Thursday, March 2, 2017

எல்லாரும் நல்லவரே

By பாறப்புறத் இராதாகிருஷ்ணன்  |   Published on : 02nd March 2017 01:47 AM
இப்போதெல்லாம் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை அறிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான செயலாக உள்ளது. நல்லவர் போல் நடிப்பவர் நல்லவரும் அல்லர். கெட்டவர் போல் பேர் கெட்டவர் கெட்டவரும் அல்லர்.
ஒரு குழந்தை பிறக்கும்போது, நல்ல மனத்துடனும், தூய சிந்தனையுடனும், உண்மை, நேர்மை, ஒழுக்கம் எனும் நன்னடத்தைகளை அணிகலன்களாகக் கொண்டுதான் பிறக்கிறது. ஆனால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும் குழந்தைகள், வீட்டில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வளர்ப்பிலும், பள்ளியில் ஆசிரியர்களின் போதனைகளிலும், வெளியில் சமுதாயத்தின் அரவணைப்பிலும் வளர்ந்து நல்லவனாகவோ, கெட்டவனாகவோ மாறி சமுதாயத்திற்கு நல்லதையோ, கெட்டதையோ செய்கிறார்கள்.
இந்த உலகத்தில் நாம் நுழையும் போது நல்லவராகத் தான் வருகிறோம். அடிப்படை சூழலில் அனைவரும் நல்லவர்களாக இருந்தாலும், சமுதாயச் சூழலால் தீயவர்களாக மாறி, கெட்டவர் என்ற முத்திரையுடன் வெளியேறுகிறோம்.
நாம் நல்லவராக இருந்தால் அனைவரும் நல்லவராகத் தெரிகிறார்கள். நாம் கெட்டவராக இருந்தால் அனைவரும் கெட்டவராகவே தெரிகிறார்கள். ஒருவர் முக அழகுடனும், மிடுக்குடன் உடை அணிந்திருந்தாலோ அவரை நல்லவர் என்றோ, மற்றொருவர் கரடு, முரடமான முகத்துடன் விகாரமாக அழுக்கான உடை அணிந்திருந்தால் அவரை கெட்டவர் என்றோ முடிவுக்கு வந்து விட முடியாது.
நல்லதும், கெட்டதும் கலந்தது தான் மனித குணம். ரோஜா பூவிலும் முட்கள் இருக்கும், கல்லுக்குள்ளும் ஈரமிருக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
கிருஷ்ணரிடம் அடியவர் ஒருவர் வந்தார். அவர், கிருஷ்ணரை வணங்கி, பரந்தாமா, இந்த உலகில் நல்லவர்கள் உள்ளார்களா கெட்டவர்கள் உள்ளார்களா என்று கேட்டார். நான் சொல்வதைவிட நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே என்று கூறிய கிருஷ்ணர், அந்த அடியவரை அழைத்துக் கொண்டு அஸ்தினாபுரத்திற்குச் சென்றார்.
அவர்கள் இருவரும் முதலில் தருமனிடம் சென்றனர். கிருஷ்ணன் தருமனிடம், எனக்கு கெட்டவன் ஒருவர் தேவை, எங்கே இருந்தாலும் கண்டுபிடித்து அழைத்து வா என்றார். நீண்ட நேரம் கழித்து வந்த தருமன், இந்த நாட்டில் எல்லோரும் நல்லவர்களாகவே உள்ளனர். கெட்டவர்கள் யாருமே இல்லை. கெட்டவன் ஒருவனையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.
அதன் பிறகு துரியோதனனை அழைத்த கிருஷ்ணர், அஸ்தினாபுரத்தில் உள்ள எல்லோருமே நல்லவர்கள், கெட்டவர் ஒருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றான் தருமன், நீ போய் ஒரு நல்லவரை அழைத்து வா என்றார். வெகு நேரத்திற்குப் பிறகு திரும்பிய துரியோதனன், இந்த நகரத்தில் எல்லோருமே தீயவர்களாக உள்ளனர், நல்லவர் ஒருவனையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றான்.
தன்னுடன் வந்த அடியாரிடம், நீ கேட்ட கேள்விக்கு விடை கிடைத்து விட்டதா என்று கேட்டார் கிருஷ்ணர். நாம் நல்லவர்களாக இருந்தால், இந்த உலகத்தில் உள்ள எல்லோரும் நல்லவர்களாகத் தெரிவார்கள். நாம் கெட்டவர்களாக இருந்தால் எல்லோரும் கெட்டவர்களாகத் தெரிவார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன் என்றார் அந்த அடியார். பார்க்கும் பார்வையில் தான் எல்லாம் அடங்கியிருக்கிறது.
இவ்வுலகம் ஒரு கண்ணாடி போன்றது. நாம் கோபப்பட்டால் பதிலுக்கு கோபம் கிடைக்கும். அன்பு செலுத்தினால் அன்பு கிடைக்கும். ஒருத்தரையொருத்தர் மதிக்கும் பண்பு வந்து விட்டால் பிரச்னை இல்லை.
பெருமாளின் தசாவதாரங்களில் ஒன்றான ஏழாவது அவதாரமான ராமர் அவதாரம், மனித குலத்தின் மாண்பினையும், மானுடம் வெல்லும் என்ற உயரிய தத்துவத்தையும் எடுத்துரைப்பதாகவும் உள்ளது.
இதில், வில்லனாக சித்தரிக்கப்படும் ராவணன் திருநீறு அணிந்த சிறந்த சிவபக்தன், யாராலும் வெல்ல முடியாது என வரத்தை பிரம்மனிடமிருந்து பெற்ற சிறந்த வீரன், வழிபாடுகளில் அக்கறை உள்ளவன், வேத வித்தகன், இசைகள் கற்றவன், கயிலை மலையையே அசைக்கப் பார்த்தவன், வேதங்கள் கற்றவன். அவனை இலங்கேஸ்வரன், என்று, நல்லவன் என்று கூறுபவரும் உளர்.
ஒருவருக்கு நல்லவராக இருப்பவர், மற்றவருக்கு கெட்டவராக இருப்பார். அதாவது, அவர் உதவி தேவைப்படும் ஒருவருக்கு சாதகமான பணியைச் செய்தால் அவர் நல்லவர்.
எதிர்த்தாலோ, மறுத்தாலோ அவர் கெட்டவர். இது தான் சமுதாயத்தின் கண்ணோட்டம். வாழ்க்கையில் மனிதனுக்கு பல சந்தர்ப்பங்கள் வரும். அது நல்லதாகவும் இருக்கும், கெட்டதாகவும் இருக்கும்.
ஒருவருக்கு நல்ல சந்தர்ப்பம் வரும் போது அதை நல்ல வழியில் பயன்படுத்தினால் நல்லவராக இருப்பார். கெட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தினால், அவர் கெட்டவராகத் தெரிவார். ஒருவர் நல்லவர் என்பதை அவரின் பேச்சை வைத்தோ, செயலை வைத்தோ, முக பாவனைகளை வைத்தோ கூறக் கூடாது. கெட்ட சந்தர்ப்பங்கள் தான் அவரை கெட்டவராக்கி சமுதாயத்தின் முன்னே தலை குனிய வைக்கிறது.
’என்னை பொருத்தவரை எல்லோரும் நல்லவரே. நான் யாரிடமும் கெட்டதனத்தை பார்ப்பதில்லை. ஏனெனில், கெட்டத் தன்மை என்பது ஒரு நிழல் போன்றது. மேலும், அது ஒரு தனி மனிதனின் உண்மை தன்மை ஆகாது. கெடுல் உண்டாக்கும் செயல்களை அவன் செய்திருக்கலாம். ஆனால், அது அவனது இருப்பையே கெடுத்திருக்காது.
ஒரு செயல், இரண்டு செயல், மூன்று செயல் ஏன் நூறு செயல் கூட கெட்டதை செய்திருக்கலாம். ஆனால், அவனது இருப்பு எப்போதும் தூய்மையானதாகவே இருக்கிறது' என்கிறார் ஓஷோ.
யார் நல்லவர்கள்? அவர்கள் அமிழ்தமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்ண மாட்டார்கள், காரணம் இல்லாமல் கோபப்பட மாட்டார்கள். தீயச் செயலைச் செய்ய அஞ்சுவார்கள்.
வாழ்க்கையில் நடைபெறுகின்ற ஓரிரு நிகழ்வுகளை வைத்து ஒருவரை நல்லவரா, கெட்டவரா என எடை போடுவது தவறான முடிவாகத்தான் முடியும். காலம் தான் ஒவ்வொருவரின் செயல்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தோலுரித்துக் காட்டக் கூடியது. யாராலும், எப்போதுமே நல்லவராகவோ, கெட்டவராகவோ இருக்க முடியாது. சூழ்நிலைகளே அவற்றைத் தீர்மானிக்கின்றன, அதுவரை எல்லாரும் நல்லவரே.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024