் வரும் வரை காத்திருக்கும் "கொக்கொக்க' என்ற குறள் இளைய தலைமுறைக்கு அவசியம் புரிய வேண்டும்.
பஸ்ஸýக்கோ, ரயிலுக்கோ, சாப்பிடவோ, திருமணத்திற்கோ எதற்குமே காத்திருக்கத் தயாராக இல்லை.. அவசரப்பட்டால் முதுமையும் முந்தி வரும். மரணமும் விரைவில் வரும். அவசரப்படாத, நிதானம் பல ஆபத்துகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். படபடக்காமல் பிரச்னைகளைக் கையாண்டால் புதிய பிரச்னைகள் தவிர்க்கப்படும். இது பழைய தலைமுறையிடமிருந்து புதிய தலைமுறை படிக்க வேண்டிய கட்டாயப் பாடம்!
இந்திய விடுதலைப் போராட்டம் உச்சகட்டமாக இருந்த காலம் அது. இந்திய விடுதலை வீரர்களையும், தலைவர்களையும் துல்லியமாக ஆங்கில அரசு வேவு பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. பால கங்காதரத் திலகர் அப்போது விடுதலைப் போரின் பெருந் தளபதி. ஆறு மாத காலமாக அவர் வீட்டில் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமையல்காரர் தாம் வேலையில் இருந்து நிற்க விரும்புவதாக அறிவித்தார். திலகர் "ஏன்?' என்றார். ""நீங்கள் தரும் சம்பளம் ஆறு ரூபாய்..... அது போதவில்லை'' என்றார். ""அது சரி... சமைப்பதற்கு நான் தரும் சம்பளம் ஆறு ரூபாய்... ஆனால் என் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதற்கு உனக்கு பிரிட்டிஷ் சர்க்கார் தரும் சம்பளம் இருபத்தி நாலு ரூபாய்... ஆக முப்பது ரூபாய் சம்பாதிக்கிறாய். அப்படி இருந்துமா உனக்குச் சம்பளம் போதவில்லை!'' என்று இடி இடி என்று சிரித்தார் திலகர். உண்மையில் அந்தச் சமையல்காரர் பிரிட்டிஷ் அரசு அனுப்பிய ஒற்றர். ஆறு மாதத்திற்கு முன்பே இது திலகருக்குத் தெரியும். ஆனால் தெரிந்ததாகத் திலகர் காட்டிக் கொள்ளவே இல்லை. பிரிட்டிஷ் அரசு அந்த ஒற்றரை நம்பி ஏமாந்து போனது. அவர் ஒற்றர் என்பதால் திலகர் ஜாக்கிரதையாக இருந்தார். இந்த நிதானம் - பழைய தலைமுறையின் பாராட்டத்தக்க பண்பு. இது இன்றைக்கு இருக்கிறதா?
இணையாநிலை
அளவுக்கு மீறிய பொறுமையை நான் வற்புறுத்தவில்லை. பத்து வயதிலேயே நாற்பது வயதுக்குரிய நாற்காலிகளை அடைய நினைப்பதும், பதினைந்து வயதிலேயே இருபத்தைந்து வயதுக்குரிய கட்டில்களைப் பகிர்ந்து கொள்வதும், முப்பது வயதிலேயே அறுபது வயதுக்குரிய முதுமையில் தளர்வதும் சகிக்கும்படியாக இல்லை. இந்த அவசரம் இளமைக்கு அவசியமா?
பஞ்ச தந்திரக் கதைகளிலே அருமையான கதை ஒன்று உண்டு. ஒரு குட்டிக் குரங்கு படாத பாடுபட்டு ஒரு தோட்டம் போட்டது. செடிகள் வளர்ந்து மரமாகிப் பூத்துக் குலுங்கி காய்கனிகள் கொட்டும். ஆசை ஆசையாய் அள்ளித் தின்னலாம் என்று கணக்குப் போட்டது. என்ன கொடுமை! எதுவுமே முளைக்கவில்லை. ஆசை நிராசையானது. அது ஒரு நாள் சீனியர் குரங்கிடம் போய் ஆலோசனை கேட்டது. ""எதுவுமே முளைக்கவில்லை'' என்று ஒப்பாரி வைத்தது. சமாதானப்படுத்திய சீனியர் குரங்கு ""விதை போட்டா தண்ணி ஊத்தணும். நீ தண்ணி ஊத்தியிருக்க மாட்டே'' என்றது. ""ஆங்... ஒரு விதைக்கு எட்டு பக்கெட் தண்ணி தினம் தினம் காலையும் மாலையும் ஊற்றுவேன்'' என்று குட்டிக் குரங்கு குற்றச்சாட்டை மறுத்தது.
""அடடா... எட்டு பக்கெட் தண்ணி விட்டா விதை என்னாகும்... அழுகிப் போயிருக்கும்... அதான் முளைக்கல'' என்று தீர்ப்பு வழங்கியது சீனியர். குட்டிக் குரங்கோ... ""ஒரு விதை கூட அழுகல'' என்று உறுதியாக உறுமியது. ""அதெப்படி உனக்குத் தெரியும்'' என்றது சீனியர். ""நான் தான் விதை முளைச்சிருச்சான்ணு தினம் எடுத்து எடுத்துப் பாக்கறனே'' என்றது குட்டிக் குரங்கு.
தினம் தினம் விதையை எடுத்து எடுத்துப் பார்த்தால் எப்படி முளைக்கும்? அது அதற்கு என்று ஒரு காலம் இருக்கிறது. அந்தக் காலம் வரை காத்திருக்க வேண்டியது அவர் அவர் கடமை. அதற்குத் தேவை பொறுமை. ""பொறுத்தது போதும் பொங்கி எழு'' என்கிற குட்டித் தலைவர்கள் வெட்டிப் பேச்சை நம்பி, பொங்கிக் கொண்டே இருந்தால் வளர முடியுமா? திறமையோடு கூடப் பொறுமையும் கலந்தால் இளைய தலைமுறைக்கு வெற்றி நிச்சயம்.
No comments:
Post a Comment