Thursday, March 2, 2017

தனியார் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்தாலும் கட்டணம்

By DIN  |   Published on : 02nd March 2017 05:23 AM 
மாதத்துக்கு 4 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை எடுத்தாலோ குறைந்தப்பட்சம் ரூ.150-ஐ கட்டணமாக தனியார் வங்கிகள் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.
இதுதொடர்பாக ஹெச்.டி.எஃப்.சி. வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சேமிப்புக் கணக்கு மற்றும் ஊதியக் கணக்குகளுக்கு இந்த கட்டணம் வசூலிப்பு பொருந்தும். சொந்த வங்கிக்குள்ளேயே பிறரது கணக்கு அனுப்பப்படும் பணத்தின் உச்சவரம்பு ரூ.25 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மிகவும் குறைந்தபட்ச இருப்புத் தொகையுடைய சாதாரண சேமிப்பு கணக்குகளுக்கு மாதத்துக்கு 4 முறை இலவசமாக பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். பணத்தை டெபாசிட் செய்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது என்று அந்த அறிவிப்பில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி தெரிவித்துள்ளது.
இதேபோல், ஐசிஐசிஐ, ஆக்சிஸ் ஆகிய தனியார் வங்கிகளும் 4 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலும், திரும்ப எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.
ஐசிஐசிஐ வங்கியைப் பொறுத்தமட்டில், நவம்பர் மாதம் 8-ஆம் தேதிக்கு முன்பு அமலில் இருந்த கட்டண வசூலிப்பு நடைமுறை பின்பற்றப்படுகிறது. தேவைப்பட்டால், கட்டணம் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் வங்கியைப் பொறுத்தமட்டில், முதல் 5 ரொக்க பரிவர்த்தனைகள் அல்லது ரூ.10 லட்சத்தை ரொக்கமாக டெபாசிட் செய்தல் அல்லது திருப்பி எடுத்தல் இலவசமாகும். அதன்பிறகு ஆயிரம் ரூபாய்க்கு ரூ. 5 அல்லது ரூ.150-ல், எந்தத் தொகை அதிகமாக உள்ளதோ, அந்தத் தொகை பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை வங்கிகளும் இந்த நடைமுறையை பின்பற்றத் தொடங்கியுள்ளனவா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து பொதுத் துறை வங்கி மூத்த அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அரசிடம் இருந்து இதுதொடர்பாக எந்த உத்தரவும் வரவில்லை என்று பதிலளித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024