Thursday, March 10, 2016

இன்று ஒரு கல்லறையின் அருகில்...


DINAMALAR


சென்னை சாந்தோமில் உள்ள கிறித்தவர்களுக்கான கல்லறை அது. உள்ளே உறங்கிக்கொண்டு இருக்கும் ஒரு உன்னத ஆத்மாவின் நினைவு நாள் இன்று(08/03/2016) என்றும் நீங்காத ராகங்களை மனதினுள் இசைத்துக்கொண்டு இருக்கும் அவரது கல்லறையில் முன் கலங்கிய கண்களுடன் நிற்கிறேன்அவரது கல்லறை பறவைகளின் எச்சங்கள் பட்டும், நுாலாம்படை சூழ்ந்தும், துாசு படிந்தும் மாசு நிறைந்தும் காணப்பட்டது

இப்போது கண்களுடன் சேர்ந்து மனமும் கலங்கியது

அந்தக் கல்லறைக்கு சொந்தக்காரர் நடிகர் சந்திரபாபு 'நகைச்சுவை மன்னன்' என அழைக்கப்பட்ட சந்திரபாபு தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடுகொண்ட அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர்.





'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே', 'நானொரு முட்டாளுங்க', 'ஒண்ணுமே புரியல உலகத்தில', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை' போன்ற பாடல்களினால் 50 ஆண்டுகளைக் கடந்தும், தமிழிசை நெஞ்சங்களை இன்றும் முணுமுணுக்க செய்பவர்.

“ஜோசப் பனிமயதாஸ் ” என்னும் இயற்பெயர்கொண்ட சந்திரபாபு அவர்கள், 1927 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 ஆம் நாள் தூத்துக்குடியில் பிறந்தவர்.பின்னாளில், சந்திரபாபு எனத் தமது பெயரை மாற்றிக்கொண்டார். இவருடைய தந்தை ரோட்டரிக்ஸ் ஒரு சுதந்திரப்போராட்டத் தியாகி ஆவார்.

விடுதலைப் போரில் ஈடுபட்டதன் காரணமாக ஆங்கில அரசால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதால், சிறிதுகாலம் ரோட்டரிக்சின் குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வந்தது. இலங்கையில் சிறிதுகாலம் மட்டுமே வாழ்ந்த அவருடைய குடும்பம், மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தது.

அதன் பிறகு, சினிமா துறையில் நுழைய பல முயற்சிகளை மேற்கொண்டார். பல இன்னல்களுக்குப் 1947 ஆம் ஆண்டு 'தன அமாராவதி' என்னும் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் சினிமாத்துறையில் முதன் முதலாகக் கால்பதித்தார். அதன் பிறகு தனது திறமையால் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர்.

1950-களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் என அனைவருடைய திரைப்படங்களிலும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து மிக விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார்.

'சபாஷ் மீனா' திரைப்படத்தில், சிவாஜி கணேசனுடன் இணைந்து அற்புதமான நகைச்சுவை கதாபாத்திரத்தினை ஏற்று நடித்த இவர், அத்திரைப்படத்தில் இன்னொரு கதாநாயகனாகவே நடித்து அனைவரையும் சிரிக்கவைத்தார் என்றுதான் கூறவேண்டும். மேலும் 'புதையல்', 'சகோதரி', 'நாடோடி மன்னன்', 'குலேபகாவலி', 'நீதி', 'ராஜா', 'பாதகாணிக்கை', 'நாடோடி மன்னன்', 'கவலை இல்லாத மனிதன்', 'அடிமைப்பெண்' போன்றவை இவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.

தமிழ் திரையுலக ரசிகர்களில், 'சந்திரபாபு என்னும் கலைஞனை ரசிக்காதவர்கள் எவரும் இல்லை' என்னும் அளவிற்கு ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் தமிழ் திரைப்படத்துறையில் கொடிகட்டிப் பறந்தார். 'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே', 'நானொரு முட்டாளுங்க', 'பிறக்கும் போது அழுகிறான்', 'சிரிப்பு வருது சிரிப்பு வருது', 'ஒண்ணுமே புரியல உலகத்தில', 'பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை', 'என்னை தெரியலையா இன்னும் புரியலையா' போன்ற பாடல்கள் 50 ஆண்டுகளையும் கடந்து இன்னும் இசை நெஞ்சங்களின் மனத்தில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. இதுவரை, தமிழ் சினிமாவில் பாடக்கூடிய நடிகர்கள் வரிசையில் சந்திரபாபுவிற்கு தனியிடம் உண்டு எனலாம். அதுவும் நகைச்சுவை நடிகர்களில் இவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாகப் பாடக்கூடியவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம்.

'கவலை இல்லாத மனிதன்' மற்றும் 'குமாரராஜா' போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்த இவர், 1966 ஆம் ஆண்டு 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்னும் திரைப்படத்தினை இயக்கி, தயாரித்ததோடு மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடித்திருப்பார்.

நகைச்சுவை நடிகராக மற்றவர்களை சந்தோசப் படுத்திய இவரின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகாரமானதாக இல்லை. அவர் திருமணம் செய்துகொண்ட பெண் முதலிரவில் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூறவே, மறுநாள் அவரை மரியாதையுடன் அனுப்பிவைத்தவர்.

சந்திரபாபுவின் இறுதிக்காலத்தில் சோகம் அதிகமாக அதிகமாக, மதுபழக்கமும் அதிகரித்தது. இதனால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், 1974 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் நாள் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தன்னுடைய 47 வது வயதில் இறந்தார்.

அவர்வெளி உலகுக்கு கலகலப்பாக இருக்க முயன்றார். ஆனால் தனிமை அவரை மெல்ல, மெல்லத் தின்றது -கொன்றது என்பதுதான் உண்மை.

சந்திரபாபுவின் நடிப்பு ஒரு சவால்தான். தனக்கெனத் தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, நடிப்பில் புதுமையை புத்தியவர். தன்னுடைய புதுமையான சிந்தனைகளை, தான் நடிக்கும் படங்களில் கதாபாத்திரமாக வெளிப்படுத்தியவர். சந்திரபாபு என்ற ஒரு கலைஞன் இறந்தாலும், தமிழ் சினிமாவில் அவர் விட்டுச் சென்ற குரல் என்றென்றைக்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

கல்லறையைவிட்டு வௌியேவரும் போது பக்கத்தில் இருந்த டீகடையின் ரேடியோவில் இருந்து சந்திரபாபுவின் குரல் காற்றில் கலந்து வருகிறது...

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை

மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்?

இந்தப்பாடல் அவர் அவருக்காக பாடியதா அல்லது நமக்காக பாடியதா தெரியாது? ஆனால் யாருமே எட்டிப்பார்க்காத அந்த உன்னத கலைஞனின் கல்லறையை தாலாட்டிக்கொண்டு இருந்தது மட்டும் நிஜம்...

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024