Friday, March 10, 2017

அமெரிக்காவில் இந்தியர்கள் மீது தாக்குதல்: மோடி மெளனம் காப்பது ஏன்?

By DIN  |   Published on : 10th March 2017 01:45 AM  | 
question
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வின் முதல் நாளான வியாழக்கிழமை, மக்களவையில் பேசும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
அமெரிக்காவில் இந்தியர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன்? என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது அமர்வு வியாழக்கிழமை தொடங்கியது. மக்களவை, அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் கூடியதும், அமெரிக்காவில் இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அதற்கு சுமித்ரா மகாஜன் மறுப்பு தெரிவித்ததால், உடனடிக் கேள்வி நேரத்தின்போது, இந்த விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இனவெறியோடு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் மிகவும் கவலையளிக்கிறது. ஆனால், இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்காமலும், இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவிடம் முறையிடாமலும் பிரதமர் மோடி மெளனம் காத்து வருகிறார்.
ஒவ்வொரு விஷயத்துக்கும் சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் அவர், இந்த விவகாரத்தில் ஆழ்ந்த மெளனமாக இருப்பது ஏன்? என்று மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.
இதேபோல், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் செளகதா ராய் பேசுகையில், ""அமெரிக்காவில் வாழும் இந்தியர்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசுக்கு அக்கறையில்லை எனத் தெரிகிறது; பேச்சாற்றல் மிக்க பிரதமர், இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது வழக்கத்துக்கு மாறாக உள்ளது'' என்றார்.
மேலும், அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்துதான், இந்தியர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று மல்லிகார்ஜூன கார்கேவும், செளகதா ராயும் குற்றம் சாட்டினர்.
பிஜு ஜனதா தள உறுப்பினர் பார்த்ருதாரி மாதவ் கூறுகையில், ""அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பற்ற இடங்கள் குறித்து அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு அறிவுரைக் குறிப்புகளை மத்திய அரசு வெளியிட வேண்டும்'' என்றார்.
இதேபோல் மேலும் சில உறுப்பினர்கள், இந்தியர் மீதான இனவெறி தாக்குதலுக்கு கவலை தெரிவித்தனர்.
அடுத்த வாரத்தில் அறிக்கை-ராஜ்நாத் சிங்: அப்போது, ""இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாகக் கவனித்து வருகிறது'' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்தார். அவர் மேலும் கூறியதாவது:
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசு அடுத்த வாரம் தாக்கல் செய்யும் என்றார் ராஜ்நாத் சிங்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024