உறவைப் பிரிக்கும் குறட்டை... தவிர்க்க 7 வழிகள்! #HealthAlert
இறைவன் நமக்குக் கொடுத்த மிக உயர்ந்த பரிசு தூக்கம். தூக்கம் மட்டும் இல்லையென்றால், மனிதர்கள் மனநோயாளிகளாக மாறிவிடுவார்கள். எவ்வளவு பணத்தைக் கொடுத்தாலும் கிடைக்காதது இயற்கையான தூக்கம். அதே நேரத்தில், அருகில் இருப்பவர்களின் தூக்கத்தைக் கெடுப்பது, ஒருவர் தூங்கும்போதுவிடும் குறட்டைதான். இதைச் சாதாரணமாக நினைத்துவிட முடியாது. 2013-ம் ஆண்டு கணக்குப்படி, அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் விவாகரத்துக் கேட்டு வரும் தம்பதிகள் சொல்லும் காரணங்களில் குறட்டைக்கும் இடம் உண்டு. ஆக, உறவைக்கூட பிரிக்கும் குறட்டை என்பது நிரூபணமான உண்மை. ஒருவர் விடும் குறட்டை, அவருக்குத் தெரியாமல் இருக்கலாம்; மற்றவர்களுக்கு அசூயையைக் கொடுக்கும். சிலருக்குக் கழிவிரக்கத்தை ஏற்படுத்தும்; சமயத்தில் தன்னம்பிக்கை குறைவதற்குக்கூடக் காரணமாகிவிடும்.
`உங்களுக்குக் குறட்டைவிடுற பழக்கம் இருக்கா?’ என்று கேட்டுப் பாருங்கள். `இல்லை’ என்றுதான் நிறையப் பேர் பதில் சொல்வார்கள். அதிலும் சிலர் `ரொம்ப டயர்டா இருந்தா வரும்’ என்றோ, `எப்போவாவது...’ என்றோ, `குறட்டையா... நானா? சான்ஸே இல்லை. நான் ரொம்ப டீசன்ட்’ என்றோ தங்களை விட்டுக்கொடுக்காமல்தான் பதிலளிப்பார்கள். உண்மையில், குறட்டை என்பது கௌரவ பிரச்னை அல்ல; அது உடல்ரீதியான பிரச்னை.
குறட்டை வருவதற்கான காரணங்கள் என்னென்ன?
* ஒருநாள் சீக்கிரமும், மறுநாள் நேரம் கழித்தும் தூங்குவது என தினமும் குறித்த நேரத்தில் தூங்காமல் இருப்பது; நீண்ட நேரம் தூங்காதது; உறங்கப் போகும் கடைசி நேரம் வரைக்கும் வேலை செய்துகொண்டு இருப்பது.
* சில நேரங்களில் ஆழ்ந்து தூங்கும்போது, தொண்டைக்குப் பின்னால் இருக்கும் சதை வழக்கத்துக்கு மாறாக தளர்வடையும்போது குறட்டைவிடுவதுபோலச் சத்தம் எழும். சைனஸ் தொந்தரவு இருந்தாலும் குறட்டை வரும்.
* மாலை 4 மணிக்கு மேல் டீ அல்லது காபி சாப்பிடும்போது அதிலுள்ள தற்காலிக சக்தியளிக்கும் கஃபைன் போன்றவை, நம் மூளையை சில மணி நேரம் வரைக்கும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அதனாலும் நம் தூக்கத்தை அது பாதிக்கும். இதனாலும் குறட்டை ஏற்படலாம்.
* தூசி நிறைந்த காற்றைச் சுவாசிக்கும்போதோ, தூங்கும் அறை சுத்தமாக இல்லாவிட்டாலோ நம் தொண்டை சவ்வுகள் மற்றும் மேல்நாக்குக்குப் பின்னால் இருக்கும் திசுக்கள் பாதிப்படையும். அப்போது தொண்டை சவ்வுகள் வீக்கம் அடைவதோடு மட்டுமல்லாமல் சுவாசப்பாதையையும் ஒடுக்கிவிடும். இதனாலும் தூக்கத்தில் நாம் சுவாசிக்கும்போது குறட்டை உண்டாகும்.
* உடல்பருமனாக இருப்பதும் குறட்டைக்கு ஒரு காரணமே. தொடர்ந்து இவர்களுக்கு குறட்டை வந்தால், தூக்கத்தில் மூச்சுத்திணறல் (Sleep Apnea) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதை சரிவர கவனிக்காமல் விட்டுவிட்டால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
கீழே குறிப்பிட்டிருக்கும் `ஸ்லீப் ஆப்னியா’ அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்.
* சத்தமாகக் குறட்டைவிடுவது.
* தூங்கும்போது தொண்டையை அடைப்பதுபோன்ற உணர்வால் திடீரென்று கண்விழிப்பது.
* அமைதியற்ற தூக்கத்தால் எழுந்ததும் ஏற்படும் தலைவலி.
* நன்றாகத் தூங்கினாலும் ஏற்படும் தீவிரச் சோர்வு.
* மனநிலை மாற்றங்கள் மற்றும் ஆண்மைக் குறைவு ஏற்படுவது.
தூக்க மாத்திரையை சிறிது காலத்துக்கு மட்டும் எடுத்துக்கொண்டாலும் குறட்டை வரும். தூக்க மாத்திரை மட்டுமல்ல... மதுவும் நரம்பியல் மண்டலத்தில் மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய விளைவை உண்டாக்கும். இவை சுவாசப்பாதையில் சீரற்ற தன்மையை ஏற்படுத்துவதால் தூங்கும்போது குறட்டை ஏற்படுகிறது.
குறட்டையை தவிர்க்க வழிகள்...
* போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள திசுக்கள் ஈரப்பதம் அடைந்து சுவாசிப்பதை எளிதாக்கும்.
* மது மற்றும் புகைப்பழக்கத்தை நிறுத்துவது நல்லது. புகைப்பதால் சுவாசப்பாதை அடைபட்டு, உறங்கும்போது குறட்டை ஏற்பட வாய்ப்பு உண்டு.
* உடல் எடையைக் குறைப்பதால் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். காய்கறிகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவும்.
* தினமும் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலிலுள்ள தசைகள் தளர்வடையும்; தொண்டையும் தளர்வடையும். இதனால் உடல் எடை குறையும்; குறட்டையையும் தவிர்க்கலாம்.
* உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டாம். இதனால் தூக்கம் பாதிக்கும். உறங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே உங்கள் மொபைல்போனைத் தள்ளி வைத்துவிடுங்கள். டி.வி மற்றும் விளக்குகளை அணைத்துவிடுங்கள். இதனால் தூக்கம் நன்றாகவும் ஆழமானதாகவும் இருக்கும்.
* தூங்கும்போது ஒரு பக்கமாக படுத்துக்கொள்ளுங்கள் அல்லது உயர்ந்த தலையணையை வைத்துக்கொள்ளுங்கள். இதனால் சுவாசப்பாதையில் அடைப்பு எதுவும் ஏற்படாமல் இருக்கும்; அதிகச் சத்தத்துடன் குறட்டை வராமலும் தடுக்கும்.
* தொடர்ந்து மூச்சுப் பயிற்சி செய்து வந்தாலும், குறட்டை வருவதைத் தடுக்கலாம்.
* தினமும் 30 முறை `ஆ... ஆ... ஆ...’, `ஈ... ஈ... ஈ...’, `ஐ... ஐ... ஐ...’, `ஓ... ஓ... ஓ...’ `ஊ... ஊ... ஊ...’ என்று சத்தம் போட்டுச் சொல்லுங்கள். இது உங்கள் தொண்டைப் பகுதியில் உள்ள தசைகளுக்குச் சிறந்த பயிற்சியாக இருக்கும். குறட்டை குறையவும் வழிபிறக்கும்!
- கி.சிந்தூரி
No comments:
Post a Comment