சென்னைவாசிகள் ஆக்சிஜனைக் கடன் வாங்குவது தெரியுமா? - மிரட்டும் நிஜம்!
கோடை தொடங்கிவிட்டது, கூடவே மின்வெட்டுப் பிரச்னையும், தண்ணீர்த் தட்டுப்பாடும்... ‘‘இந்த ஆண்டு மலைப் பிரதேசங்களில்கூட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்’’ என எச்சரித்துள்ளது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம். அதேநேரத்தில் ‘‘கடந்த 116 வருடங்களில் இல்லாத அளவுக்கு சென்ற ஜனவரியில்தான் அதிகபட்ச வெப்பநிலை நிலவியது’’ என்றும் தெரிவித்துள்ளது. 2015 டிசம்பரில் சென்னையை வெள்ளத்தில் தவிக்கவிட்ட இயற்கை, கடந்த டிசம்பரில் புயல் காற்றால் துவம்சம் செய்து ஓய்ந்தது. சென்னையின் சுவாசமாக இருந்த ஆயிரம் ஆயிரம் மரங்கள் வேரோடு வீழ்ந்து குப்பையாகின. ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இருட்டிலும், தாகத்திலும் தவித்துப் போனது சென்னை.
கடந்த டிசம்பர் 1-ம் தேதி தமிழகத்தை நோக்கிப் பாய்ந்து வந்த ‘நடா’ புயல், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் கடந்தது. ‘‘அப்பாடா’’ என்று நிம்மதி அடைந்த நிலையில், வங்கக்கடலில் இன்னுமொரு காற்றழுத்த மண்டலம் உருவாகி இருப்பதாகவும், அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன். எதிர்பார்த்தபடியே வீரியம் பெற்றது புயல். 150 கி.மீக்கு அதிகமான வேகத்தில் சென்னையைச் சுற்றிச் சூழ்ந்து களமாடியது காற்று.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கிட்டத்தட்ட அதி தீவிர யுத்தம் நடந்த போர்க்களம் போலாகிவிட்டன. எங்கு பார்த்தாலும் பிணங்களைப்போல குவிந்து கிடந்தன மரங்கள்...வர்தா புயலை அடுத்து சென்னையின் பல்வேறு இடங்களில் சமூக ஆர்வலர்களும் மாநகராட்சியும் இணைந்து மரங்கள் நடப்போவதாக அறிவித்தார்கள். ஆனால் நடப்பட்ட மரக்கன்றுகளை எங்கும் பார்க்க முடியவில்லை.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பெரும் சுற்றுச்சூழல் சிக்கல் மிகுந்த இப்பகுதிகளை வாழும் பகுதிகளாக மாற்றுபவை, இங்கிருக்கும் மரங்களும் கடலும்தான். வர்தா புயலால் 10,682 மரங்கள் விழுந்ததாக மாநகராட்சி செய்திக் குறிப்பு கூறினாலும், விழுந்த மரங்களின் எண்ணிக்கை நான்கு மடங்குக்கு மேல் இருக்கும் என்று சூழலியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். ‘இதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்’ என்றும் அவர்கள் அச்சமூட்டுகிறார்கள். பெரும்பாலான மரங்கள் வீழ்ந்ததற்கு திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளே காரணம் என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் முன் வைக்கிறார்கள்.
"பொதுவாக, பிளாஸ்டிக் பைகளில் வளர்க்கப்படும் மரங்களின் வேர் மடங்கிச் சுருங்கிவிடும். அதுமாதிரி செடிகளால் மண்ணைப் பிடித்து வலுவாக வளர முடியாது. சென்னை போன்ற நகரங்களில் நடப்பட்டிருக்கும் பெரும்பாலான மரங்கள், பிளாஸ்டிக் பைகளில் வளர்க்கப்பட்டவைதான். நகரங்களைப் பொறுத்தவரை மரங்கள் வெறும் நிழல் மட்டும் தருவதில்லை, 'மைக்ரோ கிளைமேட்' எனப்படும் நுண்கால நிலையையும் மரங்களே தீர்மானிக்கின்றன. நுண்கால நிலைதான் அந்தந்த இடத்தின் பருவநிலையை உருவாக்கும்.
‘மரங்கள் அடர்ந்திருக்கும் பகுதியைவிட மரங்களும் பசுமையும் இல்லாத இடங்களில் ஏறத்தாழ 200 மடங்கு கிருமிகள் காற்றில் பரவி இருக்கின்றன' எனச் சொல்கிறது ஓர் ஆய்வு. சென்னை மாதிரியான நகரங்களில் இருக்கும் மரங்கள், வாகனங்களிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடை உறிஞ்சிக் கொள்வதோடு, வாகனங்கள் எழுப்பக்கூடிய ஒலியையும் சத்தங்களையும் சமன்படுத்துகிறது. இது எல்லாமே சேர்ந்துதான் மைக்ரோ கிளைமேட்டைத் தீர்மானிக்கும். நெருக்கமான நகரங்களில் மரம் நடுவதைக் காட்டிலும் நேரடியாக விதைகளைப் பதித்து மரம் வளர்ப்பது சிறந்தது.
ஒரு ஏக்கரில் அடர்த்தியாக இருக்கும் மரங்கள் ஒரு வருடத்துக்கு 18 மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனைக் கொடுக்கிறது. சென்னையில் இருக்கும் மக்கள் தொகையையும், மரங்களின் எண்ணிக்கையையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் மரங்களின் தேவை என்ன என்பது புரியும். சென்னையில் இருக்கும் மக்கள் வேறொரு பகுதியிலிருந்துதான் ஆக்சிஜனைக் கடனாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்..." என்று அழுத்தமாகச் சொல்கிறார் சூழலியலாளர் நக்கீரன்.
சென்னையின் மொத்தப் பரப்பளவு 424 சதுர கிலோ மீட்டர். இதில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 144 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குப் பசுமைப் பரப்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் சென்னையில் இருப்பதோ 9 சதுர கிலோமீட்டர் பசுமைப் பரப்பு மட்டும்தான். சென்னை மாநகராட்சியில் மொத்தம் 456 பூங்காக்கள் இருக்கின்றன. ஆனால் அந்தப் பூங்காக்களைப் பராமரிப்பதற்கு இருக்கும் ஊழியர்களைத் தவிர, அவர்களை மேற்பார்வையிட வேளாண்மை படித்த அதிகாரிகள் யாரும் இல்லை. ஒரு கட்டடம் கட்ட சிஎம்டிஏ-வில் அனுமதி வாங்கும்பொழுது குறிப்பிட்ட அளவு நிலத்தை இதுபோன்று பசுமைச் சூழலை உருவாக்கக் கொடுக்க வேண்டும். அப்படி நிலம் கொடுக்காத பொழுது குறிப்பிட்ட தொகை கட்டப்பட வேண்டும். இப்படி சிஎம்டிஏ-வில் கட்டப்படும் பணம் பூங்காக்களைப் பராமரிப்பதற்கும், பசுமையான சூழலை உருவாக்கவும் மாநகராட்சிக்குக் கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்தப் பணம் முழுவதும் பிற திட்டங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.
‘‘சென்னையில் உள்ள மரங்கள் குறித்து அரசுத் தரப்பில் எந்தவித ஆய்வுகளும் நடக்கவில்லை. பிரிட்டிஷார் தங்கள் வசதிக்காக ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் யூகலிடப்ஸ் மரங்களை வளர்த்ததைப்போல சென்னையிலும் நம் மண்ணுக்குத் தொடர்பில்லாத அயல் நாட்டு மரங்கள் நடப்பட்டன. புயலில் விழுந்த மரங்களில் பெரும்பாலானவை, அதுமாதிரியான மரங்கள்தான். சூழலியல் கொள்கைகள், பேரிடர் மேலாண்மை கொள்கைகள் குறித்து அரசு தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டிய காலக்கட்டம் இது.
அரசு மட்டும்தான் சென்னையின் பசுமைச் சூழலை பாதுகாக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதில்லை. நாம் ஒவ்வொருவரும் அதற்கான செயல்பாடுகளில் இறங்க வேண்டும். சென்னை கடலோரத்தில் இருக்கிறது என்பதும், பசுமையான சூழல் நிறைந்திருக்கிறது என்பதும்தான் சென்னையின் பலம். ஆனால் தொடர்ச்சியாக பசுமைப் போர்வையை இழந்தால் சென்னை மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னையைச் சந்திக்கும்..." என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச் செல்வன்.
வர்தா புயலில் வேரோடு சாய்ந்த மரங்களில் மூன்றில் இரண்டு பங்கு தூங்குமூஞ்சி, குல்மோகர் ரக மரங்கள்தான். இந்த வகை மரங்கள் எல்லாமே அழகுக்காகவும், விரைவாக வளர வேண்டும் என்பதற்காகவும் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மரங்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் புதியவகை தாவரத்தைப் பார்த்தால் உடனே அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற நிலை இருக்கிறது.
‘‘ஒரு மரத்தில் 1600 வகையான வண்டு இனங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான பூச்சி இனங்களும், உயிர்களும் மரத்தைச் சார்ந்து இருக்கின்றன. இப்படி சார்ந்து வாழ்தல் என்பது பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக இருந்து வரும் நீட்சி. நம் ஊர் இலுப்பை மரத்திலும், வேம்பு மரத்திலும் இந்தப் பல்லுயிர் சூழல் தொடர்ந்து இருந்து வருகிறது. பசுமையான சூழலை உருவாக்க வேண்டும், காடுகளை உருவாக்க வேண்டும் எனச் சொல்லி பழமையான மரங்களை அழித்துவிட்டு வேகமாக வளரக்கூடிய அயல் மரங்களை வளர்த்து உயிரினங்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து வருகிறோம். இதனால் பல்லுயிர் சூழலும் பாதிக்கப்படும். அத்தி, இச்சி, பனை, புரசு, மருதம், கடம்பம், தில்லை, இலவு, முள்ளிலவு, நாவல், தான்றி, குமிழ், சந்தனம், இலுப்பை, ஆலம், அரசு, வேம்பு, அகில், நெல்லி, அலிஞ்சில், வெள்வேலம், ஆசினி பலா, ஆத்தி, இலந்தை, புங்கம், உசில், ஒதியன், காஞ்சரை, கிளுவை, கொன்றை, கொன்னை, கோங்கம், செண்பகம், சரக்கொன்றை, தணக்கு, தேற்றா, மஞ்சநத்தி, மா, பன்னீர், வெப்பாலை, ஏழிலைப்பாலை, தோதகத்தி, புன்னை, பூவரசு, மகிழம், மந்தாரை, கருங்காலி, மூங்கில், வலம்புரி, வன்னி, வேங்கை. என நூற்றுக்கணக்கான நாட்டு மர வகைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நகர்ப்புறங்களில் வளர்க்கலாம்..." என்கிறார் ‘நாணல்’ சூழலியல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன்.
மரம் என்பது மரம் மட்டுமல்ல... அது பலநூறு உயிர்களின் கூடு. ஒரு மரம் வீழ்வதால் பல நூறு உயிர்கள் வீடிழக்கின்றன. உணவிழக்கின்றன. பூமி உயிர்ச்சூழலை இழக்கிறது. நகரங்களைத் திட்டமிடும்போதே, அதன் பசுமைச்சூழலையும் திட்டமிட வேண்டும். ஆனால் தமிழகத்தின் எந்த மாநகர உருவாக்கத்திலும் இது கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்பதுதான் நிதர்சனம்.
சென்னை உயிர்ப்பிக்கப்பட வேண்டிய தருணமிது..!
No comments:
Post a Comment