Friday, March 10, 2017


ஆர்.கே.நகர் தொகுதியும், 3,500 டன் குப்பையும்! #RKnagarBielection


முதல்வர் தொகுதி என்று கடந்த காலங்களில் பெருமையுடன் பேசப்பட்டாலும், ஆர்.கே.நகர் போல பிரச்னைகளையே போர்வையாக்கிக் கொண்ட ஒரு தொகுதியை பார்ப்பது அரிதுதான் என்கின்றனர் தொகுதி மக்கள்.பெரும்பான்மை சமூகமாக வன்னியர்கள் அடுத்து ஆதி ஆந்திரர் மக்கள் தொகுதியில் உள்ளனர். மூன்றாவதாக , தலித், நாடார், இஸ்லாமிய இன மக்கள் சமமாக உள்ளனர். மீனவர், செட்டியார்உள்ளிட்ட சமூக மக்கள் இதையடுத்த பெரிய சமூகத்தினர். தொகுதி சீரமைப்பின் காரணமாக மீனவர்கள் நிறைந்த ராயபுரம் தொகுதியின் இரண்டு வார்டுகள் ஆர்.கே.நகரில் இணைந்து விட்டதால் தற்போது ஆர்.கே.நகரில் வன்னியர்- மீனவர் சம வாக்கு வங்கியுடன் காணப்படுகின்றனர். அதேபோல் தமிழகத்தின் பெரிய மீன்பிடித் துறைமுகமான காசிமேடு மீன்பிடித் துறைமுகம், ராயபுரம் தொகுதியில் இருந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்து விட்டது. மக்கள் வசிப்பிட (ரெசிடென்டல் ஏரியா) பகுதியான ஆர்.கே.நகரில் ஐ.ஓ.சி, பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் என ஏராளமான மத்திய அரசு நிறுவனங்கள் இருப்பதால் ஆயில், புகை சார்ந்த சுவாசிப்பு வாழ்க்கையையே மக்கள் வாழ்கின்றனர்.

தொகுதியில் எண்பது சதவீத மக்கள், அன்றாடக் கூலிகள்தான். பீடி நூல் சுற்றுவது, இடியாப்ப வியாபாரம்தான் முக்கிய குடிசைத்தொழில். நான்கு பக்கமும் சூழ்ந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் இருப்புப்பாதை, கூவமே மூக்கைப் பிடித்துக் கொள்ளும் அளவுக்கு கூவம் மீது மூடிக் கொண்டிருக்கும் கழிவுகள், ஈக்களுடன் போட்டியிடும் கொசுக்கள் தொகுதியின் சொத்து எனலாம்.தினமும் 3 ஆயிரத்து 500 டன் குப்பைகளைக் கொட்டும் குப்பைக் கிடங்கு இதே தொகுதியில்தான் வருகிறது.எல்லா காலத்திலும் தண்ணீர் பஞ்சமும், மின்வெட்டும் தொகுதியில் தாராளமாக இருக்கும். ஒரேயொரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், தொகுதியில் கடந்த சில ஆண்டுகளாக க்ரைம்-ரேட் குறைவு என்பது மட்டும்தான்.

- ந.பா.சேதுராமன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024