M.G.R. மீது அன்பு கொண்டு அவரோடு கடைசி வரை நெருக்கமாக இருந்தவர்கள் பலர். அவர்களில் சிலர், முதல் சந்திப்பின்போது அவரை சரியாக புரிந்து கொள்ளாமல் கருத்து மாறுபாடும் கசப்பும் கொண்டவர்கள். பின்னர், எம்.ஜி.ஆருடன் பழகி அவரது நல்லெண்ணத்தையும் திறமையையும் புரிந்துகொண்ட பின், ‘அவர் எம்.ஜி.ஆரின் ஆள்’ என்று பிறர் குறிப்பிடும் அளவுக்கு அவருக்கு நெருக்கமாயினர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் முக்கியமானவர்.
முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர். வளர்ந்து வந்த நிலையில், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியை சந்திப்பதற்காக ஒரு ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கே ஒரு படப்பிடிப்பில் கே.ஆர்.ராமசாமி நடித்துக் கொண்டிருந்தார். அவர் நடிக்க வேண்டிய காட்சியில் நடித்துவிட்டு வரும் வரை ஸ்டுடியோ வில் ஓர் அறையில் எம்.ஜி.ஆர். காத்திருந்தார்.
அப்போது, அந்த அறையில் தூய கதராடை யில் நெற்றியில் திருநீறுடன் அமர்ந்திருந்தவரைப் பார்த்து ‘ஸ்டுடியோவில் நடிகர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர் போலிருக்கிறது’ என்று எம்.ஜி.ஆர். நினைத்தார் . ஆனால், அவர் ஓர் இயக்குநர் என்று நண்பர் மூலம் அறிந்ததும் வியப்பில் ஆழ்ந்தார். புதுமுகங்களை டெஸ்ட் செய்யும் பணி அந்த இயக்குநருக்கு.
அந்த சமயத்தில், அங்கு நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வந்த இளைஞர் ஒருவரை நடித்துக் காட்டச் சொன்னார் இயக்குநர். பின்பு, கேலியும் கிண்டலுமாக பேசி, ‘‘தகவல் சொல்லி அனுப்புவாங்க’’ என்று இளைஞரை அனுப்பி விட்டார். கே.ஆர்.ராமசாமிக்காக காத்திருந்த எம்.ஜி.ஆர். நடப்பவற்றை கவனித்தபடி அறையில் அமர்ந்திருந்தார்.
அந்த இளைஞர் சென்ற பிறகு, ‘‘கண்ணாடி யிலே மூஞ்சியை பார்க்காமலேயே நடிக்க வந்து விடுகிறார்கள். இவங்களை எல்லாம் டெஸ்ட் செய்ய வேண்டும் என்பது என் தலையெழுத்து’’ என்று அந்த இயக்குநர் தனக்குத் தானே கூறியதைக் கேட்டு எம்.ஜி.ஆருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் பலமாக சிரிப்பதை பார்த்து ‘கொஞ்சம் கூட அடக்கமே இல்லையே’ என்று கோபப்பட்டார் அந்த இயக்குநர். எம்.ஜி.ஆர். பதிலளிக்க யோசித்தபோது, அவரை சந்திக்க கே.ஆர்.ராமசாமி வந்து விட்டார். அவருடன் பேசப் போய்விட்டார் எம்.ஜி.ஆர்.
முதல் சந்திப்பிலேயே அந்த இயக்குநருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நல்ல அபிப்ராயம் ஏற்பட வில்லை. என்றாலும் காலம் அவர்களை ஒருங்கிணைத்தது. எம்.ஜி.ஆர். நடித்த படத்தை இயக்க அந்த இயக்குநரே அமர்த்தப்பட்டார். அந்தப் படம் ‘சக்கவர்த்தி திருமகள்.’ அந்த இயக்குநர் ப.நீலகண்டன்.
எம்.ஜி.ஆர். எப் போதுமே தான் நடிக் கும் படங்களின் காட்சி அமைப்புகள், கேமரா கோணங்கள், பாடல்கள், இசை உட்பட எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவர். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்
‘ஆடவாங்க அண்ணாத்தே... அஞ்சா தீங்க அண்ணாத்தே... அங்கே இங்கே பாக்குறது என்னாத்தே...’
என்று ஒரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் எம்.ஜி.ஆர். ஆட்டத்தில் தூள் கிளப்பியிருப்பார்.
அந்த பாடல் காட்சி படப்பிடிப்புக்கான செட்டில் நுழைந்து எம்.ஜி.ஆர். பார்வையிட்டார். கேமரா வைக்கப்பட்டிருந்த ஆங்கிளையும் பார்த்தார். ‘‘செட் ரொம்ப அருமையா இருக்கு. இந்த அழகு திரையில் தெரியணும்னா கேமராவை உயரமான இடத்தில் வைக்கணும். கேமரா ஆங் கிளை மாத்திட்டு என்னைக் கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென மேக் அப் அறைக் குள் சென்றுவிட்டார்.
விஷயம் அறிந்த இயக்குநர் ப.நீலகண்டன் கொதித்தார். ‘‘படத்தின் டைரக்டர் நானா? எம்.ஜி.ஆரா? கேமரா ஆங்கிளை மாற்றி அதற்கு ஏற்றபடி லைட்டிங் செய்ய நேரமாகும். இப்போது இருக்கும்படியே படமாக்கலாம். எம்.ஜி.ஆரை அழைத்து வா’’ என்று உதவியாளரை விரட்டினார்.
அவர் போய் எம்.ஜி.ஆரிடம் தயங்கிபடி விஷ யத்தை சொன்னதும், ‘‘காட்சி நல்லா வரணுமே என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன். எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. விடிய, விடிய இருந்து நடிச்சு கொடுத்துட்டுப் போறேன். அதோட, காட்சி நல்லா வந்தா டைரக்டருக்குத்தான நல்ல பேரு. டைட்டில்ல கேமரா ஆங்கிள் எம்.ஜி.ஆருன்னா போடப் போறாங்க? போய் சொல்லுங்க’’ என்று உதவியாளரை எம்.ஜி.ஆர். திருப்பி அனுப்பினார்.
எம்.ஜி.ஆரின் கருத்து இயக்குநர் நீலகண் டனை யோசிக்க வைத்தது. எம்.ஜி.ஆரின் விருப்பப் படியே கேமரா ஆங்கிள் மாற்றப்பட்டு காட்சி பட மாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும் தான் கூறியபடியே நேரமானபோதும் காத்திருந்து நடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். படத்தில் அந்தக் காட்சி சிறப்பாக வந்தது. பாராட்டும் கிடைத்தது.
அதன் பிறகுதான், எம்.ஜி.ஆரின் நுண்ணறி வையும் நல்லெண்ணத்தையும் புரிந்துகொண் டார் இயக்குநர் ப.நீலகண்டன். பிறகென்ன? இரு வருக்கும் நட்பு பலப்பட்டது. எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநர் என்று சொல்லும் வகையில், அவர் நடித்த அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற் றார் ப.நீலகண்டன்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற்று ‘காவல்காரன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்தார். படத்தின் இயக்குநரான நீலகண்டன் அவருக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். எம்.ஜி.ஆர். வரும்போது சமயோசிதமாக அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒலிக்க நீலகண்டன் ஏற்பாடு செய்திருந் தார். தான் வந்தபோது ஒலித்த பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். முகம் மலர அதை ரசித்தார். மறுபிறப்பு எடுத்து வந்த எம்.ஜி.ஆரை வாழ்த்தும் வகையில் இருந்த அந்த சூப்பர் ஹிட் பாடல்....
‘‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது...”
- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்
எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். 18.1.1957-ம் ஆண்டு வெளியான ‘சக்கரவர்த்தி திருமகள்’ தொடங்கி, 18.3.1976-ம் ஆண்டு வெளியான ‘நீதிக்குத் தலைவணங்கு’ வரை எம்.ஜி.ஆர். நடித்த 17 படங்களை ப.நீலகண்டன் இயக்கியுள்ளார். எம்.ஜி.ஆர். - நீலகண்டன் கூட்டணியில் முதல் படம் வெளியான தேதியும் கடைசி படம் வெளியான தேதியும் 18தான்.
No comments:
Post a Comment