Monday, November 13, 2017

இனி 5G யுகம்


By DIN  |   Published on : 13th November 2017 12:00 AM 
5g

தொலைத் தொடர்பு சேவையில் இது 4ஜி யுகம். 2ஜி தொழில்நுட்ப அடிப்படையிலான தொலைத் தொடர்பு சேவையிலிருந்து முன்னேறி 3ஜி-க்கு மாறுவதற்கு நீண்ட காலமானது. அதிலிருந்து 4ஜி-க்கு மேம்படுவதற்கும் நீண்ட காலம் பிடித்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் 4ஜி மொபைல் இணைய சேவை அறிமுகமாகி, தற்போதுதான் பலருக்கும் 4ஜி சேவை பற்றித் தெரிய வந்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும் சுமார் 25 கோடி வாடிக்கையாளர்களிடம் 4 ஜி சேவை சென்று சேர்ந்திருக்கிறது. அதற்குள், கடந்த சில மாதங்களாக 5ஜி சேவை பற்றி பேச்சுக்கள் எழத் தொடங்கிவிட்டது. 
மொபைல் இணைய உலகின் அடுத்த கட்ட புரட்சியான 5ஜி, அடுத்த ஆண்டின் இறுதியிலோ அல்லது 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ அறிமுகமாகும் என்று கணிக்கப்படுகிறது.
மருத்துவத் துறை, பிற தொழில் துறையினர் என்று பல்வேறு தரப்பினர் இப்போதே 5ஜி தொழில் நுட்பத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர். 
இணைய வசதியை பரவலாகவும் சாமானிய மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் மொபைல் இணைய சேவைக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், தரைவழி மூலமாக பதிக்கப்படும் பிராட்பேண்ட் சேவைக்கு நிகரான வேகத்திலும் தரத்திலும் மொபைல் இணைய சேவை இயங்கவில்லை என்ற குறை வாடிக்கையாளர்களுக்கு உண்டு. அதேபோல, ஒரே இடத்தில் பல வாடிக்கையாளர்கள் மொபைல் இணைய சேவையைப் பயன்படுத்தும் பட்சத்தில் வேகம் மட்டுப்படவும் வாய்ப்புண்டு. 5ஜி சேவை இந்தக் குறைகளைப் போக்கும் விதமாக அமையும்; அதிக கொள்ளளவு கொண்ட கோப்புகள், தகவல்களை செல்லிடப்பேசி வழியாகவே மிக வேகமாக அனுப்ப முடியும் என்று மின்னணுவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய ஸ்மார்ட்போன் யுகத்தில் வங்கி சேவை, நமது அன்றாட அலுவல் தொடர்பான ஏராளமான சேவைகள், தகவல்கள் விரல் நுனியில் கிடைக்கின்றன.
பெருநிறுவனங்களின் இயக்குநர் கூட்டங்களைக் கூட காணொலி (விடியோ கான்ஃபரன்சிங்) மூலமாக நடத்த முடிகிறது. கடைகளில் பொருள்களை வாங்குவதற்கும் பெட்ரோல் நிரப்புவதற்கும் கூட ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன. கணினி பயன்பாடும், டிஜிட்டல் மயமாதலும் மேலும் பரவலாகப் போகிறது. அதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பும் மேம்படுத்தப்பட வேண்டும். 
இந்த நிலையில்தான், 5ஜி தொழில்நுட்பம் வருகிறது.
5ஜி சேவையில் மின்னணுப் போக்குவரத்து சீரானதாகவும், மிகவும் திறன் வாய்ந்ததாகவும் இருக்கும். தற்போதைய சேவைகளை விட மிகவும் இது நுட்பமானது. இதனால், இணைய சேவைகளில் ஏற்படும் தாமதம் வெகுவாகக் குறையும். அதிக நம்பத்தன்மை கொண்டதாகவும் அதிக பாதுகாப்பு கொண்டதாகவும் இயங்கும். இணைய சேவையை இன்னும் பரவலாகவும், அதே நேரத்தில் ஆழமாகவும் விரிவுப்படுத்தும். தரைவழி பிராட்பேண்ட் சேவைக்கு நிகரான சேவையாக மொபைல் இணைய சேவையும் உருவெடுக்கும். 
மேலும், 5ஜி செல்லிடப்பேசிகள், பல தரப்பட்ட இணைய சேவைகளையும் பயன்படுத்துவதற்கான பாலமாக அமையும். அதைப் பற்றி பின்னர் பார்க்கலாம்.
5ஜி சேவை ஒரு விநாடிக்கு 20 ஜிபிபிஎஸ் வேகத்தில் தகவல் போக்குவரத்தைக் கையாளும் திறன் உள்ளது. தற்போதைய இணையதள சேவை வேகத்துடன் ஒப்பிடுகையில் 5ஜி 100 மடங்கு வேகத்துடன் இயங்கக் கூடியது. ஒரு விநாடிக்கு குறைந்தபட்சம் 100 எம்.பி.க்கு மேல் தகவல்களைப் பதிவிறக்கம் முடியும்.இதன் மூலம், தடையற்ற இணைய வசதி சாத்தியமாகும். 
ஆனால் வெறும் செல்லிடப்பேசி அரட்டை, கேளிக்கைகளுக்கு மட்டும் இந்தத் தொழில்நுட்பத்தை உபயோகிக்காமல் வேறு பல பயனுள்ள வேலைகளிலும் ஈடுபடுத்தலாம்.
இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐ.ஓ.டி.) என்னும் வீட்டு சாதனங்கள், அலுவலக சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி செல்லிடப்பேசி மூலம், ரிமோட் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் கட்டுப்படுத்துவது, கண்காணிப்பது என்கிற தொழில்நுட்ப யுகம் தொடங்கியுள்ளது.
வீடுகளில், மின் விசிறி, மின் விளக்கு, ஏசி, ஃபிரிட்ஜ், தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, அலுவலகப் பணி என எல்லாவற்றையும் இணைத்துப் பயன் பெறலாம்.
ஐ.ஓ.டி. செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில் அதி நவீன ஏசி. ஃபிரிட்ஜ், மின் விசிறி போன்ற வீட்டு உபயோக சாதனங்களை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டனர்.
இதனை சாத்தியமாக்குவதில் 5ஜி முக்கியப் பங்காற்றப் போகிறது.
மருத்துவம், கல்வி, தானியங்கி வாகனங்கள், ரோபோட்டுகள், தொழிற்சாலை இயந்திரங்கள், போக்குவரத்து என பல்வேறு துறையினருக்கும் 5ஜி சேவை மிகவும் பயனளிப்பதாக இருக்கும். அதேபோல, பொலிவுறு நகரங்கள், பொலிவுறு இல்லங்கள், அளவு மதிப்பீட்டு சாதனங்கள், ரிமோர்ட் மூலம் இயங்கும் இயந்திரங்கள், வாகனங்களை இயக்குதல் என பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களுக்கு 5ஜி அடிப்படையாகத் திகழப் போகிறது.
5ஜி திறனை எதிலெல்லாம் புகுத்தி, எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது.
இந்தியாவைப் பொருத்தவரையில், 5ஜி சேவை 2019-ஆம் ஆண்டில் அறிமுகமாகும் என்று கூறலாம். உடனடியாக நம் கையில் உள்ள செல்லிடப்பேசிக்கு அது வருகிறதோ இல்லையோ, தொழில்துறையில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது. அந்த வகையில் நாமும் அதன் பயனைப் பெறலாம்.
இந்த தொழில்நுட்பத்துக்கான சோதனைகளை பிஎஸ்.என்.எல். நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மேற்கொண்டுள்ளது. ஏர்டெல், ரிலையன்ஸ், டொகோமோ போன்ற தனியார் நிறுவனங்களும் அதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள்ளன. அடுத்த ஆண்டில் 5ஜி சேவைக்கான ஏலத்தை மத்திய அரசு நடத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.
5ஜி சேவையின் அறிமுகம் பொருளாதாரத்துக்கு நிச்சயமாக உதவும். இப்போதே தொலைத் தொடர்பு என்பது அன்றாட மனித வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் தொட்டிருக்கிறது.
பல்வேறு வீட்டுப் பொருள்கள் வரை அந்தத் தொழில்நுட்பம் பரவும்போது அதன் தேவை, உற்பத்தி அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
உலக அளவில் புதிய தொழில்நுட்பத்தில் அமைந்த சாதனங்கள் துறையில் 12 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 5ஜி சாதனங்கள் உற்பத்தி, கட்டுமானம், பொறியியல் மேம்பாடு ஆகிய பிரிவுகளில் முதலீடு நடைபெறும்.
இத் தொழில்நுட்பம் 2.2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்கிறது ஓர் ஆய்வு. செல்லிடப்பேசி துறையில் மட்டும் 1.2 கோடி வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகும்; அந்தத் துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும்.
வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மட்டும் 85 சதவீத வாடிக்கையாளர்களுக்கு 4ஜி வசதி இருக்கும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இது, அடுத்த கட்டமான 5ஜி சேவைக்கு இயல்பாகவே நகரும் என்று கணிக்கப்படுகிறது.
-சந்திர. பிரவீண்குமார், டி.எஸ்.ஆர்.

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...