Wednesday, March 8, 2017

திருச்சியில் பழனிசாமி அரசு விழா : தூங்கி வழிந்த எம்.எல்.ஏ.,க்கள்

திருச்சி: திருச்சியில் நேற்று, முதல்வர் பழனிசாமி விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் துாங்கி வழிந்தனர்.திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட, எட்டு மாவட்டங்களில், நலத்திட்ட பணிகள் துவக்க விழா நேற்று, திருச்சி அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

 முதல்வர் பழனிசாமி, திட்டங்களை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

வாசிக்க திணறல் : விழாவில், எழுதி வைத்து படித்த முதல்வர் பழனிசாமி, தமிழில் எழுதியிருந்ததை கூட படிக்க முடியாமல், வார்த்தைகள் உச்சரிப்பில் திணறினார். ஜெயலலிதாவின் சாதனைகளை குறிப்பிட்டு பேசும் போது, மேடையில் இருந்த அமைச்சர்கள் மட்டும் கைதட்டினர்.அறந்தாங்கி, மணப்பாறை எம்.எல்.ஏ.,க்கள் கண்ணயர்ந்தனர். அமைச்சர், ஓ.எஸ்.மணியன் துாக்கத்தை அடக்க முடியாமல், திண்டாடினார்.
மரியாதை இல்லை : முதல்வரை வரவேற்கும் வகையில், திருச்சியில் வைக்கப்பட்டிருந்த பேனர், போஸ்டர்களில், ஜெ., சசிகலா, தினகரன் படங்கள் பெரிதாக இடம் பெற்றிருந்தன. பழனிசாமி படம், போஸ்டரின் கீழே, போனால் போகிறது என்பது போல் போடப்பட்டிருந்தது.
கடும் பாதுகாப்பு : முதல்வருக்கு ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களோ, தீபா ஆதரவாளர்களோ கருப்புக் கொடி காட்டக்கூடும் அல்லது கருப்புச்சட்டையுடன் வந்து எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என, உளவுத்துறை போலீசார் எச்சரித்திருந்தனர்.எனவே, விழா நடந்த அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரி அருகே, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்வர் விழா நடந்த அரங்கில், கருப்புச் சட்டை அணிந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

'அழிக்க முயற்சி' : திருச்சி வரும் வழியில், நாமக்கல்லில் கட்சியினர் மத்தியில் பழனிசாமி பேசியதாவது:ஜெயலலிதா எதிர்பாராத விதமாக இயற்கை எய்திவிட்டார். அவரது ஆட்சி தற்போது அமைந்துள்ளது. அவர் கொண்டு வந்த திட்டங்களை நிறைவேற்றி, நல்லாட்சி நடத்தப்படும். சில அரசியல்வாதிகள், இந்த இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை பெற்று வளம் பெற்றவர்கள், இந்த கட்சியையும், ஆட்சியையும் அகற்ற வேண்டும்; அழிக்க வேண்டும் என துடிக்கின்றனர். அதற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024