Friday, March 10, 2017


வசூல் வேட்டையா... வங்கி விதிமுறையா? கொதித்த வங்கி ஊழியர்கள்!




பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் பணநீக்க நடவடிக்கைக்குப் பிறகு பல்வேறு மாற்றங்களை பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் போட்டிபோட்டுக்கொண்டு அறிவித்து வருகின்றன. ஏற்கெனவே பணநீக்க நடவடிக்கையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், தற்போது தனியார் வங்கிகளில் 4 முறைக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால்... சேவை வரியாகக் குறைந்தபட்சமாக 150 ரூபாய் பணம் வசூலிப்போம் என்று அறிவித்து, அதற்கான நடவடிக்கையிலும் இறங்கிவிட்டன வங்கிகள். அதில், முதல்கட்டமாகச் சில தனியார் வங்கிகள் இந்த வசூல் வேட்டையில் இறங்கியுள்ளன. இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணாவிடம் பேசியபோது, அவர் சொன்ன தகவல்கள் நம்மை அதிர வைத்தன.

கொள்ளைக்கான தொடக்கம்!

''சில தனியார் வங்கிகள் வசூல் வேட்டையில் இறங்கிய நிலையில்... தற்போது பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியும் வசூல் களத்தில் இறங்கியிருப்பது மிகுந்த கவலைக்குரியது. அந்த வங்கி, மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சமாக 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது. அது மட்டுமின்றிப் பெரு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் 5,000 ரூபாயும், நகர்ப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 3,000 ரூபாயும், சிறுநகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 2,000 ரூபாயும், கிராமப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 1,000 ரூபாயும் குறைந்தபட்ச தொகையாக வங்கிக்கணக்கில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அந்தத் தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பெரு நகரங்களில் 5000 ரூபாய் கணக்கு வைக்க வேண்டிய இடத்தில் 2500 ரூபாய் கணக்கு வைத்திருந்தால் (50 சதவீதம் குறைவாக உள்ளதால்) அவர்களுக்கு 50 ரூபாய் வசூலித்து விடுவோம் என்று கூறியுள்ளது. இதைவிடச் சாமான்யர்களை வறுமையில் தள்ளும் நடவடிக்கை வேறு எதுவும் இல்லை.

ஏ.டி.எம்-களில் வசூல் வேட்டை!

இந்தப் பிரச்னையால் வங்கிக் கணக்கே வேண்டாம் என்று ஒருவேளை, வெளியேற நினைத்தால்கூட... அதிலிருந்து வெளியேற முடியாத அளவுக்குக் கெடுபிடிகளையும் கொண்டு வந்துள்ளார்கள். வங்கிக் கணக்கு தொடங்கி 6 மாத காலத்துக்குக் கணக்கை முடக்கிவிட்டு வெளியேற விரும்பினால், 500 ரூபாய் அபராதமும், வங்கிக் கணக்கு தொடங்கி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டால் 1,000 ரூபாயும் வசூலிப்போம் என்று தெரிவித்துள்ளனர். வசூல் வேட்டை நடத்துவதற்கு புதுப்புது வழிகளைக் கண்டறிந்து அதற்கேற்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அதில், மற்றொரு நடவடிக்கையாக ஏ.டி.எம்-களில் நான்காவது முறையாகப் பணம் எடுத்தால் 20 ரூபாய் பிடிக்கப்படும். மேலும், வெறும் பிடித்தம் தொகையோடு நிற்காமல்... சேவை வரியையும் இதில் திணித்துள்ளார்கள்.

தூய்மை இந்தியா திட்டத்துடன் வேறுசில திட்டங்களையும் இணைத்து 15 சதவிகித சேவைவரியும் இதில் கொண்டுவந்துள்ளார்கள். மேலும், பணம் அனுப்பும் இயந்திரத்தை ஒருமுறை பயன்படுத்தினாலும் தொகைக்கு ஏற்ப வசூலிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்படி வசூலிக்கும் பணம் மத்திய அரசுக்கு போய்ச் சேருவதாக சொல்கிறார்கள். உண்மையில், அரசின் கஜானாவில்தான் இந்தப் பணம் போய்ச் சேருகிறதா என்பது அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.இந்த நடவடிக்கைக்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் உள்ளது என்று கருதுகிறோம்.எனவே, 'இந்த விதிமுறைகளை வங்கிகள் திரும்பப் பெறாவிட்டால்... வங்கி ஊழியர்கள் சங்கம் நாடு தழுவிய அளவில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தும். என்று எச்சரிக்கிறோம். மேலும், இதனால் சாமான்யர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கையாக அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்

ஒருவேளை சோற்றையும் பறிக்கிறதா?

இதுகுறித்து ஆய்வு மாணவியான சுசிந்திரா, ''தினசரி, கூலிகள் 500 மற்றும்1,000 ரூபாயை மட்டும் வங்கிக் கணக்கில் வைத்துக்கொண்டு பிழைப்பை ஒட்டுகிறார்கள். கணக்கில் இருக்கும் அந்தத் தொகையையும் அவர்கள் பிடித்துக்கொண்டால், இரண்டுவேளை சாப்பிடும் ஏழைகளுக்கு ஒருவேளை சாப்பாடுகூடக் கிடைக்காத நிலை ஏற்படும். அதற்கான நடவடிக்கையில்தான் தற்போது வங்கிகள் இறங்கியுள்ளன. சேமித்த பணத்துக்கு வரிகட்டாத எத்தனையோ தொழிலதிபர்கள் நாட்டில் உலவிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் போய் வசூலிக்க திராணியில்லையா அல்லது பயமா? வட இந்தியர்கள் தமிழகத்தில் வந்து கூலி வேலை செய்து 100, 500 ரூபாய் என்று சேமித்து... பிறகு, அதை எடுத்துச் செலவு செய்கிறார்கள். அப்படி அவர்கள் சேர்த்துவைத்திருக்கும் அந்தப் பணத்தையும் எடுக்கத் திட்டமிட்டுள்ள அரசின் செயல்களில் இதைவிட மோசமான செயல் வேறெதுவும் இருக்க முடியாது'' என்றார், வேதனையுடன்.

விஜய் மல்லையா போன்றவர்கள் வங்கிகளில் கடனை வாங்கிவிட்டு நாடுநாடாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்... அவர்களை விட்டுவிட்டு ரத்தத்தை வியர்வையாகச் சிந்தும் ஏழை மக்களின் ஒருவேளை சோற்றில், கைவைத்துவிட்டதே வங்கியின் விதிமுறை!


- கே.புவனேஸ்வரி

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024