Thursday, March 2, 2017

ஏற்க முடியவில்லை!

By ஆசிரியர்  |   Published on : 02nd March 2017 01:49 AM  | 
நீதிமன்றத் தீர்ப்புகள் விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் அப்பாற்பட்டவை அல்ல. விமர்சிக்க வைக்கும் தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
1997-இல் தெற்கு தில்லியில் அமைந்த ’உப்ஹார்' திரையரங்கத் தீவிபத்தையும், அதில் புகைக்குள் சிக்கி மூச்சுத் திணறி மரண மடைந்த 59 பார்வையாளர்களையும் நாம் மறந்துவிட முடியாது. இந்த விபத்துத் தொடர்பான வழக்கு 20 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு இப்போதுதான் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு வந்திருக்கிறது. திரையரங்க உரிமையாளர்களின் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு, தண்டனை எதிர்பாராத அளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கிறது.
புகை மூட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறியதுதான் திரையரங்கில் ’பார்டர்' திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் 59 பேர் மரணமடையக் காரணம். மேலும் பல நூறு பேர் மிகக் கடுமையான நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகிப் பல மாதங்கள் சிரமப்பட்டார்கள். விபத்துக்குக் காரணம் திரையரங்க உரிமையாளர்களான அன்சல் சகோதரர்களின் கவனக்குறைவும், திரையரங்கில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ, வெளியேறும் வசதிகளோ செய்யாமல் இருந்ததும்தான் என்பதை விசாரணை உறுதிப்படுத்தி இருக்கிறது.
’உப்ஹார்' திரையரங்கம் 1989-லும் இதேபோலத் தீவிபத்துக்கு உள்ளாகியது. அதைத் தொடர்ந்து அன்சல் சகோதரர்களின் நிர்வாகம் அதிகரித்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச்செய்ய முற்பட்டதா என்றால் இல்லை. போதுமான தீயணைக்கும் கருவிகள்கூட ’உப்ஹார்' திரையரங்கில் இருக்கவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்த்திருக்க வேண்டிய தில்லி பெருநகராட்சி அலுவலர்கள் தங்கள் கடமையைச் செய்யவில்லை என்பதும், அவர்கள் மீது சட்டம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் ஏற்றுக்கொள்ள முடியாத குமுறல்.
1997-இல் ’உப்ஹார்' திரையரங்கில் சிறிதாகத் தீப்பிடித்தவுடன், திரையரங்க ஊழியர்கள் தாங்களே தீயை அணைக்க முற்பட்டபோது கடுமையாகப் புகைய ஆரம்பித்துவிட்டது. அந்தப் புகையை குளிரூட்டும் கருவிகள் (ஏ.சி.) உறிஞ்சி திரையரங்கு முழுவதும் பரவவிட்டு விட்டன. போதுமான கதவுகள் இல்லாததாலும், உடனடியாகக் கதவுகள் திறக்கப்படாததாலும், திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் புகைக்கூண்டில் அடைத்துவிட்ட நிலைமை உருவானது.
தீயணைப்புப் படையினருக்குத் தெரிவிக்க முற்படாமல் ஊழியர்களே தீயை அணைக்கப் போராடியது நிலைமையை மேலும் மோசமாக்கியது. தில்லி தீயணைப்புப் படைக்கு விவரம் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் விரைந்து வந்தார்களா என்றால் அதுவும் இல்லை.
இதுதான் தில்லி ’உப்ஹார்' திரையரங்கில் நிகழ்ந்த தீவிபத்தின் பின்னணி. விபத்தைத் தொடர்ந்து உரிமையாளர்களான அன்சல் சகோதரர்கள் என்று பரவலாக தில்லியில் அறியப்படும் பெரும் பணக்காரர்களான கோபால் அன்சலும், சுஷில் அன்சலும் கைது செய்யப்பட்டனர். பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டனர். வழக்குத் தொடரப்பட்டது. அவசர சிகிச்சை மையம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும், மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் ரூ.30 கோடியை அன்சல் சகோதரர்கள் உடனடி நிவாரணமாக வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.
ஆரம்பம் முதலே, மிகவும் திறமை வாய்ந்த வழக்குரைஞர்களை நியமித்துக் கீழமை நீதிமன்றங்களிலிருந்து, தொடர்ந்து தங்களுக்கு அதிக பாதிப்பில்லாத தீர்ப்புகளைப் பெறுவதில் அன்சல் சகோதரர்கள் கவனம் செலுத்தி வந்தனர். இன்னொருபுறம், தனது இரண்டு குழந்தைகளை ’உப்ஹார்' தீவிபத்தில் பலிகொடுத்த நீலம் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் தலைமையில், விபத்தில் உயிரிழந்தோர் சார்பாக நியாயத்துக்கான போராட்டமும் தொடர்ந்து நடத்தப்பட்டது. இப்போது கடைசியாக உச்சநீதிமன்றத்தில் மூன்று பேர் கொண்ட அமர்வின் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
1997-இல் 59 பேரைப் பலிகொண்ட ’உப்ஹார்' திரையரங்கத் தீவிபத்து வழக்கில் அன்சல் சகோதரர்களுக்கு தலா ஓர் ஆண்டு சிறை தண்டனை என்கிற தீர்ப்புடன் நின்றிருந்தால்கூட பரவாயில்லை. ஏற்கெனவே நான்கு மாதங்களை சிறையில் கழித்துவிட்ட கோபால் அன்சல், மீதமுள்ள எட்டு மாதங்களை சிறையில் கழித்தால் போதும் என்றும், அவரது சகோதரர் சுஷில் அன்சலுக்கு 77 வயதாகி விட்டதால், வயோதிகம் கருதி அவரது சிறைத்தண்டனையை தள்ளுபடி செய்வதாகவும் தீர்ப்பு வழங்கி இருக்கிறது உச்சநீதிமன்றம்.
அவர்கள் இருவரையும் இரண்டாண்டுகள் சிறை தண்டனைக்கு உட்படுத்த முகாந்திரம் இருப்பதாகவும் அவர்களது வயோதிகம் கருதி தண்டனையை ஓர் ஆண்டாகக் குறைத்திருப்பதாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருப்பது, பாதிக்கப்பட்டவர்களை நோகடிக்கும் வார்த்தைகள். எதிர்பார்த்தது போலவே, சிறை தண்டனையை அனுபவிக்க சரணடைவதற்கு நான்கு வார அவகாசம் வழங்கப்பட்ட கோபால் அன்சல், தனது உடல்நிலையையும் வயோதிகத்தையும் கருதித் தனது சகோதரரைப் போலவே சிறை தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரும் மனு வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அவருக்கும் விலக்கு அளிக்கப்பட்டால் வியப்படைவதற்கில்லை.
குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கு வயோதிகம் காரணமாக விலக்கு அளிக்கப்படுவது என்பதை ஏற்க முடியவில்லை. இதுவே முன்னுதாரணமாகி, குற்றவாளிகள் வழக்குரைஞர்களின் துணையோடு தண்டனையிலிருந்து தப்புவதற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழிகோலி இருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024