ஃபேமிலி டாக்டர் சரி. .. ஃபினான்ஷியல் டாக்டர் தெரியுமா? #NeedToKnow
நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே ஃபேமிலி டாக்டரைப் பார்க்கிறோம். அதேமாதிரி நிதி சார்ந்த விஷயத்திலும் ஃபினான்ஷியல் டாக்டரை அணுகுகிறோமோ என்றால் 100-க்கு 99% இல்லை. எப்படி நமது உடல் நலன் மீது நாம் அக்கறை காட்டுகிறோமோ, அதைப்போல நம் வாழ்க்கையை வளமாக்க நிதி சார்ந்த விஷயத்திலும் கொஞ்சம் அக்கறை காட்டுவது வாழ்க்கைக்கு நல்லது.
நிதி சார்ந்த விஷயத்தைப் பொறுத்தவரை நாமாகப் பல விஷயங்களைக் கற்றறிந்து முதலீடுகளை மேற்கொண்டு அதன் மூலம் வருமானம் சம்பாதிப்பது அல்லது வருமான வரியை மிச்சப்படுத்துவது என்பது கடினமான காரியம். ஆனால், நிதி ஆலோசகருக்கு அந்தத் துறை சார்ந்த அறிவு அதிகம். ஆனால், நம்மில் பலபேர் `அவரு சொன்னாரு, இவரு சொன்னாரு' எனச் சொல்லியே தவறான மற்றும் மோசடி முதலீட்டுத் திட்டங்களில் பணத்தைக் கொட்டுகின்றனர். இறுதியில் முழு பணத்தையுமே இழக்கின்றனர். பங்குச்சந்தையில் ஆத்திச்சூடி கூடத் தெரியாதவர்கள் கூட `தினமும் 5,000 ரூபாய் சம்பாதிக்கலாம். 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்' என ஆசை வார்த்தைகளுக்கு ஏமாந்து கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழக்கிறார்கள். ஆகையால் பணத்தை சம்பாதிப்பதற்காக மட்டுமில்லை, பணத்தை இழக்காமல் மற்றும் மிச்சப்படுத்தவும் நிதி ஆலோசகர்கள் அவசியம்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
குழந்தைகளின் கல்வி, மகளின் திருமணம், வீடு கட்டுதல், ஓய்வுக் காலம், வருமான வரி, வரி சேமிப்பு என நம் வாழ்க்கையில் ஆறு முதல் அறுபது வரை பல நிதி சார்ந்த விஷயங்களைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. நம்மிடம் கட்டுக் கட்டாக பணம் இருந்தாலும், கையில் சுத்தமாக பணமே இல்லை என்றாலும் நிதி சார்ந்த தேவைகள் உருவாகித்தான் வருகிறது. ஆனால், நம் ஊரில் நிதி ஆலோசனை வழங்குகிறேன் என்ற பெயரில் பல நிதி ஆலோசகர்கள் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அணுகுமுறை, நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை எனப் பல விஷயங்களைக் கவனித்து அதன்பின் ஆலோசனைகளைக் கேட்பதே சிறந்தது. ஆகையால் சிறந்த நிதி ஆலோசகரைத் தேர்ந்தெடுக்க ஒரு சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டிய அவசியம். உங்களுக்காக...
நிதி ஆலோசகர் தகுதி!
நல்ல நிதி ஆலோசகரைக் கண்டுபிடிப்பது சற்று கடினமான விஷயம். எப்போதும் நமக்குத் தெரிந்த, நம்பத் தகுந்த யாராவது ஒருவர், நிதி ஆலோசகரைச் சிபாரிசு செய்தால், அவரைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது. இல்லையெனில் நிதி ஆலோசகரின் கல்வி, அனுபவம் மற்றும் எந்த மாதிரியான முதலீட்டுச் சாதனங்களை வழங்கி வருகிறார் போன்றவற்றை விசாரித்து நம்பிக்கையின் அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.
பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ், வருமான வரி என நிதி சார்ந்த எந்தச் சந்தேகமாக இருந்தாலும், உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பவராக இருக்க வேண்டும். நமக்குத் தெரியாத பல கேள்விகளைக் கேட்போம். அந்தக் கேள்விகளை, நமது நிலைமையைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு ஆலோசனை வழங்க வேண்டும். மொத்தத்தில் எப்போது போன் செய்தாலும், போனை எடுப்பவராக இருக்க வேண்டும்.
அனுபவம்?
நிதி ஆலோசனை வழங்கும் நபருக்கு அனுபவம் இருக்கிறதா என்பதை அலசி ஆராய வேண்டியது அவசியம். அவர் என்ன படித்து இருக்கிறார்? எத்தனைப் பேருக்கு நிதி ஆலோசனை வழங்கி வருகிறார்? யார் யாருக்கு ஆலோசனை வழங்குகிறார் என்பதோடு மட்டுமில்லாமல், அவரிடம் ஆலோசனை கேட்பவருடைய முகவரி அல்லது போன் நம்பர் கேட்டு வாங்கி, அவருடைய கருத்துகளையும் கேட்டறிந்து அதன் பிறகு அவரைத் தேர்ந்தெடுக்கலாம்.
நிதி ஆலோசகரிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாச்சு, அவ்வளவு தான் கடமை முடிந்தது என நினைக்கக்கூடாது. அவர் என்ன செய்கிறார்? எந்தெந்த திட்டங்களில் முதலீட்டினை மேற்கொள்கிறார்? அவர் மேற்கொண்டுள்ள முதலீட்டின் வருமானம் வருகிறதா அல்லது நஷ்டம் வருகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். குறுகிய காலத்தில் நஷ்டம் என்றால் கவலையடையத் தேவையில்லை. ஆனால், நீண்ட காலத்தில் அது தொடரக் கூடாது. மூன்று அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறை அவரை நேரில் சந்தித்து கலந்தலோசிக்க வேண்டும்.
கட்டணம்!
நிதி ஆலோசனையைப் பொறுத்தவரை கமிஷன் மற்றும் நிரந்தரக் கட்டணம் என பல்வேறு வழிமுறைகளில் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பொதுவாக ஆலோசனைகள் என்றாலே மக்கள் அதை இலவசமாக எதிர்பார்க்கிறார்கள். வெறும் ஆலோசனைக்குப் பத்தாயிரம், இருபதாயிரம் ரூபாய் என்றால் பெரும்பாலும் யாரும் தர முன்வருவதில்லை. ஆனால், நீண்ட கால அடிப்படையில் 10%, 12%-க்கு மேல் வருமானம் வரும்போது ஒரு சதவிகிதம் என்பது எல்லாம் பெரிய தொகையும் இல்லை, பெரிய பாதிப்பும் இல்லை.
ஆனால், நிதி ஆலோசகர் நிர்ணயிக்கும் கட்டணம் நியாயமாக இருக்க வேண்டும். உங்களுடைய போர்ட்ஃபோலியோவில் ஒரு சதவிகிதம் வசூலிக்கலாம். உதாரணத்துக்கு, உங்களுடைய ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் 1% கட்டணம் என வசூலிக்கப்படும். சில பேர், ஒவ்வொரு ஆண்டும் ரூ.20,000 என ஒரு குறிப்பிட்ட தொகையை நிரந்தரமாக நிதி ஆலோசனையாகக் கேட்டு பெறுவார்கள். இந்த கட்டணத்தைப் பொறுத்தவரை ஒரு ஆண்டுக்கு 3,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வசூலிப்பவர்களும் இருக்கிறார்கள்.
நல்ல ஃபினான்ஷியல் டாக்டர்!
நிதி ஆலோசகரைத் தேர்வு செய்வதைப் பொறுத்தவரை, செபி இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆலோசகர்கள் பலர் உள்ளார்கள். அதில் ஆலோசகருடைய பெயர் மற்றும் மற்ற விவரங்கள் அடங்கி இருக்கும். அவரைத் தொடர்பு கொண்டு அவர் மீது நம்பிக்கை ஏற்படும் பட்சத்தில் அவரிடம் நிதி ஆலோசனையைத் தொடரலாம். இல்லையெனில் உங்களுக்கு நம்பகமானவரிடம் நிதி ஆலோசனையைத் தொடரலாம். எவ்வளவு கட்டணம் செலுத்துகிறோம் என்பதைவிட, சரியான முதலீட்டுச் சாதனங்களில் முதலீடு செய்கிறோமா என்பதே முக்கியம். எப்படி உங்கள் ஃபேமிலி டாக்டரை நம்பிக்கையாக அணுகுகிறீர்களோ, அதைப்போல நல்ல ஃபினான்ஷியல் டாக்டரைத் தேர்ந்தெடுத்துப் பயனடையலாமே.
No comments:
Post a Comment