தகிக்கும் தமிழகம்... தாகத்தில் தவிக்கும் மக்கள்...! நிலவரம் புரிகிறதா தமிழக முதல்வரே..?!
தமிழகத்தில் குடிநீர், விவசாயம் இரண்டுக்கும் ஆதாரமாக விளங்கும் நீர்நிலைகள், பராமரிப்பின்றித் தூர்ந்துபோய் இருக்கின்றன. அதே நேரத்தில் குடிக்க தண்ணீர் இல்லாமல் தமிழக மக்கள் தவித்து வருகின்றனர். ஆங்காங்கே பல தொண்டு நிறுவனங்களும், மக்கள் பிரதிநிதிகளும் நீர்நிலைகளை தூர்வாரிப் பராமரித்து வருகின்றனர். இந்தச் சூழலில் நீர்நிலைகளைப் பராமரிக்க 'குடிமராமத்து' என்ற பழங்கால முறையினை தமிழக அரசு கையில் எடுத்திருக்கிறது. பொதுமக்கள் பங்களிப்புடன் சிறிய நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. குடிமராமத்து எவ்வளவு தூரத்துக்குப் பயன் அளிக்கும்?
365 நாட்களும் பராமரிப்பு
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் 1837-ம் ஆண்டு வரை குடிமராமத்து முறையில் மக்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. கால்வாய் மணியம் என்ற பெயரில் ஒரு வாய்க்காலுக்கு ஒரு மணியக்காரர் இருப்பார். ஒரு குடும்பத்துக்கு இருவர் வீதம் குடிமராமத்துப் பணிகளில் மக்கள் ஈடுபடுவார்கள். ஏரி மட்டுமின்றி வரத்து கால்வாய் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் சுத்தம் செய்வார்கள். இதனால் ஏரியில் தண்ணீர், இருந்தாலும் இல்லாவிட்டாலும் 365 நாட்களும் பராமரிப்பு இருக்கும். குடிமராமத்து மூலம், ஏரிகள் கிராமத்தின் உயிர்நாடியாகவே இருந்தன. அரசின் திட்டம் பலன் அளிக்குமா?
தனியாரிடம் விடக்கூடாது
பண்டைய காலத்தில் மக்கள் பங்களிப்புடன் நீர்நிலைகளில் குடிமராமத்து மேற்கொள்ளப்பட்டது. நீர்நிலைகளில் அரசின் ஆதிக்கம் தொடங்கியபோதுதான் குடிமராமத்து முற்றிலும் தடைபட்டுப்போனது. இப்போது 10 லட்சம் ரூபாய்க்கு உள்பட்ட பணிகளை மட்டுமே மக்களைக் கொண்டு குடிமராமத்து செய்யப்படும் என்று அரசு கூறி உள்ளது. இதுகுறித்து தஞ்சை காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதனிடம் பேசியபோது, "குடிமராமத்துப் பணிகள் என்பது 1963-ம் ஆண்டுவரை செம்மையாக நடந்தது. நீர்நிலைகள் பராமரிப்பு என்பதில் அரசியல் நுழைந்த பிறகு, ஒப்பந்தக்காரர்கள் கையில் போனபிறகு குடிமராமத்து முறை இல்லாமல் போய்விட்டது.
நீர்நிலைகளை பராமரிக்கிறோம் என்ற பெயரில் எந்த ஒரு தனியாரிடமும் ஒப்பந்தம் இல்லாமல், மக்களைக் கொண்டு செம்மையாக செய்தால் நீர்நிலைகளில் மிகக் குறைந்த அளவிலான நீரைக் கூட சேமிக்க முடியும். இப்போது குடிமராமத்து பணிகளைச் செய்ய வேண்டும் எனில், 1950 ஆண்டுக்கு முன்பு உள்ள வருவாய் பதிவேடு அளவுகளின்படி உள்ள நீர்நிலைகளில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
தன்னார்வ முயற்சிகள்
சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு கனமழை பெய்தபோதும் அப்போது கிடைத்த மழை நீர் சேமிக்கப்படவே இல்லை. காரணம் சென்னையைச் சுற்றி இருக்கும் நீர் நிலைகள் முறையாகத் தூர்வாரப்படாததும், பராமரிக்கப்படாததும்தான். இதை உணர்ந்த தன்னார்வ அமைப்புகள் நீர்நிலைகளை தாங்களாகவே தூர்வாரி வருகின்றன. இதுகுறித்து தமிழக அரசின் முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரப்பனிடம் பேசினோம். "பல்வேறு தன்னார்வ அமைப்புகள் நீர்நிலைகளைப் பாதுகாக்க களம் இறங்கி உள்ளன. விகடன் குழுமத்தின் சார்பில் படப்பை அருகில் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. குடிமராமத்துப் பணிகளின்போது ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ளும்படி விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கலாம். அரசியல்வாதிகளின் குறுக்கீடுகளை அனுமதிக்கக் கூடாது. அதே போல 100 நாள் வேலைத் திட்டத்தில் குடிமராமத்துப் பணிகளைச் செய்யக்கூடாது" என்றார்.
ஆக்கிரமிப்புகளை என்ன செய்வீர்கள்
நீர்நிலைகளைப் பாதுகாக்க குடிமராமத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது நல்ல விஷயம்தான். ஆனால், இப்போது நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர், ஜனகராஜனிடம் பேசினோம். "நீர்நிலைகளைப் பராமரிப்பதில் அரசுக்கு திடீரென ஞானோதயம் வந்திருக்கிறது. இப்போது ஏரியில் பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தொழிற்பேட்டைகள் இவையெல்லாம்தான் இருக்கின்றன. குடிமராமத்து செய்யப்போகும் அரசு இதையெல்லாம் என்ன செய்யப்போகிறது. குடிமராமத்தின்போது ஏரியின் வரத்துக்கால்வாய், நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மற்றபடி குடிமராமத்து என்பது ஒரு மாற்றத்துக்கான விஷயம்தான்" என்றார்.
தமிழகம் தண்ணீர் இன்றி தவிப்பதற்கு நீர் நிலைகள் பராமரிப்பு மோசமான நிலையில் இருப்பதுதான் காரணம். தமிழகம் தகிப்பது ஆட்சியாளர்களுக்குப் புரியாமல் இல்லை. ஆனால், மக்களைத் தவிக்க விட்டுவிட்டு அரசு மெளனமாக வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.
- கே.பாலசுப்பிரமணி
No comments:
Post a Comment