வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகதனித்து நின்று தேர்தலை சந்திக்கும் என நேற்று அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திமுக, பாஜக, மக்கள் நல கூட்டணி என பல கட்சிகள் விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என தவியாய் தவித்து வந்தன. விஜயகாந்த், திமுக அல்லது பாஜக கூட்டணிக்கு கட்டாயம் போவார் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக திமுக பக்கம் தான் போவார் என அதிகம் பேசப்பட்டது.
ஆனால் அவர் யாருடனும் போகாமல் தனித்து களமிறங்குவோம் என விஜயகாந்த் அறிவித்தது திமுக தரப்பை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் ஏன் தனித்து நின்று தேர்தலை சந்திப்போம் என அறிவித்தார் என பல தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் வலம் வருகின்றன.
தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நடத்தப்பட்ட நேர்கணலின் போது அவர்களிடம் யாருடன் கூட்டணி வைக்கலாம் என கேட்கப்பட்டதாம். அதில் ஒருசிலர் திமுக உடன் கூட்டணி வைக்கலாம் என்றனர். பலர் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என கூறியுள்ளனர்.
திமுக, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தேமுதிக சார்பில் முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட்டது, துணை முதலமைச்சர் பதவி, ஆட்சியில் பங்கு, முக்கிய சில இலாக்காக்கள் போன்றவை. ஆனால் திமுக தரப்பு எதற்கும் இறங்கி வரவில்லை. தேமுதிக தரப்பில் முதலில் கேட்கப்பட்ட 104 தொகுதிகளில் 55 தொகுதிக்குதான் திமுக சம்மதித்தது. இது தேமுதிக தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிகவின் முக்கியமான எந்த நிபந்தனைக்குமே திமுக தரப்பு இறங்கி வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடந்த தேர்தலில் வடிவேலுவை களமிறக்கி விஜயகாந்தை கிண்டல் செய்ததையும், அதனை சன் தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப ஒளிபரப்பி விஜயகாந்தை அவமான படுத்தியதை பிரேமலதா இன்னமும் மறக்கவில்லையாம்.
கடந்த காலங்களில் விஜயகாந்துக்கு எதிராக திமுக செய்தவற்றை தேமுதிக தரப்பு இன்னமும் மறக்கவில்லை என கூறப்படுகிறது. திமுக உடன் கூட்டணி அமைக்க முதல் தடையாக இருந்தது பிரேமலதா தானாம். அவர் தான் திமுக கூட்டணியை தவிர்க்க பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஆனால் பாஜக தரப்பிடமும் பல கோரிக்கைகளை வைத்துள்ளது தேமுதிக தரப்பு. 150 சீட்டுகள், ராஜ்யசபா எம்.பி., பிரேமலதாவுக்கு பொறுப்பு, முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்க வேண்டும் போன்றவை அந்த கோரிக்கைகள். ஆனால் பாஜக தரப்பு இதனை ஏற்கவில்லையாம்.
மேலும் பாஜக உடன் கூட்டணி வைத்து அது தோல்வியில் முடிந்தால் கட்சி காணாமல் போய்விடும். திமுகவை எந்த காலத்திலும் நம்ப முடியாது என்பது பிரேமலதாவின் கருத்து. எனவே தான் தனித்து போட்டியிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்ற அதிரடி முடிவை தேமுதிக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
http://tamil.webdunia.com/article/regional-tamil-news/the-reason-behind-of-the-dmdk-election-alliance-issue-116031100020_1.html
No comments:
Post a Comment