இரண்டு வெவ்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த நான்கு மாணவர்கள், தங்கள் கல்லூரி வளாகத்தில் நிலவிய சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கான செயலியை உருவாக்கியுள்ளனர்.
நான்கு வெவ்வேறு பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் நால்வர், சில்லறைக் காசுகளுக்கான தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் பே- மிண்ட் என்ற செயலியை உருவாக்கியுள்ளனர்.
ராஜத் யாதவ் மற்றும் ஷுபம் ஜிந்தால் ஆகிய இரு மாணவர்களும் ஐஐடி சென்னையில், கட்டிடவியல் மற்றும் மின்னியல் மின்னணுவியல் துறைகளில் கடைசி ஆண்டில் படிக்கின்றனர். கவுசிக் மற்றும் ஆசிஷ் நோயல் இருவரும் பிஐடி ராஞ்சியில், கணிப்பொறி அறிவியல் மற்றும் மின்னியல் மின்னணுவியல் துறைகளில் கடைசி ஆண்டில் படிக்கின்றனர்.
யாதவ் மற்றும் ஜிந்தால் ஆகியோர், ஸ்டார்ட்-அப் தொகையாக 2 லட்சம் ரூபாயை முதலீடு செய்ய, கவுசிக் மற்றும் ஆசிஷ் தொழில்நுட்ப ரீதியாக பணிபுரிந்துள்ளனர். ஐஐடி சென்னை தொழில் முனைவோர் பிரிவு இதற்கு ஆதரவளித்துள்ளது.
இந்த எண்ணம் எப்படி வந்தது?
"எங்கள் கல்லூரி வளாகத்தில் ஒரு முக்கியப் பிரச்சனை இருந்தது. இங்கே இருக்கும் ஏழு கடைகளிலும் எப்போதும் சில்லறை தட்டுப்பாடு இருந்தது. கடை விற்பனையாளர்கள், சில்லறைக்கு பதிலாக சாக்லேட்டுகளையும், இன்ன பிற பொருட்களையும் கொடுத்து வந்தார்கள். அதை எப்படிச் சரி செய்யலாம் என்று யோசித்தோம். பே- மிண்டை உருவாக்கினோம்.
இந்த ஆப்பை சாரங் விழாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் சர்வர் உள்ளிட்டவைகளில் இருந்து அனுமதி கிடைக்க தாமதமானதால், இப்போதுதான் வெளியிட முடிந்தது.
இதைப் பயன்படுத்தி வரும் மாணவர்கள் ஏராளமான கருத்துக்களைச் சொல்கின்றனர். வாரம் ஒரு முறை, நான் 600 ரூபாயை அதில் போடுகிறேன். இதில் கேஷ் பேக் வசதியும் இருக்கிறது. சில சமயங்களில் சட்டை மற்றும் பேண்ட்களில் பணம் இருக்கிறதா என்று பார்க்காமலேயே அவற்றைத் துவைத்துவிடுவேன். இப்போது அந்தப் பிரச்சனை இல்லை. சில்லறைக்காக நீண்ட வரிசையிலும் நிற்க வேண்டியதில்லை" என்கிறார் யாதவ்.
பிப்ரவரி மத்தியில் வெளியான இந்த ஆப்பை, வளாகத்தில் இருக்கும் சுமார் 1,200 மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த வாரம் பிஐடி ராஞ்சியில் நடக்கவிருக்கும் கலாச்சார விழாவில் ஆப் அறிமுகப்படுத்தப்படுகிறது.
எளிய வழியில் பரிமாற்றம்
* சில்லறையைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, பதிவிறக்கம் செய்யப்பட்ட பே-மிண்ட் ஆப்பைத் திறங்கள்.
* கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் க்யூ.ஆர். கோடை ஸ்கேன் செய்தால் போதும்.
* எவ்வளவு தொகை என்பதை உள்ளிட்டு, பரிமாற்றத்தை நடத்த முடியும்.
இப்போதைக்கு கல்லூரி வளாகத்தில் பயன்படுத்தப்படும் செயலியை, விரிவுபடுத்தும் திட்டம் இருக்கிறதாகக் கூறுகின்றனர் இந்த தொழில்நுட்ப மாணவர்கள்.
பே- மிண்ட் செயலிக்கான இணைப்பு பே-மிண்ட்
No comments:
Post a Comment